Monday 30 June 2014

என்னோடு நான் - சிகரம்பாரதி [ வலைச்சரம் - 01 ]

                       வலைச்சரம் ஆசிரியப்பணி இன்றோடு துவங்குகிறது. இன்று அதிகாலை அறிமுகப்பதிவை இட்டேன். நாளை முதல் வலைத்தளங்களையும் வலைப்பதிவர்களையும் அறிமுகம் செய்ய வேண்டும். வலைச்சரத்தில் இவ்வாரம் என்னால் எழுதப்படும் சகல இடுகைகளினதும் இணைப்புகளும் சிறுகுறிப்பும் இந்த வலைத்தளத்தில் நாள்தோறும் வெளியிடப்படும். இதன் மூலம் " சிகரம் " வாசகர்கள் எனது பதிவுகளைப் பின் தொடர வசதியாக இருக்கும்.

வலைச்சரம் - 01.

என்னோடு நான் - சிகரம்பாரதி.

"சிகரம்பாரதி" ஆகிய என்னை அறிந்தவர்கள் சிலர், அறியாதவர்கள் பலர். பாடசாலைக் காலகட்டத்தில் "சிகரம்" என்ற கையெழுத்து சஞ்சிகை வாயிலாகவும் தொடர்ந்து இலங்கையின் தேசிய நாளேடுகள், சஞ்சிகைகளுக்கும் எழுதி வந்தேன். பின்பு வலைத்தளத்தின் பக்கம் "தூறல்கள்" வலைப்பதிவின் வாயிலாக கால் பதித்தேன். "சிகரம்" வலைப்பதிவின் ஊடாக என்னை நிலை நிறுத்தினேன். இன்று "சிகரம்3" உடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்........


முழு இடுகையையும் வாசிக்க " வலைச்சரம்" செல்லவும்.


எனது ஆசிரியப் பணி இனிதே அமைய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

நன்றிகளுடன்,

சிகரம்பாரதி.

வலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல்.





"வலைச்சரம்" பற்றி அறியாத யாருமே தமிழ் வலைப்பதிவர்களாக இருக்க முடியாது. புதிய வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்துதல், வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை அளிப்பதன் மூலம் ஆசிரியராக வருபவரின் வலைத்தளத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தல், வலைப்பதிவுகளையும் இடுகைகளையும் பிறர் அறிய வாய்ப்பளித்தல் என பல சேவைகளை வலைச்சரம் ஆற்றி வருகிறது.









வாரம் ஒரு ஆசிரியர் தனக்குப் பிடித்த , தான் அறிந்த வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வார். அந்த வகையில் பலரும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்காக காத்து நிற்கும் இந்த வேளையில் "சிகரம்பாரதி" ஆகிய என்னைத் தேடி வலைச்சர ஆசிரியர் பொறுப்பு வந்திருக்கிறது. 30.06.2014 முதல் தொடங்கும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்கும் நான் 06.07.2014 வரை வலைச்சரம் ஆசிரியராக எனது கடமையை ஆற்றவுள்ளேன்.









இதுவரை மூன்று முறை வலைச்சரம் சார்பாக அறிமுகம் பெற்றுள்ள நான் இன்று ஏனையோரை அறிமுகம் செய்யக் கிடைத்தமை மிகப்பெரும் பாக்கியமாகும்.

என்னை அறிமுகம் செய்த பதிவுகள் இவைதான்.

நான் வாசிப்பவர்கள்...

புத்தம் புது காலை

வீட்டில் தோட்டம் , சாலையில் பணம்!!!

வலைச்சர ஆசிரியப் பணிஏற்கவுள்ள நான் பின்வருமாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளேன்:

"நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க சிகரம் என்னும் தளத்தில் எழுதி வரும் சிகரம் பாரதி இணக்கம் தெரிவித்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

துரைசாமி லெட்சுமணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சிகரம்பாரதி ஆகிய இவரது பிறப்பிடம் இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமான மலையகத்திலுள்ள கொட்டகலை என்னும் இடமாகும். தரம் 13 வரை கல்வி கற்றுள்ள இவர் பல்கலைக்கழக

வாய்ப்புக் கிடைத்தும் அதை ஏற்காமல் கொழும்பிலுள்ள ஈஸ்வரன் என்னும் தனியார் தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தில் மூலப்பொருள் கட்டுப்பாட்டாளர் உதவியாளராக [Material Controller Assistant] பணி புரிந்து வருகிறார்.

தமிழகத்தில் இருந்து 200 வருடங்களுக்கு முன்னாள் இலங்கையில் தேயிலைப் பயிர்ச் செய்கையை விருத்தி செய்வதற்காக கூலிகளாக அழைத்து வரப்பட்ட இவரது சமூகத்தின் அவலத் துயர் துடைத்து சமூகத்தை முன்னேற்றுவதே இவரது வாழ்நாள் இலட்சியமாகும். 2012 முதல் வலைப்பதிவுகளை எழுதி வருகிறார். . அரசியல்,இலக்கியம், விளையாட்டு, நகைச்சுவை , சுயமுன்னேற்றம் என பன்முகப்பட்ட விடயங்களையும்
பலித்து வருகிறது.


சிகரம்பாரதி" என்னும் பெயரிலேயே பலராலும் அறியப்பட்டுள்ள இவர் அப்பெயரிலேயே தொடர்ந்தும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என எண்ணுகிறார்.

இலங்கையின் பல்வேறு தேசிய தமிழ் நாளிதழ்கள் சஞ்சிகைகளில் இவரது
எழுத்துக்கள் பிரசுரமாகியுள்ளன.
இவரைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு:

அகவை ஒன்பதில் சிகரம்!
http://newsigaram.blogspot.com/2014/06/agavai-onbadhil-sigaram.html#.U6R3kLFGMi4


” சிகரம் “ வலைப்பூ பதிவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்....
 

நல்வாழ்த்துகள் சிகரம் பாரதி ."

                    வேலை மற்றும் பல்வேறு சிரமங்கள் காரணமாக இதுவரை எந்தவொரு தயார் படுத்தலும் இல்லை. இறைவன் தான் சாரதியாக இருந்து இப்பயணத்தை வழிநடத்திக் கொடுக்க வேண்டும். வலைத்தள நண்பர்களாகிய நீங்களும் தினமும் வலைச்சரம் வந்து வாழ்த்த வேண்டும் , குறை நிறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
இப்படிக்கு,
அன்புடன்,

சிகரம்பாரதி.

Friday 27 June 2014

இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு!

இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு!

வணக்கம் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்களே! இப்பதிவு உங்களின் முக்கிய கவனத்திற்குற்பட வேண்டும் என விரும்புகிறேன். "சிகரம்" இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவுகளின் விபரங்களைத் திரட்ட மற்றும் ஆவணப்படுத்த எண்ணியுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் அவர்களை அறிந்தவர்களிடமிருந்து உதவி கோரப்படுகிறது.


உங்கள்  அல்லது நீங்கள் அறிந்த இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளை பின்வரும் விபரங்களுடன் எமக்கு அனுப்பி வையுங்கள்.

வலைப்பதிவு முகவரி:
வலைப் பதிவர் பெயர்:
வலைப் பதிவின் பெயர்:
வலைப்பதிவு விளக்கம்:
ஆரம்பிக்கப்பட்ட திகதி:
சொந்த இடம்:
தற்போதைய வசிப்பிடம்:

அனைத்து விபரங்களையும் பின்னூட்டம் மூலமாகவோ , இவ்வலைத்தளத்தின் வலது பக்கப்பட்டியிலுள்ள "அஞ்சல் பெட்டி" ஊடாகவோ அல்லது மேல்பக்கப் பட்டியிலுள்ள "தொடர்புகளுக்கு" இல் உள்ள விபரங்களினூடாகவோ அனுப்ப முடியும். 30.06.2014 க்கு முன்னர் முடிந்தவர்கள் அனுப்பி வைக்கவும். ஆனால் இது இறுதித் திகதி அல்ல.


இம்முயற்சியில் இணைந்துகொள்ள / கைகோர்க்க விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.

அனுப்பப்படும் மடல்கள் யாவும் "இலங்கைத் தமிழ் வலைப்பதிவுத் திரட்டி - சிகரம்" என தலைப்பிடப்படல் வேண்டும்.

அறியப்படாத / வெளிக்கொணரப்படாத இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் வரலாற்றுப் பக்கங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவோம்.

Wednesday 25 June 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06


 


 

பகுதி - 03


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 




பகுதி - 04


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04


பகுதி - 05


கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05 








பகுதி - 06




திவ்யாவைப் பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் நான் "ஹலோ" என்றேன். ஆனால் மறு முனையில் பதில் இல்லை. ஓரிரு வினாடிகளில் இணைப்பு துண்டிக்கப் பட்டது. இணைப்புக் கோளாறா அல்லது நான் பேசவில்லை என்று இணைப்பைத் துண்டித்து விட்டாளா என்பதை அறிந்து கொள்வதற்காக நான் நந்தினிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன். வாடிக்கையாளரின் தொலைபேசி இலக்கம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக ஒரு பெண் குரல் சொல்லிப் போனது.

