Showing posts with label நேர்காணல். Show all posts
Showing posts with label நேர்காணல். Show all posts

Thursday, 24 July 2014

காயங்கள் தான் என் கௌரவங்கள் - மு.மேத்தா

 



          பெரிய குளத்தின் பீடுமிகும் கவிஞரே! உங்கள் இளம்வயதின் நினைவுகளை எங்களுக்குச் சொல்வீரா?
"வாழ்வில் நான் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் அவைதான். புழுதியில் புரண்ட பூக்களாக நாங்கள் இருந்தோம். அற்புதமான நல்ல நண்பர்கள்  எனக்கு வாய்த் திருந்தார்கள். சிறகு முளைக்கும் முன்னே வானில்  பறந்த பறவைகளைப்போல், எதுவும் அறியும் முன்னே நாங்கள் இலக்கியம் படைக்க ஆரம்பித்தோம். அந்த வயதில்தான் நான் அதிகம் படித்தேன்.  அரசியல் மேடைகளில் இளைய கதாநாயகனாக உலாவந்தேன். பெரியகுளம் விக்டோரியா நினைவு கழக உயர்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவனாக பதவியில் இருந்தேன்.

அங்கே ஒரு மந்திரிசபை அமைத்தோம். மாணவர் தலைவர்தான் முதலமைச்சர். என் வாழ்வில் என் தந்தை எனக்குக் கொடுத்ததுதான் அதிகம். கேட்டது எதுவுமில்லை. பள்ளியில் நான் மந்திரிசபை அமைத்தபோது அவர் என்னிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தார். எங்கள் குடும்ப வைத்தியரின் மகனை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். என் சகாக்களிடம் யோசித்துவிட்டுச் சொல்வதாக சட்டாம்பிள்ளைத்தனமாகச் சொன்னேன். இறுதியில் என் நெஞ்சில் நிறைந்த  தந்தையின் வேண்டு கோளை நிராகரித்தேன். சின்ன வயதிலேயே நேர்மைத் தராசை கையில் தூக்கிக்கொண்டு நடந்தேன். இன்றுவரை அந்தத் தராசை கீழே போட எனக்கு மனம் வரவில்லை. அதனால் தான் சில சமயங்களில் நானே கீழே விழுந்து நொந்துபோக நேர்கிறது. ஆனால் அந்த காயங்களைத்தான் என் கௌரவங்கள் என்று கருதுகிறேன். எனக்கு வாய்த்த என்னுடைய நண்பர்களான ஆறுமுகம், முகமதுமைதீன், ஆறீஸ்வரன், வேலுச்சாமி, சிவஞானம், சிவநேசன், பாலகுமார் போன்றோர் லட்சியத்தோடு நான் வளர்வதற்கு உரமாக நின்றார்கள். வழிமாறாமல் உயர்வதற்கான வாய்ப்பை அவர்கள் வழங்கினார்கள். இன்னும் பகிர எவ்வளவோ இருக்கின்றன.''

"ஈர விழிக் காவியங்கள்' எழுதி வெளியிட்டவரே!
எழுதி வெளியிட்டதனால் எவர் மனதைத் தொட்டீர்கள்?
" இன்று ஏராளமான கவிதைகளை எழுதும் இளைஞர்களையும் அவற்றை வாசிக்கிற மூத்தவர்களையும் தொட்டேன். அவர்கள் நெஞ்சில் வேர்விட்டேன்.''


மரபுக் கவிதைகளால் மனம் மகிழ்ந்த நாயகரே!
புதுக்கவிதைக் காதலியைக் கரம்பிடித்ததெதனாலே?
"சமூகத்தில் குமுறல்களை வெளிப்படுத்த வேலியில்லாத ஒரு இலக்கிய வடிவம் தேவைப்பட்டது. சுவரேறிக் குதிப்பதற்கு பதிலாக சுவர்களைத் தகர்த்து விட்டு வானம்பாடிகளாய் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். "சொற்புதிது பொருள் புதிது வளம் புதிது ஜோதிமிக்க நவ கவிதை' என்று பாரதி பாடினானே, அவற்றைப் படைப் பதற்கு புதுக்கவிதை வாகனத்தில் பயணம் செய்தோம்.''

