Sunday 15 June 2014

சர்வதேசக் கால்பந்து உலகக்கிண்ணம் - 2014

 
 32 நாட்கள் 

32 நாடுகள் 

64 போட்டிகள் 

736 வீரர்கள் 

ஒரு வெற்றியாளர் 

யார்???

                       வணக்கம் வலைதள வாசகர்களே, கால்பந்து ரசிகர்களே! இதோ துவங்கிவிட்டது சர்வதேசக் கால்பந்து உலகக்கிண்ணம் 2014. மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட கோலாகல துவக்க விழாவுடன் போட்டிகள் துவங்கியிருக்கின்றன. முதலில் துவக்க விழாவின்  போதான  ஒளிப்படங்களை இங்கே காணலாம்.


 

 

                        இவையெல்லாம் பிரம்மாண்டத்தின் சிறு துளிகள் தான். பார்க்காதவர்கள் இணையத்தின் மூலமாகவேனும் பார்த்துவிடுங்கள். 32 நாடுகள் , 8 குழுக்கள், 12 மைதானங்களில் இத்தொடர் இடம்பெறவுள்ளது. ஜூலை 13 அன்று ரியோ டி ஜெனிரோவில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது. கால்பந்து உலகக்கிண்ணம் தொடர்பில் இலங்கையின் "வீரகேசரி" பத்திரிகை நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட விசேட சஞ்சிகையில் வெளியான கட்டுரையை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும். இது கால்பந்து உலகக்கிண்ணம் தொடர்பில் நாம் அறியாத பல விடயங்களை தெரிந்துகொள்ள உதவியாக இருக்குமென்பதில் ஐயம் இல்லை.

முழு உலகையும் ஈர்க்கும் உலகக்கிண்ண கால்பந்தாட்டம்

                     முழு உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தனது 20வது அத்தியாயத்தை பிறேஸில் நாட்டில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை அரங்கேற்றவுள்ளது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் நான்காவது அத்தியாயத்தை 1950 இல் அரங்கேற்றியிருந்த பிறேஸில் நாட்டில் 64 வருடங்களுக்குப் பிறகு உலகக்கிண்ணப் போட்டிகள் மீண்டும் நடைபெறுகின்றன.

 

                  ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு அடுத்ததாக அதி உன்னதம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சியாக உலகக்கிண்ண கால்பந்தாட்டம் திகழ்கின்றது. அத்துடன் அதிகூடிய நாடுகள் பங்குபற்றும் தனியொரு விளையாட்டு நிகழ்ச்சி என்ற பெருமையையும் கால்பந்தாட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகக்கிண்ணப் போட்டிகளில் 32 நாடுகள் தானே பங்குபற்றுகின்றன எனப்பலர் கருதலாம். ஆனால் உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் பல்வேறு கட்டங்களைக் கொண்டதுடன் சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. 

              ஆபிரிக்க வலயம், ஆசிய வலயம், ஐரோப்பிய வலயம், வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் வலயம், கடல் சூழ் நாடுகள் வலயம், தென் அமெரிக்க வலயம் ஆகிய ஆறு வலயங்களில் பல்வேறு குழுக்களில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் முன்னோடி தகுதிகாண், தகுதிகாண், முதலாம் சுற்று , இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்று , நான்காம் சுற்று என விளையாடுவதன் மூலமே உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் விளையாடும் தகுதியை 31 நாடுகள் பெறுகின்றன.போட்டியை முன்னின்று நடத்தும் நாடு நேரடி தகுதியை பெற்றுக்கொள்ளும்.

 

                              இதன்பிரகாரம் உலகக்கிண்ண கால்பந்தாட்ட அரங்கில் அதிசிறந்த அணிகளே இறுதிச் சுற்றில் விளையாடுகின்றன. இறுதிச் சுற்றும் ஐந்து கட்டங்களைக் கொண்டது.லீக் அடிப்படையிலான முதலாம் சுற்று , நொக்-அவுட் அடிப்படையிலான இரண்டாம் சுற்று, கால் இறுதிகள், அரை இறுதிகள், மாபெரும் இறுதி ஆட்டம் என்பவற்றுடன் மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியும் நடைபெறவுள்ளது.

                     இறுதிச் சுற்றில் 32 நாடுகள் எட்டுக்குழுக்களில் தலா நான்கு அணிகள் வீதம் பங்குபற்றுகின்றன. இந்த 32 நாடுகளில் எந்த அணி வெற்றி பெறும் என அறுதியிட்டுக் கூறமுடியாது. என்றாலும் உலகக்கால்பந்தாட்ட அரங்கில் பல ஜாம்பவான்களை உருவாக்கியுள்ள பிரேஸில் , ஆர்ஜென்டினா , ஜெர்மனி, இத்தாலி , பிரான்ஸ்  மற்றும் நடப்பு வெற்றியாளர் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் உலகக்கிண்ணத்தை வெல்லக்கூடிய நாடுகளாக கருதப்படுகின்றன.

                அதேவேளை பொஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா , போர்த்துகல், உருகுவே  ஆகிய நாடுகள் கருங்குதிரைகளாகக் [Dark Horse] காணப்படுகின்றன. எனவே 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் முழு பிரபஞ்சத்தையும் பரபரப்பின் உச்சிக்கே இட்டுச் செல்லும் அதே வேளை திறமைமிக்க அணி 2014 இன் கால்பந்து உலகக்கிண்ணத்தை கைப்பற்றும் என்பது உறுதி.

No comments:

Post a Comment