'ஒரு வேளை இது திவ்யா - நந்தினி யின் விளையாட்டாக இருக்குமோ?' என்று கூட என் மனம் யோசித்தது. நாம் ஒன்று நினைத்தால் நடப்பது வேறொன்றாக அல்லவா இருக்கிறது?

'இது திவ்யாவின் விளையாட்டாக இருந்தால் இந்த பெண் பார்க்கும் படலம் இடம்பெற்றே இருக்காதே? ஆமாம். ஆனால் திவ்யாவுக்கும் நந்தினிக்கும் என்ன உறவு? நந்தினி சொன்னது உண்மையாக இருக்குமா? அதை எப்படித் தெரிந்து கொள்வது? எனது தொலைபேசி இலக்கத்தை திவ்யாதான் கொடுத்தாளா? அல்லது வேறு யாரும் இருக்கக் கூடுமா?' - என்று என் மனதினுள் பலவாறான கேள்விகள் மாறி மாறி எழுந்த வண்ணமிருந்தன. 


ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. திவ்யா - நந்தினி குடும்பத்தினருக்கிடையில் ஏதோ ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கிறது. அது எது என்பது தான் புதிராக இருக்கிறது.




'ஆமா... திவ்யாவோட அம்மா அப்பா இன்னிக்கு அங்க வந்திருக்கலையே...... நமக்குத்தான் அவங்கள தெரியுமே....? இத நாம முன்னமே யோசிக்கலையே?' - மனம் இப்போது தான் இதை மீட்டெடுத்திருந்தது. வர வர குழப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறதே தவிர குறைவதாயில்லை.

'நாளை திவ்யாவை சந்தித்தால் எல்லாம் தெரிந்துவிடப் போகிறது. அதுவரை பொறுத்திருப்போம்.' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாலும் மனம் அதையெல்லாம் பொருட்படுத்துவதாயில்லை. இன்றைய இரவின் சிறைக் கைதி நான்தான் போலும். மிகக்குறுகிய நேரத்தில் வாழ்க்கை எப்படியெல்லாம் திசைமாறிப் போகிறது? பலநேரங்களில்  மிகக்குறுகிய கால அவகாசத்தில் தான் எனது தீர்மானங்களை எடுக்கும்படிக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன். ஏன் எனது காதலின் முடிவைத் தீர்மானிக்கும் சமயத்தில் கூட. இப்போதும் அதே நிலைதான்.

ஆனால் இன்றாவது கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை கைவசம் வைத்திருக்கிறேன். ஆனால் அன்று? வேண்டாம்.... வேண்டவே வேண்டாம்.... அதைப்பற்றி நினைத்தாலே உடல் ஒருமாதிரி சிலிர்த்துக் கொள்கிறது. கண்கள் குளமாகின்றன. மனதைக் கல்லாக்கிக் கொண்டு விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு நேரத்தைப் பார்த்தேன்.

இரவு ஒன்பது மணி! இரவு உணவுக்கான நேரம். அத்தனை நினைவுச் சுமைகளுக்கு மத்தியிலும் அம்மாவின் சாப்பாட்டு வாசனை மூக்கைச் சற்று பதம் பார்க்கத்தான் செய்தது. திவ்யாவும் நன்றாகச் சமைப்பாள். எதையாவது புதிதாக ஒரு பெயரைச் சொல்லிக் கொண்டு அதைக் கொண்டு வருவாள். அந்தப் பெயர் வாய்க்குள் நுழைவதே இல்லை. ஆனால் அந்த புதிய சமையல்...... அப்படி ஒரு அருமை.



"திவ்யா...... உன் கைப்பக்குவத்துக்கு ஒரு கைக்காப்பு செஞ்சு போடலாம்னு இருக்கேன்...."



"என்ன கிண்டலா?"



"இல்ல... நிஜமாத்தான். அசத்திட்ட...."



தலையைக் கீழே குனிந்துகொண்டு தன் முகத்தில் வெட்கம் படர மென்மையாய்ப் புன்னகைத்தாள்.



"காப்பெல்லாம் வேணா... நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும்...."



"கண்டிப்பா....."



இந்நிகழ்ச்சி நடந்து மூன்றாண்டுகளாவது இருக்கும். இன்றோ இருவரும் பிரிவின் கைதிகளாய்.....



எங்கள் 'பிரிவு' என்னும் குழந்தைக்கு இன்று பிறந்தநாள். எப்படியோ சரியாக இரண்டாண்டுகள் உருண்டோடிவிட்டன. நிச்சயதார்த்தத்தில் வைத்து திவ்யாவைக் கண்டதும் இது என் நினைவுக்கு வந்தது. அப்போது ஏதோ ஒரு உணர்வு நெஞ்சை அப்படியே கசக்கிப் பிழிந்தது போலிருந்தது. அதே தினத்திலேயே மீண்டும் சந்தித்திருக்கிறோமே? காலம் 'பிரிவு' என்னும் எங்கள் குழந்தையை காலனுக்கு காணிக்கையாக்க முடிவு செய்து விட்டதோ?
அம்மா உணவு உண்ண அழைத்ததும் ஒரு செயற்கை இயல்பு நிலையை எனக்குள் வரவழைத்துக் கொண்டு அனைவருடனும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். தொண்டைக்குள் இறங்க மறுத்த உணவை கட்டாயப் படுத்தி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தேன். சாப்பிடும் போது நாங்கள் எதுவும் கதைப்பதில்லை. அது அப்பாவுக்கு பிடிக்காது. எங்களுடனேயே அம்மாவும் சாப்பிட்டுவிடுவார். எல்லோரும் சாப்பிட்டானதும் எனது அறைக்கு நான் திரும்ப எத்தனித்த வேளை "என்னண்ணா...... பொண்ணப் பத்தி எதுவுமே சொல்லாம போற?" என்று குறும்பாகக் கேட்டாள் தங்கை நிவேதிதா.


அதிர்ச்சியில் ஒரு கணம் நான் உறைந்தே போனேன். 'இவங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே' என்று குழம்பி நின்றேன்.

"மௌனம் சம்மதம்னு எடுத்துக்கலாமா?" - நிவேதிதா தன் பிடியை விடுவதாயில்லை.

"அதப் பத்தி இன்னும் யோசிக்கல....." தயங்கியவாறே சொன்னேன் நான்.

"இதப் பாருப்பா... யோசிக்கிறேன்னு சொல்லியே காலத்தைக் கடத்திடலாம்னு நினைக்காத. இந்த தடவை ஒரு முடிவ சொல்லிரு. இந்தக் கிழமைக்குள்ள சொன்னாத்தான் நல்ல நாளெல்லாம் பார்க்க வசதியாயிருக்கும். அதுவுமில்லாம சீக்கிரமா ஒரு முடிவ சொன்னாத்தானே நல்லாருக்கும்?" அம்மா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். செய்வதறியாது குழம்பிப் போனேன் நான்.
"சரிப்பா.... நல்லா யோசிச்சிட்டு உன் முடிவ சொல்லு. களைப்பா இருப்ப.... இப்ப போய் தூங்கு" என்று அப்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளியைத் தந்தார் அப்பா.


"சரிப்பா" என்றபடி என் அறைக்குள் வந்து கதவைச் சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தேன். மனம் கடலலையென கொந்தளித்துக் கொண்டிருந்தது. இரவின் சிறைக்குள் நினைவுகள் என்னும் வேலிகளிட்டு பூட்டப்பட்டேன் நான். காவல் செய்த களைப்பின் மிகுதியில் இரவும் நினைவுகளும் சற்றுக் கண்ணயர்ந்ததொரு பொழுதில் சற்றே உறங்கிப் போனேன் நான்.
**********


"கல்யாண வைபோகம்" தொடரினை "சிகரம்" வலைத்தளத்தில் தொடர...







பகுதி - 01





பகுதி - 02






 

 

"கல்யாண வைபோகத்தினை" இனிதே நடத்திட கைகோர்த்திடுங்கள் .

-இரு வீட்டார் அழைப்பு-

இன்றைய நாளேடுகளின் கேலிச்சித்திரங்கள்!


  


 


 


 



Hilarious political cartoon images 


    


  


இன்றைய நாளேடுகளின் கேலிச்சித்திரங்கள்!
நன்றி: நாளேடுகள்.

Monday 23 June 2014

கலைஞர் 91 - வைரமுத்து சிறப்பு நேர்காணல்!

 

மிழுக்குப் புது நிறம் கொடுத்தவர். வசீகரச் சொற்களால் தமிழன்னையின் ஆடையை மட்டுமல்ல; அவளையே புதிதாக்கியவர். இவர், வியப்புக் காடாய் விரியும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்.

இவரது திரைப்பாடல்கள், வறண்ட செவிகளையும் இலக்கிய மழையில் நனைத்து, அவைகளுக்கு ருசி உணர்வை உண்டாக்கின. இவரது "தண்ணீர் தேசம்', "கருவாச்சி காவியம்', "மூன்றாம் உலகப்போர்' போன்ற ஆக்கங்கள், வாழ்வியலிலின்மீது கொண்ட அக்கறையால் உருவான உன்னதப் புதினங்களாகும்.