அழகுத் தமிழுக்கு ஆணிவேர் ஆனவரே!
உங்கள் தமிழுக்கு உயிர்வேராய் இருந்தவர் யார்?
"இளங்கோவும் வள்ளுவனும் கம்பனும் துருவ நட்சத்திரங்களாய் எனக்குத் திசைகாட்டினார் கள். பாரதியும் பாரதிதாச னும் எனக்குள் இசை மீட்டினார்கள். ஏழை எளிய மனிதர்கள் எனக்கு கவச உடை பூட்டி, தங்களுக்காகப் போரிட களத்தில் நிறுத்தினார்கள். கவிஞர் சிற்பி என் னைப் பற்றி இப்படி குறிப்பிடு வார்... "சமூகமே இக்கவிஞரின் ஆலயம். அதன் போர்க்களமே இவரின் கீதலயம்.''

கவிதைக்கு அழகு கற்பனையா?
இல்லை பூவுக்குள் தேன்போன்ற பொருளடக்கம் தானா?

"பூவுக்குள் தேன்போன்ற பொருளடக்கம் தான் எந்த இலக்கிய வடிவத்தையும் எழுச்சி பெறச் செய்கிறது. வண்டுகளாய் மட்டுமே சுற்றித் திரியாமல் வாள்களாகவும் வேல்களாகவும் மாறவேண்டிய கட்டாயத்தை வாழ்க்கை தீர்மானிக்கிறது.''

காதலே இல்லாத உலகத்தில் சில நாட்கள்
வாழச் சொன்னால் வாழ்வீரா சொல்லுங்கள்?
"வாழ்வேன். இதோ இப்போது உங்கள்முன் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன். வெறும் வியாபாரிகளுக்கு மத்தியில் படைப்பாளிகளும் வாழத் தானே வேண்டியிருக்கிறது. மூச்சு நின்றுவிட்டால் பேச்சு நின்றுவிடும். அதுவரை பேசாதிருக்க இயலுமா?''

இந்த உலகை இயக்கும் சக்தி எதனிடம் உள்ளது? எடுத்துச் சொல்லுங்கள்?
"உழைப்பிலும் இளைஞர்களின் உணர்விலும் உள்ளது. அதை உருவாக் கும் சக்தி, எந்த பேரங்களுக்கும் இடம்கொடுக்காத எழுதுகோல்களில் உள்ளது.''

யுத்தக் களத்தில் வென்றவர்கூட
முத்தக் களத்தில் தோற்பது எதனால்?
"யுத்தக் களத்தில் எதிரி யார் என்பது தெரிகிறது. முத்தக் களத்தில் காதல் எது- மோதல் எது என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.''

மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் நீங்கள்
யாராகப் பிறக்க ஆசைப் படுவீர்கள்?
"இதில் நான் பிறவாமை வேண்டும் என்று கூறிய பெரியார் கட்சி.''

மனது நிரம்புவது மரபிலா? இல்லை
புதுக்கவிதை எழுதும் பொழுதிலா? சொல்லுங்கள்!
"கோப்பை நிரம்புவது வெந்நீரிலா தண்ணீரிலா என்று கேட்பதைப் போன்ற கேள்வி இது. மரபோ புதிதோ அது கவிதையாக இருக்க வேண்டும் என்பதுதான் நியதி. மரபிலும் நல்ல கவிதைகள் உண்டு. புதுக்கவிதையிலும் வெறும் வசனங் கள் வந்துவிடுவதுண்டு. நல்ல கவிதைக்கு வடிவம் முக்கியம். இரண்டிலும் அது இருக்கும். அல்லது இல்லாமலும் இருக்கும். கூட்டம் சேர்ந்து கொண்டாடுவதையெல்லாம் சிறந்தது என்று கூறமுடியாது. அடடா என்று எது நம்மை மறந்து ஆனந்தமாய் அலற வைக்கிறதோ- அது நம் மனதை நிரப்பிவிட்டது என்று அர்த்தம்.?''

சிறகு முளைத்த எழுதுகோல் கொண்டவரே!
உங்கள் வானம் காதலா? சமூகமா?
"சமூகத்தின்மீதான காதல்.''

தலைநரைக்கும் வயதிலும் உங்கள் எழுத்து இளமையாக இருக்க என்ன காரணம்?
"இதயம் எப்போதும் இளமை யாகவே இருக்கிறது. ஒரு முடி நரைக் கும்போது உள்ளுக்குள் புதிய பூக்கள் ஏராளமாய்ப் பூக்கின்றன. அவை முடிசூடிக் கொள்வதால் நாம் அகதி ஆவதில்லை. நம் எழுத்துக்கு அகவை யும் ஆவதில்லை.''