இவரது காந்தக்குரலும், மேன்மைமிகும் மேடைகளில் கவித்துவமாய்த் தமிழை ஆண்டு கொண்டிருக்கிறது.

"கள்ளிக்காட்டு இதிகாசம்' படைப்புக்காக "சாகித்ய அகாடமி' விருதையும், திரைப்பாடல்களுக்காக ஆறுமுறை தேசிய விருதுகளையும் பெற்ற இவரைத்தேடி, இந்த ஆண்டு பத்மபூஷண் விருதும் பரவசமாய் ஓடிவந்தது. நோபல் பரிசை நோக்கி நகரும் இவரது இலக்கியப் பயணம், கம்பீரம் இழக்காமல் களைகட்டிக் கொண்டிருக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞரோ, பிரமிப்புகளைத் தேக்கி வைத்திருக்கும் தமிழின் பிரபஞ்சப் பெருவெளி. 91-ஐத் தொடும் கலைஞரை உளமார வாழ்த்துவது இலக்கிய உலகின் இதயப்பூர்வமான கடமை.

அவ்வகையில், கலைஞரின் காதலுக்குரியவராகவும் கலைஞரின் ஆத்மார்த்தமான இலக்கிய நண்பராகவும் திகழும் கவிப்பேரரசரை, கலைஞரைக் குறித்த கேள்விகளோடு சந்தித்தோம்.

கேள்விகளைக் கேட்ட நொடியிலேயே, கவிப்பேரரசின் வாயிலிலிருந்து வார்த்தைகள் கவித்துவமாகப் பிரவாகமெடுத்தன. வார்த்தைகள் பூக்களாய் மலர்ந்தன. அவற்றில் நறுமணம் கசிந்தது.

இருபது நிமிடம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட நேர்காணல், உணர்ச்சியின் உத்வேகத்தால் முக்கால் மணி நேரத்துக்கும் மேலாய் நெகிழ்வாய் நீண்டது.

வைக்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும், உற்சாகமாகவும் கம்பீரமாகவும் விடைதந்தார்.

வரும் ஜூலை 13-ல் மணிவிழா காண இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் சிகரப் பேட்டி இதோ....

கலைஞர் என்ற சொல்லைக்கேட்ட மாத்திரத்தில் உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் என்ன?


வேறு எந்தத் தனிமனிதருக்கும் அல்லது தலைவருக்கும் இல்லாத ஒரு பேராற்றல் கலைஞரிடம் இருப்பதைப் பார்த்து நான் திகைக்கிறேன். எழுத்து, சொல், செயல், இந்த மூன்றிலும் செப்பம்- மூன்றிலும் ஒரு நுட்பம்- மூன்றிலும் ஒரு தனி பாணி- இந்த மூன்றும் இயைந்து நிற்கும் பேராற்றல் கலைஞரிடம் இருப்பதுபோல், சமகாலத்தில் யாரிடமும் நான் கண்டு வியந்ததில்லை. மேலும் கலைஞரை அவரது தீராத உழைப்பில் நான் வியக்கிறேன்.

கலைஞரின் இலக்கிய சாதனைகள் குறித்து?


தமிழ் இலக்கியம் என்பது புலவர்களுக்கு, பண்டிதர்களுக்கு மேட்டுக்குடி மக்களுக்கு அல்லது புலமையின் பொழுதுபோக்குக்கு என்று இருந்த நிலையை முதலில் மாற்றியவன் மகாகவி பாரதி. அதற்குப் பிறகு தமிழ் இலக்கியத்தை வீதிக்குக் கொண்டுவந்தது திராவிட இயக்கம்.

அப்படி வீதிக்குக் கொண்டுவந்த முதல் மனிதர்; பேச்சால் அண்ணா. எழுத்தால் அண்ணா. திரையுலகில் அண்ணா. இதைத் தொடர்ந்து முழுமைசெய்தவர் கலைஞர்.

தமிழ், இன, மொழி அடையாளங்களை மீட்டெடுத்ததில் அவருடைய பங்கு அளப்பரியது. சிலப்பதிகாரத்தை அவர் நவீனப்படுத்தியபிறகுதான் தமிழனுக்கென்று ஒரு மகாகாவியம் உண்டு என்பதைத் தமிழனம் உணர்ந்தது.

தமிழினத்திற்கு வெளியேயும் அது உணரப்பட்டது. சங்க இலக்கியத்தை எளிமை செய்தல், பழைய மரபுகளை மீட்டெடுத்தல் என அவரது தேர் ராஜபாட்டையில் நகர்ந்தது.

தொல்காப்பியத்திற்கு உரையாக, தொல்காப்பியப் பூங்கா என கவிதை வடிவில் அவர் எழுதியதையும் நான் பெரிதும் வியக்கிறேன். ஏனென்றால் தொல்காப்பியம் என்பது புலவர்களால்கூட தொடமுடியாத உயரத்தில் இருப்பது.

இலக்கணம்போல் ஓர் இலக்கியம் என்று சொல்லவேண்டும் தொல்காப்பியத்தை. இலக்கியம்போல் ஓர் இலக்கணம் என்று சொல்லவேண்டும் திருக்குறளை. இந்த இரண்டுக்கும் அவர் எழுதிய உரைகள் பொதுமக்கள் மத்தியில் அவைகளைக் கொண்டு சென்றன. இந்தப் பெருமை கலைஞருக்குதான் உண்டு. புலவர்களும் பண்டிதர்களும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் இந்தப் பணியை ஆற்றியிருந்தால் அது மாணவர்களை மட்டுமே சென்று அடைந்திருக்கும்! மாணவர்களைத் தாண்டி மக்களை இவை சென்று அடைய வேண்டுமென்றால் அதற்கு முகம் வேண்டும். அந்த முகம் கலைஞருக்கு இருந்தது. அதை எடுத்துச் சொல்லும் திறன் வேண்டும். அந்தத் திறன் கலைஞருக்கு இருந்தது. அதை எடுத்துச் சொல்ல ஒரு தளம் வேண்டும். அந்தத் தளமும் இயக்கம் என்ற பீடமாகக் கலைஞருக்கு அமைந்தது. இது எல்லாருக்கும் வாய்க்காது. பிறகு, திரையுலகில் அவர் எழுதிய வசனங்களை அசை பிரித்தால் புதுக்கவிதை என்று சொல்லத்தோன்றுகிறது.

அவருடைய பழைய பராசக்தியையும் பழைய மனோகராவையும் திரும்பிப் பார்த்தால் அங்கே புதுக்கவிதை வீச்சுக்களை நம்மால் காணமுடிகிறது. கலைஞருடைய வசனங்களில் ஊளைச்சதையற்ற வார்த்தைகளை நான் பார்த்தேன். அலங்காரங்கள்கூட அர்த்தத் தோடு இருக்கவேண்டும்.

அடைமொழியை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது என்று கவிஞர் சுரதா சொல்லுவார். தாமரை என்று சொல். செந்தாமரை என்று சொல்லுகிறபோது சிவப்பு என்ற அடையை அனாவசியமாகப் பயன்படுத்தாதே என்று அவர் சொல்லுவார். அடைமொழியைக்கூட அளந்து, அர்த்தத்தோடு பயன்படுத்திய ஆற்றல் கலைஞரிடம் உண்டு. என்றைக்கோ அவர் எழுதிய உரைநடைகள் இன்றைக்கும் எடுத்தாளப்படுவது ஆச்சரியமில்லையா?

தமிழ் இலக்கியத்தில் வெண்பாக்களும் விருத்தங்களும் பழமொழிகளும் மேற்கோள் காட்டப்படுவது இயல்பு.

எந்த ஒரு மேற்கோள் வடிவமானாலும் அது செய்யுள் என்ற பாத்திரத்திற்குள் செப்பமாக உட்கார்ந்திருக்க வேண்டும்.

 செய்யுள் என்ற பீடத்தில் இருக்கிற அல்லது யாப்பு என்ற கட்டமைப்பில் இருக்கிற சொற்களை மட்டும்தான் தமிழன் மேற்கோள் காட்டுவான். முதன்முதலில் உரைநடை மேற்கோள்காட்டப்பட்டது என்றால் அது கலைஞருடைய உரைநடைதான்.

"ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்' என்று கலைஞர், பராசக்தியில் எழுதினார். பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தின் உயரமான பெண்ணும், உயரமான பெண்களில் துயரமான பெண்ணுமான டயானா இறந்தபோது, ஒரு பத்திரிகை அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டது "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்' என்று.

எழுதப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பின்னும், ஒரு உலக நிகழ்வுக்குத் தலைப்பாக அமையக்கூடிய எழுத்து கலைஞரின் எழுத்து. அது ஆச்சரியமில்லையா? இன்னும் சொல்லலாம். அவர் ஆற்றல் ஒரு பேட்டிக்குள் முடிகிற பொருளல்ல, ஒரு கிளிஞ்சல் கொண்டு கடலை இறைத்துவிட முடியாது.


ஒரு திரைப்படப் பாடலாசிரியராக இருந்து, கலைஞரின் திரைப்பாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?


கலைஞர், திரைப்படப் பாடல்களை அளந்து எழுதியிருக்கிறார். அதிலும் அழகாக எழுதியிருக்கிறார். எண்ணிக்கையில் குறைவாக எழுதியிருக்கிறார். ஆனால் எண்ணங்களில் வலிமையாக எழுதியிருக்கிறார்.

"பூமாலை நீயே', பாடலில் நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வத்தைக் கொண்டு வந்து, திராவிட இயக்க முத்திரையைப் பதித்திருக்கிறார். வசனங்களில் தனது சமகாலத் தோழர்களின் பெயர்களைப் பதிவு செய்து பாசத்தைக்காட்டியிருக்கிறார்.

சேரன் செங்குட்டுவன் வசனத்தில்,

"அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள். ஆசைத்தம்பி இளங்கோ உன்னை இகழ்ந்தார்கள். நெடுஞ்செழியப் பாண்டியரே உன்னை இகழ்ந்தார்கள், என்றெல்லாம் தன் சமகாலத் தோழர்களை இலக்கியத்திற்குள் கொண்டுவரும் பெருந்தன்மை அவருக்கு இருந்தது.

அதே பாணியைத்தான் நான் முன்னர் தொட்டுக்காட்டிய "பூமாலை நீயே' பாட்டில் கையாண்டார். அவருடைய பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது "வாழ்க்கை எனும் ஓடம்' ஆகும். அது பாட்டல்ல. பாடம்.' ஒருமுறை சில அரசு அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். எய்ட்ஸ் தடுப்பு குறித்து சில வரிகள் எழுதித்தர முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள். நான் சொன்னேன்... "கலைஞரை முதலமைச்சராக வைத்துக்கொண்டு என்னிடம் வந்து இதற்கு வரிகள் கேட்கிறீர்களே, அவர் எழுதிய வரிகளே பொருத்தமாக இருக்குமே. வருமுன் காப்பவன்தான் அறிவாளி அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி என்ற கலைஞரின் வரிகளை எழுதிக் கொள்ளுங்கள்' என்றேன். சிரித்துக்கொண்டே எழுதி வாங்கிக்கொண்டு போனார்கள். இப்படி எல்லாத் துறைகளுக்கும் இவரது பாட்டு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.

காஞ்சித்தலைவனில் ஒரு பாட்டு எழுதியிருப்பார்.
"மகிமைகொண்ட மன்னரின் மீது எதிரிகளின் கால்கள்!
மலர் பறிப்ப தில்லையடா வீரர்களின் கைகள்'

இவையெல்லாம் தமிழனுக்கு உணர்ச்சி கொடுத்த உயிர்ப்பான வரிகள்- குறைவாக எழுதினாலும் நிறைவான கருத்துக்களோடு திகழுகின்றன கலைஞருடைய பாடல்கள்.

கலைஞரை எப்போது, எந்த வயதில் எவ்விதமாக அறிந்தீர்கள்? அவரை எப்போது முதன்முதலாகச் சந்தித்தீர்கள்?


கலைஞரை நான் உணர்ந்துகொண்டது சின்ன வயதில். எனக்கு அப்போது பன்னிரண்டு பதின்மூன்று வயதிக்கும்! என் சித்தப்பா பாண்டித்தேவர், பெரியகுளத்தில் இருந்து வாங்கி வந்த பராசக்தி வசனப் புத்தகம் அந்த வயதில் என் மடியில் விழுகிறது. பராசக்தி வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். கலைஞர் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தபோது நான் இரண்டுநாள் குழந்தை. நான் பிறந்து பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள், தமிழ்ச் சமூகத்தில் "பராசக்தி' ஊடறுத்துப் பயணம் செய்துகொண்டிருந்தது. ஐம்பது அறுபதுகளில் பிறந்த, படிக்கத்தெரிந்த கலைஞர்கள் அனைவரும் கலைஞரின் "பராசக்தி', "மனோகரா'வில் மனம் பறிகொடுக்காமல் இருந்திருக்க முடியாது. அன்றைக்கிருந்த தலைமுறைக்கு ஒரு தமிழ் ஊட்டம் கிடைத்தது என்று சொன்னால் அது கலைஞரின் வசனங்களால்தான்.

கலைஞரின் விரலும் சிவாஜியின் குரலும்- இந்த இரண்டும் இல்லையென்றால் தமிழனுக்குக் காதுகளின் வழியாகத் தமிழ் பாய்ந்திருக்காது. "இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற பாரதியின் பாடலுக்கு கலைஞரும் சிவாஜியும்தான் உரையெழுதியவர்கள்.

கலைஞரின் தமிழை சிவாஜியின் குரலில் கேட்ட தமிழ்நாடு சிலிர்த்தது. அப்படி அறிந்தபோது யார் கலைஞர் என்ற சின்ன வயதுக் கேள்வி எனக்குள் வளர்ந்தது. நான் வளர வளர அவர்மீது ஒரு பற்று வளர்ந்தது. கலைஞர் யார்? எப்படி இருப்பார்? என்ற எண்ணம் எனக்குள் ஓடியது. "ஆறுமாதக் கடுங்காவல்' என்று ஒரு புத்தகம் அப்போது வந்தது. அதில் மீசைமுளைக்காத கலைஞரின் சின்ன வயதுப்படம் பிரசுரமாகியிருந்தது.  நான் ஆசையாக அவருக்கு  மீசை வரைந்து பார்த்தேன். அந்தப் படம் இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அண்ணா மறைந்த போது அவர் இரங்கல் கவிதை ஆற்றினார்.

அப்போது நான் பள்ளி மாணவன். எங்களூர்த் திடலில், அங்கிருந்த பஞ்சாயத்து வானொலி யின் கீழே ஊரே கூடியிருந்தது. கலைஞரின் கவிதையை அழுதுகொண்டே கேட்டோம். அந்தக் கவிதையின் தாக்கம் கலைஞரை என் இதயத்தின் மையத்தில் கொண்டுவந்து இருத்தியது.

அவரை நான் முதன்முதலாகப் பார்த்தது; பச்சையப்பன் கல்லூரியில் நான் படிக்க வந்தபோதுதான். 71-ல் நான் பி.யூ.சி படித்தபோது அவர் முதலமைச்சர்.

அப்போது பச்சையப்பன் கல்லூரியில் புலவர்கள் மாநாடு நடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை, எந்த மாணவரும் வரவில்லை. புலவர்களும் அறிஞர்களும் வந்திருந்தார்கள். நான் ஒருவன் மட்டுமே மாணவன். கூட்டமற்ற கூட்டம் அது. அங்கே கலைஞர் கம்பீரமாக  நடந்து வந்தார். நான் அவரைத் திரும்பிப்பார்க்கிறேன். அதுதான் அவர்மீது நான் பதித்த முதல் பார்வை. மேடையில் அமர்ந்தார். சொற்பொழிவு செய்தார். அந்த விழாவில் புலவர்களுக்கு ஒரு பை  வழங்கப்பட்டது. பையில் ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை என்றார்கள்.

கலைஞர் சொன்னார், புலவர்கள் வெறும் பையோடும் வெறும் கையோடும் போகக்கூடாது. அவர்களுக்கு நிதி வழங்குகிறேன் என்று ஒவ்வொரு பையிலும் 100 ரூபாய் இட்டு வழங்கச் செய்தார். கலைஞர் புறப்பட்டார். அப்போது அவர் பின்னாலேயே சென்று கார் கதவை அடைத்தேன். காவலர்கள் நின்றார்கள்.  தள்ளி நின்றுகொண்டேன். நான் வணங்கினேன். அவர் புன்னகைத்தார். நான் யார் என்று அப்போது அவருக்குத் தெரியாது. அவரின் அன்றைய புன்னகை இன்னும் என் இதயத்தின் அலமாரியில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.


கலைஞர் உங்கள்மீது வைத்திருக்கிற அக்கறை பற்றியும் நீங்கள் அவர்மீது வைத்திருக்கும் அக்கறை பற்றியும் சொல்லுங்கள்?

இது மிகவும் உணர்ச்சிகரமான உணர்வை ஏற்படுத்தும் கேள்வி. அவர் என்மீது வைத்திருக்கிற அக்கறையைப் பார்த்து திகைத்து நெகிழ்கிறேன். அவர்மீது நான் வைத்திருக்கும் அக்கறை இயல்பானது.

ஒருமுறை நான் அவரிடம் சொல்லிவிட்டு இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம்போனேன்.

இந்தோனேஷியாவில் விமான நிலையத்திற்கு நாங்கள் வந்தோம். அங்கே நானும் நண்பர் சிங்கப்பூர் முஸ்தபாவும் இந்தோனேஷியாவின் "கருடா' விமானத்தில் பயணம் செய்யப் பயணச்சீட்டு பெற்றுக்கொண்டோம். ஜகார்த் தாவில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணம். முஸ்தபாவின் உதவியாளர் மாலிக் சொன்னார்.