மரபில் உங்கள் மனம்கவர்ந்த கவிஞர்கள் யார்? பட்டியலிட்டுப் பதமாகச் சொல்லுங்கள்...
"நான் வாழும் காலத்தில் என்னோடு வாழ்ந்த, வாழ்கின்ற கவியரசர் கள் மீரா, ரகுமான், பாலா, சிற்பி, இன்குலாப், சேலம்  தமிழ்நாடன் இன்னும் பலர். பட்டியல் கொடுக்க நான் விரும்பவில்லை.''

தித்திப்புத் திரையுலகில் திருக்கவியே
நீங்கள் நுழைந்த தருணத்தை விரிவாகச் சொல்லுங்கள்...
"தற்செயலாய் நேர்ந்ததுதான் என்னுடைய திரைப்பயணம். என்னோடு தியாகராயர் கலைக்கல்லூரியில் படித்த நண்பர் சுப்பிரமணியன் அவர்களுடைய தந்தை, தென்தமிழ்நாட்டு நாடக உலகில் புகழ்பெற்ற உடையப்பா ஆவார். "அனிச்சமலர்' என்று அவர் ஒரு படம் எடுத்தார். படிக்கும்போதே அவர் என் பாட்டுப் பணிகளை அறிந்தவர். ஆதலால் அவருடைய படத்தில் முதல் பாடலையே நான்தான் எழுதவேண்டும் என்று அழைத்தார். ஆளுயர ரோஜாப்பூ மாலையோடு வாசலில் நின்று வரவேற்று என்னை அழைத்துச் சென்றார்.

இசையமைப்பாளர்களான சங்கர்- கணேஷ் இருவரிட மும் இவர்தான் எங்கள் கவிஞர் என்று அறிமுகப்படுத்தினார். அதில் முதல் பாடலை எழுதியதற்குப் பிறகு திரைப்பட உலகை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை.

எழுத்தாளர் பாலகுமாரன் என்னிடம், "கலைஞானி கமல்ஹாசன் அடிக்கடி உங்கள் கவிதைகளைப் பற்றிப் பேசுகிறார். அவரைச் சந்தித்தால் புதுப்பட வாய்ப்புகள் ஏராளமாய்க் கிடைக்கும்' என அடிக்கடி சொல்லிக் கொண் டிருந்தார். திரையுலகைப் பற்றி பெரிதாக கனவொன்றும் எனக்கு இல்லாததால் அவருடைய அழைப்பினை நான் ஏற்காதிருந்தேன். என்னுடைய ரசிகர்கள் ஏன் நீங்கள் திரைப்படங்களில் எழுதவில்லை என்று என்னைக் குற்றக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். வேறுவழியில்லை; நானும் சினிமாவில் பாடல்கள் எழுதியாகவேண்டும். இல்லா விட்டால் அவர்கள் ஏற்கெனவே எனக் குக் கொடுத்திருக்கும் "கவிஞர்' என்ற பட்டத்தைப் பறித்துக் கொள்வார்கள் என்று தோன்றியது. எனவே கமலைச் சந்திக்க சம்மதம் சொன்னேன்.

பாலகுமாரன் மூலம் சந்திப்பு நிகழ்ந்த போது கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், எனக்கு சில உண்மைகளை உணர்த்தினார். "உங்கள் இலக்கியத் தமிழை நான் மதிக்கிறேன். ஆனால், திரைப் படவுலகம் பெரும் வல்லமை மிக்கது. ஒரு படைப்பாளி அந்த ஊடகத்தையும் பயன்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். உங்கள் கவிதை லட்சம்பேரைச் சென்றடையும் என்றால், நீங்கள் எழுதும் திரைப்பாடல் கோடிக்கணக்கானவர்களை உடனடியாக ஓடிப்போய்த் தொட்டுவிடும்' என்று உபதேசித்து என்னை இயக்குனர் மனோபாலாவிடம் அழைத்துச் செல்லச் சொன்னார்.

இயக்குனர் மனோபாலா அப்போது "ஆகாயகங்கை' என்ற திரைப்படத்தைத் தொடங்கியிருந்தார்.  அவர் என்னை பிரசாத் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று இசைஞானி இளையராஜாவின் முன்பு உட்கார வைத்து இவர்தான்

மு. மேத்தா என்றார். படித்திருக்கிறேன் என்று புன்னகைத்த இளையராஜா, பாடல் எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கத் தொடங்கினார். அதன்பிறகு ஏராளமான படங்களில் எழுதினேன்.''