ஏன் இந்த விமானத்தில் போகிறீர்கள்.  இது பழைய விமானம். அதிலும் இது ஒன்றரை மணிநேரம் கழித்துத்தான் புறப்படும். அதற்கு முன்னால் சிங்கப்பூர் விமானமான "சில்க் ஏர்'  இன்னும் 20 நிமிடத்தில் புறப் படப் போகிறது. அது புத்தம் புது விமானம் என்றார். பயணச்சீட்டை மாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே சீட்டை ரத்து செய்துவிட்டு அந்த விமானத்துக்கு ஏற்பாடு செய்யட்டுமா என்றார்.  ஏற்பாடு செய்யுங்களேன் என்றார் என் நண்பர் முஸ்தபா. நான் சொன்னேன். "போர்டிங் பாஸ்' வாங்கியாகிவிட்டது. ஒரு மணி நேரம் தாமதித்துப்போனால் தப்பில்லை.

அதுவரை பேசிக் கொண்டிருப்போம் என்றேன். உதவியாளர் மாலிக் எங்களை முன்னால் சென்று வரவேற்க அந்த விமானத்தில் புறப்பட்டுப் போய்விட்டார். நாங்கள் ஒரு மணிநேரம் கழித்து இந்தோனேஷிய விமானத்தில் புறப்பட்டோம். போய் இறங்கினோம். மாலிக் எங்களை வரவேற்க வந்திருக்கவில்லை. எங்காவது தேநீர் விடுதியில் இருப்பாரோ என்று தேடினோம். கிடைக்கவில்லை. சற்று நேரத்தில் சிங்கப்பூர் விமானம் தொடர்பு எல்லையில் இல்லை என்று எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. ஒருவேளை அது மலேசியா சென்றுவிட்டு இங்கு வருமோ என்ற ஐயத்தில் நாங்களிருந்தோம். சற்று நேரத்தில் விமானம் காணக்கிடைக்கவில்லை என்ற தகவல் வந்தது. அஞ்சினோம். கொஞ்ச நேரத்தில் விமானம் எங்கோ விழுந்துவிட்டது என்று சொன்னார்கள். அடுத்த நாற்பது நிமிடத்தில் கடலில் விமானத்தின் உதிரி பாகங்களும் பொருட்களும் பிணங்களும் பணங்களும்  மிதக்கின்றன என்ற கொடுந்தகவல் வந்தது. அந்த விமானத்தில் பயணித்த ஒருவர்கூட உயிரோடு இல்லை. அந்தப் புதுவிமானம் எப்படி விபத்தைச் சந்தித்தது என்று நாங்கள் கலக்கத்தோடு விசாரித்தோம். அந்த விமானிக்குக் கடன் தொல்லை இருந்திருக்கிறது. தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். தன் தற்கொலையோடு விமானத்தையும் சாகடித்திருக்கிறார்.

இதைக்கேட்டு எங்கள் நெஞ்சு வெடித்து விட்டது. செய்தி உலகமெல்லாம் பரவுகிறது. அது தமிழ்நாட்டுக்கும் வருகிறது. அந்தச் செய்தி வந்த பதினைந்து, இருபது நிமிடங்களுக்குள் என் நண்பர்களுக்கெல்லாம் கலைஞரின் செய்தி பறக்கிறது. வைரமுத்து எங்கே என்று விசாரிக்கிறார்.

நான் இந்தோனேஷியாவில் இருந்து புறப்படும்போது சிங்கப்பூர் கிளம்புகிறேன் என்று கலைஞரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். சிங்கப்பூர் விமானம் கடலில் விழுந்தது. அதில் ஒரு இந்தியரும் பலி என்று தகவல் வந்ததால் கலைஞர் பதறிவிட்டார். என் நண்பர்களையெல்லாம் தொடர்புகொண்டு வைரமுத்து எங்கே என்கிறார்.   இதையறிந்த ஒருவர் என்னை நோக்கி ஓடிவருகிறார். செக்யூரிட்டிகளை எல்லாம்  தாண்டிக்கொண்டு  ஓடிவருகிறார். வந்து கலைஞர் உங்களைத் தேடுகிறார். தேடிக்கொண்டிருக்கிறார் என்றார். உடனே அங்கிருந்து கலைஞரைத் தொடர்பு கொண்டு, அய்யா, நான் நலமாக இருக்கிறேன் என்றேன். இப்பத்தான் எனக்கு நிம்மதி என்றார். ஒரு முதலமைச்சர் தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வைரமுத்துவுக்கு என்ன ஆயிற்று என்று கவலைப்படுகிறார் என்றால் இந்த அக்கறையை என்னவென்று சொல்வது.

அவர்மீது எனக்கிருக்கிற அக்கறையும் அளப்பரியதுதான். அவர் அறுவைச் சிகிச்சைக்குப் போனபோது ஒரு பதினைந்து நாள், காலைச் சிற்றுண்டியையே நான் சரியாகச் சாப்பிடவில்லை. அவரது ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்து ஒரு கவிதை எழுதினேன். அவர் நலமாகி வந்தபிறகு அதை அவர் கையில் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டுக் கண்ணாடியைத் தூக்கிக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

என்னை அருகிலே வருமாறு சைகை செய்தார். சென்றேன். என் நெற்றியிலே முத்தமிட்டார். என் தலையைத் தடவி வாழ்த்தினார். அந்தக் கவிதை முரசொலியில் வந்திருந்தது. அதைப் படித்துவிட்டு சின்னக்குத்தூசியார்  பாராட்டினார்.. பொதுவாக அவர் கவிதைகளைப் பாராட்ட மாட்டார்.  அவர் கட்டுரையாளர் அவரே பாராட்டியது பெருமகிழ்வை ஏற்படுத்தியது.

எல்லா வகையிலும் சோதனைகளையே சந்தித்து வரும் கலைஞரின் இதயம், எப்படி அவற்றையெல்லாம் தாங்குகிறது?


அவர், வாழ்க்கையில் சுகங்களைவிட அல்லல்களை அதிகமாக அனுபவத்திருக்கிறார். அவர் உடலும் மூளையும் துன்பத்துக்கு தயாராகிவிட்டன. அதாவது  வள்ளுவர் குறளுக்கு உரையெழுதிய கலைஞருக்கு வள்ளுவர் குறளேதான் பொருந்தும்.

"இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்'

இன்பம் வந்தால்தான் அவருக்கு ஆச்சரியம். இது நமது இயல்புக்கு விரோத மாயிற்றே. இந்த வெற்றி நமது இயல்புக்கு அந்நியமாயிற்றே. துன்பம்தானே நமது வாழ்வின் அன்றாட உணர்வு. துன்பம் தானே நமது இயல்பு என அப்படியே பழகிவிட்டார். அதனால் அவரைத் துன்பம் எதுவும் செய்வதில்லை. துன்பம் இல்லாத நாள் கலைஞருக்குத் துன்பமான நாள்.

கலைஞரின் சமயோஜித புத்தி பற்றி?

நிறையச் சொல்லலாம். சொல்லிக் கொண்டே இருக்கலாம். கொள்கையோடு கலந்து வரும் கலைஞரின் சமயோஜித புத்தியை நான் மிகவும் ரசிப்பேன். ஒருமுறை சட்டமன்றத்தில் ஹெச்.வி. ஹண்டே கலைஞர்  பற்றி, மூன்றாந்தர அரசென்று விமர்சனம் செய்துவிட்டார். இதைக்கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அவர்மீது பாயப்போய்விட்டார்கள். ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் கைகாட்டி அமர்த்திய கலைஞர், "ஹண்டே, தவறாகச் சொல்கிறீர்கள். இது மூன்றாம்தர அரசல்ல. நான்காம் தர அரசு பிராமண, சத்ரிய, வைசிய, சூத்ர என்ற வரிசையில் இது சூத்திரர்களின் அரசு' என்று சொன்னார். இந்த பதிலைக் கேள்விப்பட்டு பெரியார் ஆடிப்போய்விட்டாராம். பெரியார் சாதாரணமாக நெகிழமாட்டார்.  அப்படிப்பட்ட பெரியாரையே இந்த பதில் உணர்ச்சிவசப்படுத்தியது. இது கொள்கையோடுகூடிய சமயோஜிதம். தனது பேராற்றல் முழுவதையும் இயக்கத்தை வளர்ப்பதற்காகப் பயன்படுத்துகிறவர் கலைஞர்.

இங்கு பிறப்பதற்கு பதில் கலைஞர் கிரேக்கத்திலோ ஜெர்மனியிலோ பிறந் திருந்தால்?


நாம் அவரை இழந்திருப்போம். திருக்குறள் வேறு ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்தால், உலக இலக்கியம் ஆகியிருக்கும் என்பது உண்மை. தமிழர்களுக்கு அந்தச் செல்வம் இல்லாது போயிருக்கும். அது ஒரு வெறுமை. கலைஞர் இந்த மண்ணில் பிறக்காமல் வேறு நாட்டில் பிறந்திருந்தால் உலகத்தலைவர் ஆகியிருப்பார் என்பது உண்மை. ஆனால்  தமிழ்நாடு அந்தப் பெருமையை இழந்திருக்கும். அது வெறுமை.

கலைஞர் ஒரு தேர்தலில்கூட  நின்று தோற்றதாய்ச் சரித்திரமில்லையே இது எப்படி?


தமிழ்நாட்டு மக்கள் அவரை மட்டும் இழக்கத் தயாராக இல்லை.

வாஜ்பாய் போன்ற பல தேசியத் தலைவர்கள் 80, 85-ஐத் தாண்டியதுமே அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விடுகிறார்கள். கலைஞர் மட்டும் எப்படி 91- ஐத்தொட்டும் அரசியலில் தொடர்கிறார்?


இரண்டு செய்திகளைப் பார்க்கவேண்டும். உடல்நலம், மூளை வளம்.  இரண்டும் எல்லோருக்கும் ஒத்துழைப்பது இல்லை. வாஜ்பாய் பெரும் தலைவர்தான். தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு செலுத்துகிறவர். நான் அவர்மீது பாசமுள்ளவன். அவரோடு பழகியிருக்கிறேன்.

அவர் கலைஞரைவிட  8 மாதம் இளையவர்.

ஆனால் உடல்நலம் அவருக்கு ஒத்துழைக்க வில்லை. உடல்நலம் அவருக்கு இருந்திருந்தால் அவரும் அரசியலில் இருந்திருப்பார். கலைஞரின் வாழ்க்கை சக்கர நாற்காலிக்கு நகர்ந்திருந்தாலும் அவர் சிறகுகள் முறியவில்லை. இன்னொன்று அவரது குடும்பத்தின்  மரபணுக்கள், அவர்கள் எல்லோரையும் நீண்டநாட்கள் வாழவைக்கும் தன்மை கொண்டவை. அவர் குடும்பத்தில் எல்லோருமே 90 வயதுக்கு மேல்தான் வாழ்ந்திருக்கிறார்கள். (முரசொலிமாறன் தவிர). மரபணுக்கள் அவருக்குப் பாதி உதவி செய்திருக்கின்றன. தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பவன் முதுமை ஆகமாட்டான். சொல்லால், செயலால், எழுத்தால் தன்னைக் கலைஞர் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். போன மாத "இனிய உதய'த்தில் என்ன வந்திருக்கிறது என்று கேட்டால் உடனே சொல்லுவார். ஏதாவது உரையாடலுக்கு மத்தியில் நக்கீரனில் அந்தச் செய்தி வந்திருக்கிறது பார் என்பார். அவ்வளவு நினைவாற்றல் உள்ள அவருக்கு பழைய நடிகர்களான டி.ஆர். ராஜகுமாரியும் சாரங்கபாணியும்தான் தெரியும் என்றில்லை, இன்று இருக்கிற அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, நயன்தாரா, ஹன்சிகா வரைக்கும் அவருக்குத் தெரியும். இது அவரது கலைமீதான ஈடுபாட்டின் அடையாளம். இந்த வயதிலும் கிரிக்கெட்டில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரே என்பது எனக்கு ஆச்சரியம். நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. அவர் கிரிக்கெட்மீது ரொம்ப ஆர்வமாக இருப்பார். அவர் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்தால் யாரோடும் பேசமாட்டார். அவர் கிரிக்கெட்டில் உட்கார்ந்தால் நான் விரைவில் விடைபெற்று வந்துவிடுவேன்.

அவருக்குக் கிரிக்கெட்டில் அவ்வளவு ஈடுபாடு. யார் ஜெயிப்பார் என்று சரியாகச் சொல்வார். ஸ்கோரையும் மற்றவர்களுக்குச் சொல்வார். அதுபோன்ற ஈடுபாடு அவரை இளமையாக வைத்திருக்கிறது.

கலைஞருக்கு தமிழர்கள் செலுத்த வேண்டிய நன்றி என்ன?


காட்டவேண்டிய நேரத்திலாவது அதைக் காட்டினால் போதும்.

கலைஞரிடம் உங்களுக்குப் பிடித்ததும் பிடிக்காததும் என்ன?


பிடித்தது; மன்னிப்பது! பிடிக்காதது; தவறுகளையும் மன்னிப்பது.

கலைஞருக்கு இன்னும் கிடைக்கவேண்டிய சிறப்புகளென்று எதைக் கருதுகிறீர்கள்?  91-ல் அடியெடுத்து வைக்கும் அவருக்கு நீங்கள் சொல்லும் வாழ்த்துகள் என்ன?


திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது பலருக்கும் வழங்கப் பட்டிருக்கிறது. பெற்றவர்கள் எல்லாம் பெருமைக்கு  உரியவர்கள் என்ற கருத்தில் எனக்கு மாறுபாடு இல்லை. ஆனால் பெருமைக்குரிய ஒருவர் அதை இன்னும் பெறாமல் இருக்கிறாரே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. திரையுலகில் எழுபது ஆண்டுகளாகப் பங்களிப்பு செய்த ஒரு மாமனிதரை மொழி என்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு சாதனை நிகழ்த்திய ஒரு எழுத்தாளரை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு என திரையுலகின் எல்லாத் தளங்களிலும் இயங்கியவரை, மூத்த பெருமகனை கௌரவம் செய்ய நூற்றாண்டு கண்டுமுடித்த திரையுலகம் ஒரு பெரும் விருதை வழங்க வேண்டுமென்றால் அது தாதா சாகிப் பால்கே விருதாகத்தான் இருக்கும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இதைச் சிந்திக்க வேண்டும் என்று உரியவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.  கலைஞர் நூறாண்டுகளுக்கும் மேல் உடல்நலத்தோடு வாழ வேண்டும். மனவளத்தோடு வாழவேண்டும். உடன் இருப்பவர்கள் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

ஒலிப்பதிவு உதவி: பெலிக்ஸ்படங்கள்: சுந்தர்


நன்றி: நக்கீரன்.
இணைப்பு: http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=20206 

Thursday 19 June 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05

 
 

பகுதி - 03

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 


பகுதி - 04

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

 

பகுதி - 05

நந்தினியின் மணமகள் தோழியாக வந்தது திவ்யாதான் என்பதைச் சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து மௌனமானான் சுசி. நான் தொடர்ந்து பேசலானேன்.

"அது மட்டுமில்ல. நாங்க வெளில வர்றப்ப கதவுல சாஞ்சி நின்னுக்கிட்டு அவ பார்த்த பார்வ என்னை இன்னமும் என்னமோ பண்ணுதுடா. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணும் சுசி."

"அது எப்படிடா முடியும்?" சுசி தன் மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தான்.

"அவ என்னை நாளைக்கு எங்க வழமையான இடத்துல சந்திக்க வரச் சொல்லி மெசேஜ் அனுப்பியிருக்கா....


"திவ்யாவா இது?" தன் புருவங்களை உயர்த்தி ஆச்சரியமாகக் கேட்டான்.

"ம்...... அதான்டா எனக்கும் ஒன்னும் புரியல."

"அன்னிக்கு பிரிஞ்சிருவோம்னு முடிவெடுத்ததும் அவதான். இன்னிக்கு பேசணும்னு சொல்லிருக்கதும் அவதான்."

சுசி இப்படிச் சொன்னதும் திவ்யாவுடனான கடைசிச் சந்திப்பு மனதில் வந்து நிழலாடியதனால் விழியோரமாய் கண்ணீர் வந்து சற்று எட்டிப் பார்த்தது. சிரமப்பட்டு கண்ணீரை அடக்கிக் கொண்டேன். என் நிலை கண்டு எதுவும் கூற முடியாமல் சிறிது மௌனம் காத்தான் சுசி.

சில நிமிட இடைவெளிகளின் பின் "ஒன்ணும் யோசிக்காத. நடக்குறத அது பாட்டுல விடு. நாளைக்கு காலைல கிளம்பத் தயாராயிரு. ஜீவாவோட காரை எடுத்துக்கிட்டு வாறேன். நாம போகலாம். சரியா?" என்று கேட்டான் சுசி.

'சரிடா' என்பதாக தலையை மட்டும் ஆட்டினேன். பேசினால் எங்கே அழுதுவிடுவேனோ என்று பயமாய் இருந்தது. சூழ்நிலையைப் புரிந்து கொண்ட சுசி "வர்றேண்டா" என்று என் தோளைத் தொட்டு சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிச் சென்றான்.

அவன் கிளம்பிச் சென்ற பின் திவ்யாவின் யோசனைகளில் மூழ்கியிருந்த என்னை யாரோ அழைப்பது போலிருந்தது. கீழ்த்தளத்திலிருந்து அம்மாதான் என்னை அழைத்தார்.

"ஜெய்... எங்கப்பா இருக்க....?"
"இதோ வர்றேம்மா......" என்று குரல் கொடுத்தவாறே சென்றேன்.
"இந்த டீய கொஞ்சம் குடிச்சிட்டுப் போப்பா...." என்றவாறே அம்மா என் கைகளில் தந்த தேநீரை எடுத்துக் கொண்டு எனதறைக்குள் சென்று பருக ஆரம்பித்தேன். அம்மாவின் தேநீர் ஒரு புது உற்சாகத்தை வழங்கியது போலிருந்தது. சற்றே சிந்தனைகளில் இருந்து விடுபட்டவனாய் காணப்பட்டேன். அப்போது 'மனம் கொத்திப் பறவை' திரைப்படத்தின் 'போ... போ... நீ எங்க வேணா போ...' என்ற பாடலை என் கைப்பேசி பாட ஆரம்பித்தது. ஒரு புதிய இலக்கம். தேநீர்க் கோப்பையை மேசை மேல் வைத்துவிட்டு யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன் பதிலளித்தேன்.


"ஹலோ.."
மறுமுனையில் "ஹலோ.." என்றது ஒரு இனிய பெண் குரல். பரிச்சயமில்லை என்று தீர்ப்பளித்தது மனம்.
"நீங்க.....?"
"நந்தினி"
"நந்தினியா?"
"என்ன பகல் தான் வந்து பார்த்துட்டு போனீங்க.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா?"
"ஒ... நீங்களா?"
"ஏன் எடுக்கக் கூடாதா ?"
"அதுக்கில்ல.... என் நம்பர்...... எப்படி...?"
"அதுவா? உங்க ப்ரண்டு தந்தாங்க."
"ப்ரெண்டா ? யாரது?"
"என்ன தெரியாத மாதிரி கேக்குறீங்க? திவ்யா உங்க ப்ரெண்டு இல்லையா?"

நந்தினி இப்படிச் சொன்னது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் எதுவும் சொல்லவில்லை.

"...................................."
"ஹலோ..."

சற்று சுதாகரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன்.

"ம்.... திவ்யா தான் கொடுத்தாங்களா?"
"ஆமா"
"உங்ககிட்ட ஒன்னு கேக்கலாமா?" தயங்கியவாறே கேட்டேன்.
"கேளுங்க"
"திவ்யாவ உங்களுக்கு எப்படி தெரியும்?"
"இத கேக்க ஏன் தயங்குறீங்க? திவ்யா என் அக்கா."
"அக்காவா?" சற்றே அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டேன்.
"ஏன்? இருக்கக் கூடாதா ?"
"திவ்யாவுக்கு  அப்படி யாரும் இல்லையே......."
"நா என்ன பொய்யா சொல்றேன்?"
"ஆமா. நிச்சயமா அப்படி யாரும் இல்ல."
"சரி.... சரி..... கோவப்படாதீங்க.... திவ்யா என் அத்தைப் பொண்ணு. போதுமா?"

நான் பேசவில்லை. இப்போது என் மனதுக்குள் இருந்த குழப்பம் அதிகமாகியிருந்தது. திவ்யா ஏன் இவளுக்கு என் தொலைபேசி இலக்கத்தைக் கொடுக்க வேண்டும்? திவ்யாதான் கொடுத்தாளா? நந்தினி சொல்வது போல திவ்யா உறவுக்காரியாக இருக்க வாய்ப்பில்லை என்றே என் மனம் யூகித்தது. அவளிடமிருந்து ,மேலதிகமாக ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று அறிந்து கொள்ளும் நோக்குடன் தொடர்ந்து பேச ஆரம்பித்தேன்.......

 

**********
"கல்யாண வைபோகம்" தொடரினை "சிகரம்" வலைத்தளத்தில் தொடர...

பகுதி - 01

பகுதி - 02

 
 
"கல்யாண வைபோகத்தினை" இனிதே நடத்திட கைகோர்த்திடுங்கள் .

-இரு வீட்டார் அழைப்பு-

தமிழ்நாட்டில் தோல்வி பெரிய விஷயமில்லை!

மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்ஷே வருகை, வைகோ போராட்டம், ஸ்மிருதி இரானி கல்வித் தகுதிப் பிரச்னை, ஜெயலலிதா-மோடி சந்திப்பு என்று தொடக்கத்திலேயே பா.ஜ.க. ஆட்சி பரபரப்புகளைக் கிளப்பியிருக்கும் நேரத்தில், பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினேன்.


''உங்கள் கூட்டணிக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ளடி வேலை பார்த்ததால்தான், ரெண்டு சீட்டுகளுக்கு மேல் வெல்ல முடியாமல் தோற்றதாகச் சொல்லப்படுகிறதே?''
''கேரளாவில்கூடத்தான் நாங்கள் ஒரு இடமும் ஜெயிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் கோலோச்சும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான தேசியக் கட்சி நாங்கள்தான் என்று நிரூபித்திருக்கிறோம். எனவே தமிழ்நாட்டில் தோல்வி அடைந்ததை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அதே நேரம் தொடர்ச்சியான செயல்பாடுகளால் எங்கள் அமைப்பை வலுவாக்குவதுதான் எங்கள் அடுத்த இலக்கு.  மற்றபடி உள்ளடி வேலையெல்லாம் நடக்கவில்லை.''

''ஜெ - மோடி சந்திப்பு, எதிர்காலத்தில் பா.ஜ.க. - அ.தி.மு.க கூட்டணிக்கு வித்திடுமா?''
''இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. பிரதமர் புதிதாகப் பதவியேற்றால், மாநில முதல்வர்கள் அவரை சந்திப்பது முறையான ஒன்றுதான். அந்த வகையிலேயே அவர் சென்றார். அவர் பிரதமரைப் போலவே, நிதி அமைச்சரையும் சந்தித்துள்ளார். பிரதமரும் மாநில முதல்வராக இருந்தவர் என்பதால், முதல்வராக இருந்து மத்திய அரசின் உதவிகளைப் பெறுவது எவ்வளவு சிரமம் என்று அறிவார்.''

''உங்கள் கூட்டணியைச் சேர்ந்த வைகோவே, உங்கள் ஆட்சிக்கெதிரான முதல் போராட்டத்தை நடத்தினாரே?''
''அவரின் போராட்டம் ராஜபக்ஷேவின் வருகையைக் கண்டித்துதானே தவிர, மோடி அரசை எதிர்த்து அல்ல. எங்கள் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் முதலில் வந்தவர் வைகோதான். எங்களின் வெற்றிக்காக பம்பரமாக உழைத்தவர். அவரின் ஆசைப்படி மோடி அவர்கள் பிரதமராகி அந்தப் பதவியேற்பு விழாவில் அவர் பங்கெடுக்க முடியாமல்போன அரசியல் சூழலை நினைத்து வருந்துகிறேன்.''

''தமிழ் மக்களின் மனநிலைக்கு விரோதமாக ராஜபக்ஷேவைப் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்தது சரியா?''
''அது ஒரு தனிப்பட்ட அழைப்பு அல்ல.  சார்க் கூட்டமைப்பில் அவரும் ஓர் அங்கம் என்பதால் அழைக்க வேண்டியதாகிவிட்டது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் ஏதும் நடைபெறவில்லை. அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்புகள் ஏதும் நடக்கவில்லை. முந்தைய அரசைப்போல் மோடி அரசு தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காது.''

''ஈழப் பிரச்னையில் உங்களின் உறுதியான நிலைப்பாடுதான் என்ன?''
''இந்திய வெளியுறவுக் கொள்கையின்படி, இலங்கை பிரிவது இந்தியாவிற்கு நல்லது அல்ல. அதையே நாங்களும் பிரதிபலிக்கிறோம். தற்போது அங்கு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து தமிழர்கள் இன்னலுக்குள்ளானால், பிரிவதைத் தவிர வேறு வழியே இல்லையென்றால், அது குறித்தும் விவாதித்து முடிவெடுப்போம்.''

''முல்லை பெரியாறு பிரச்னையில் கேரள அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல்செய்ய வேண்டும் என்று கேரள பா.ஜ.க அறிக்கை வெளியிட்டுள்ளதே?''
''நதி நீர் தாவாக்களைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் அந்தந்த மாநில மக்களின் கருத்துகளைத்தான் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, இதற்கு ஒரே தீர்வு நதிநீர் இணைப்பு. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கரச்சாலைத் திட்டம் இன்று இந்தியாவைத் தாங்கி நிற்பதுபோல், மோடி ஆட்சியில் நதி நீர் திட்டம் செயல்படுத்தப்படும்.''

''அன்புமணிக்குப் பதவி கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே?''
''யார் யாருக்கு என்ன பதவி கொடுப்பது, அதை எப்போது கொடுப்பது என்று மிகச் சிறந்த நிர்வாகியான மோடி அவர்களுக்குத் தெரியும். துரதிருஷ்டமான வகையில் மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுக்கு அதிக எண்ணிக்கை பெற முடியாமல் போய்விட்டது.''

''மோடி பிரதமராகிவிட்டார். இன்னும் சுப்ரமண்ய சுவாமி தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்று அதிரடியாகக் கருத்துக்களைச் சொல்லிவருகிறாரே?''
''அவரின் சொந்தக் கருத்துகளை ட்விட்டரில் சொல்கிறார். அதில் நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை!''  
- செந்தில்குமார், படங்கள் : ஆ.முத்துக்குமார்

நன்றி: ஆனந்த விகடன்.

Tuesday 17 June 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

 
 

பகுதி - 03

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 


பகுதி - 04


எல்லோரும் வாகனத்தில் ஏறிக் கொண்டிருக்க, நானும் ஏறத் தயாரான நேரம் எனது கைப் பேசிக்கு திவ்யாவின் இலக்கத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து வருடங்கள் இரண்டு ஆகிவிட்டாலும் கூட காதலிக்கும் போது பயன்படுத்திய அதே தொலைபேசி இலக்கங்களைத் தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முதன் முதலில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்திய தினத்தன்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்கங்களைக் கொண்ட புதிய தொலைபேசி இணைப்புகளை (SIM) இருவரும் பெற்றுக் கொண்டோம். இன்று வரைக்கும் - ஏழு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.


திவ்யா கதவருகில் சாய்ந்து நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வீட்டுக்குப் போனதும் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் நான் வந்தேன். ஆனால் அவளிடமிருந்தே தகவல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான். ஆனால் உள்ளே  இருக்கும் செய்தி என்ன சொல்லும் என்று எண்ணிய போதே இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. 


"நான் உங்களோடு கொஞ்சம் முக்கியமாகப் பேச வேண்டும். நாளை நமது வழமையான இடத்தில் சந்திப்போம்."




குறுஞ்செய்தியைப் படித்ததும் திவ்யா ஒரு முடிவோடு தான் பேச அழைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். வாகனத்தில் எல்லோரும் ஏறிவிட்டார்கள். அப்போது "ஜெய்... வரலையா..?" என்ற அப்பாவின் குரல் என்னை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தது.

"வாறேம்ப்பா...." என்றபடி முன் ஆசனத்தில் ஏறி அமர்ந்தேன். வாகனம் எங்கள் இல்லம் நோக்கி விரைந்தது. அந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததில் இருந்து மனதில் சிந்தனையின் அழுத்தம் அதிகரித்தது.

நாங்கள் வீட்டை வந்தடைந்த போது நேரம் மாலை ஐந்து மணியாகியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக எனது அறைக்குள் சென்று ஆருயிர்த் தோழன் சுசிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.

"ஹ... ஹலோ சு.. சுசி..."
"ஜே.கே? என்னடா பதட்டமா இருக்க?"
"ஆமாண்டா. பதட்டம் தான். என்ன செய்றதுனே தெரியலடா..."
"ஏன்? போன இடத்துல ஏதும் பிரச்சினையா?"
"பிரச்சினை ஒன்னும் இல்ல... ஆனா.."
"ஆனா....?"
"சரி, அத விடு... இப்ப நீ எங்க இருக்க?"
"இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வந்துட்டிருந்தேன். நீ எடுத்துட்ட..."
"எங்க வீட்டுக்குக் கொஞ்சம் வர முடியுமா?"
"சரிடா... நா வர்றேன்."

சரியாக ஆறு மணிக்கு சுசி வீட்டுக்கு வந்து விட்டான். என் பெற்றோருடன் உரையாடியபின் என் அறைக்குள் வந்தவனை நேராக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றேன்.

ஐந்து நிமிடங்கள் வரை இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. சுசிதான் முதலில் பேசத் தொடங்கினான்.

"பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா இருக்காமே? அம்மா சொன்னாங்க."
"..................."
"ஏன்டா உனக்குப் பிடிக்கலையா?"
"விஷயமே வேற சுசி..."
"என்ன? பொண்ண விட பொண்ணுத் தோழியத்தான் புடிச்சிருக்கோ? அம்மாவும் சொன்னங்க, பொண்ணுத் தோழியா வந்தவ கொஞ்சம் நல்லாத்தான் இருந்தான்னு..."
"ஆமா சுசி. திவ்யாவ எனக்கு எப்படிடா புடிக்காமப் போகும்?"
"என்னடா சொல்ற?"
"ஆமாண்டா... என் திவ்யா தான் பொண்ணுத் தோழி."
**********
"கல்யாண வைபோகம்" தொடரினை "சிகரம்" வலைத்தளத்தில் தொடர...

பகுதி - 01

பகுதி - 02

"கல்யாண வைபோகத்தினை" இனிதே நடத்திட கைகோர்த்திடுங்கள் .

-இரு வீட்டார் அழைப்பு-

Sunday 15 June 2014

சர்வதேசக் கால்பந்து உலகக்கிண்ணம் - 2014

 
 32 நாட்கள் 

32 நாடுகள் 

64 போட்டிகள் 

736 வீரர்கள் 

ஒரு வெற்றியாளர் 

யார்???

                       வணக்கம் வலைதள வாசகர்களே, கால்பந்து ரசிகர்களே! இதோ துவங்கிவிட்டது சர்வதேசக் கால்பந்து உலகக்கிண்ணம் 2014. மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட கோலாகல துவக்க விழாவுடன் போட்டிகள் துவங்கியிருக்கின்றன. முதலில் துவக்க விழாவின்  போதான  ஒளிப்படங்களை இங்கே காணலாம்.


 

 

                        இவையெல்லாம் பிரம்மாண்டத்தின் சிறு துளிகள் தான். பார்க்காதவர்கள் இணையத்தின் மூலமாகவேனும் பார்த்துவிடுங்கள். 32 நாடுகள் , 8 குழுக்கள், 12 மைதானங்களில் இத்தொடர் இடம்பெறவுள்ளது. ஜூலை 13 அன்று ரியோ டி ஜெனிரோவில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது. கால்பந்து உலகக்கிண்ணம் தொடர்பில் இலங்கையின் "வீரகேசரி" பத்திரிகை நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட சஞ்சிகையில் வெளியான கட்டுரையை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும். இது கால்பந்து உலகக்கிண்ணம் தொடர்பில் நாம் அறியாத பல விடயங்களை தெரிந்துகொள்ள உதவியாக இருக்குமென்பதில் ஐயம் இல்லை.

முழு உலகையும் ஈர்க்கும் உலகக்கிண்ண கால்பந்தாட்டம்

                     முழு உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தனது 20வது அத்தியாயத்தை பிறேஸில் நாட்டில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை அரங்கேற்றவுள்ளது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் நான்காவது அத்தியாயத்தை 1950 இல் அரங்கேற்றியிருந்த பிறேஸில் நாட்டில் 64 வருடங்களுக்குப் பிறகு உலகக்கிண்ணப் போட்டிகள் மீண்டும் நடைபெறுகின்றன.

 

                  ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு அடுத்ததாக அதி உன்னதம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சியாக உலகக்கிண்ண கால்பந்தாட்டம் திகழ்கின்றது. அத்துடன் அதிகூடிய நாடுகள் பங்குபற்றும் தனியொரு விளையாட்டு நிகழ்ச்சி என்ற பெருமையையும் கால்பந்தாட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகக்கிண்ணப் போட்டிகளில் 32 நாடுகள் தானே பங்குபற்றுகின்றன எனப்பலர் கருதலாம். ஆனால் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பல்வேறு கட்டங்களைக் கொண்டதுடன் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. 

              ஆபிரிக்க வலயம், ஆசிய வலயம், ஐரோப்பிய வலயம், வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் வலயம், கடல் சூழ் நாடுகள் வலயம், தென் அமெரிக்க வலயம் ஆகிய ஆறு வலயங்களில் பல்வேறு குழுக்களில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் முன்னோடி தகுதிகாண், தகுதிகாண், முதலாம் சுற்று , இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று , நான்காம் சுற்று என விளையாடுவதன் மூலமே உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாடும் தகுதியை 31 நாடுகள் பெறுகின்றன.போட்டியை முன்னின்று நடத்தும் நாடு நேரடி தகுதியை பெற்றுக்கொள்ளும்.

 

                              இதன்பிரகாரம் உலகக்கிண்ண கால்பந்தாட்ட அரங்கில் அதிசிறந்த அணிகளே இறுதிச் சுற்றில் விளையாடுகின்றன. இறுதிச் சுற்றும் ஐந்து கட்டங்களைக் கொண்டது.லீக் அடிப்படையிலான முதலாம் சுற்று , நொக்-அவுட் அடிப்படையிலான இரண்டாம் சுற்று, கால் இறுதிகள், அரை இறுதிகள், மாபெரும் இறுதி ஆட்டம் என்பவற்றுடன் மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியும் நடைபெறவுள்ளது.

                     இறுதிச் சுற்றில் 32 நாடுகள் எட்டுக்குழுக்களில் தலா நான்கு அணிகள் வீதம் பங்குபற்றுகின்றன. இந்த 32 நாடுகளில் எந்த அணி வெற்றி பெறும் என அறுதியிட்டுக் கூறமுடியாது. என்றாலும் உலகக்கால்பந்தாட்ட அரங்கில் பல ஜாம்பவான்களை உருவாக்கியுள்ள பிரேஸில் , ஆர்ஜென்டினா , ஜெர்மனி, இத்தாலி , பிரான்ஸ்  மற்றும் நடப்பு வெற்றியாளர் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் உலகக்கிண்ணத்தை வெல்லக்கூடிய நாடுகளாக கருதப்படுகின்றன.

                அதேவேளை பொஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா , போர்த்துகல், உருகுவே  ஆகிய நாடுகள் கருங்குதிரைகளாகக் [Dark Horse] காணப்படுகின்றன. எனவே 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் முழு பிரபஞ்சத்தையும் பரபரப்பின் உச்சிக்கே இட்டுச் செல்லும் அதே வேளை திறமைமிக்க அணி 2014 இன் கால்பந்து உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் என்பது உறுதி.