நீங்கள் எழுதிய திரையிசைப் பாடல்களில்
உங்களைக் கவர்ந்த ஒரு பாட்டைச் சொல்லுங்கள்?
"உங்கள் குழந்தைகளில் உங்களுக்குப் பிடித்த குழந்தை எது என்று கேட்பதைப் போன்ற கடினமான கேள்வி இது. சில பாடல்களை வேண்டுமானால் நினைவுபடுத்தலாம். இசை ஞானி இளையராஜா இசையில் ரஜினி நடிக்க, பாலசந்தர் தயாரித்த "வேலைக்காரன்' படத்தின் ஒவ்வொரு பாடலும் என் உள்ளத்தில் ஈரமாய் ஒலிக்கிறது. "இரட்டைவால் குருவி' படத்தில் பாலுமகேந்திராவின் பார்வையில் "ராஜராஜ சோழன் நான்' என்ற பாடல் என் இதயத்தைத் தாலாட்டுகிறது. "சூரியவம்சம்' படத்தில் "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' எனக்குள் அருவியாய் விழுகிறது. "பாடுநிலாவே' என்று என்னுள் "உதய கீதம்' கேட்கிறது. "யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ?' என "இதயக் கோயில்' என்னுள் எட்டிப் பார்க்கிறது.

"என் மனவானில் சிறகைவிரிக்கும் வண்ணப் பறவைகளே' என்று "காசி' யின் குரல் இதயத்தைத் தித்திப்பாய் தீண்டுகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நண்பர்களோடு சேர்ந்து நான் தயாரித்த "தென்றல் வரும் தெரு' என்ற படத்தின் பாடல்கள், எங்களையும் சொல்லக்கூடாதா என்று ஏக்கத்தோடு கேட்கின்றன. வரிசைப்படுத்த முடியவில்லை. நான் எழுதிய பாடல்கள் எல்லாமே என் இதயத்தில் ஏறி, ரங்கராட்டினம் சுற்றுகின்றன.''

எதைநோக்கி உங்கள் இலக்கியப் பயணம்?
அதை எமக்கின்று அறிவிப்பீரா?

""என்னை நோக்குகிறவர்களை நோக்கி.''

இன்றைய இலக்கிய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது எதுவோ?
"எழுது எழுது எழுது என்று உங்கள் இதயத்திற்குள்ளே ஓங்கி ஒலிக்கும் குரல் கேட்டால் எழுதுங்கள். எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள். எழுதுவதைவிட வாழ்வது இனிது. வாழ்வதைவிடவும் பிறரை வாழவைப்பது இனிது. இனிமையாய் இந்த சமூகத்தை வாழவைக்க நீங்கள் எழுதுங் கள். உங்கள் எழுத்துகளைப் பற்றி நீங்களே பேசாதீர்கள். சக்தி இருந்தால் உங்கள் எழுத்துகளே உங்களைப் பேசும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மாமன்னன் ராஜராஜசோழனின் முகம் எந்த புகைப்பட ஆல்பத்திலாவது இருக்கிறதா இப்போது? எந்தப் புகழும் நிலையானதல்ல. இதை மனதில் நிறுத்துங்கள்.''

பிறப்பெனப்படுவது?
"சிறப்புகள் அடைவது.''

வாழ்வெனப்படுவது?
"வறுமையை வெல்வது.''

இறப்பெனப்படுவது?
"இனியதில் இனியது.''

சந்திப்பு: அமுதா தமிழ்நாடன்

நன்றி : நக்கீரன் - 01-08-2012

Saturday, 5 July 2014

நான் பூத்துக் குலுங்க காரணமானவர்கள் - நா.முத்துக்‌குமார் உடன் ஒரு நேர்முகம்!


கார்காலக் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த இலக்கிய இளைஞர் நா. முத்துக்குமார், திரைப்பாடல்களை எழுதத் தொடங்கியது எதிர்பாரா ஒரு இனிப்பு விபத்து. பலருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் கவிஞர் அறிவுமதியின் பரந்த தோளில் இவருக்கு இடம் கிடைத்தது. செந்தமிழன் சீமானால், திரைப்படப் பாடலாசிரியர் என்ற மகுடமும் இவருக்கு சூட்டப் பட்டது. பச்சையப்பன் கல்லூரித் தமிழ்க்காற்றும் செழித்த தமிழ்ப்படைப்புகளும் இவரது விலாப்புறங்களில் வண்ணச்சிறகுகளை வளர்த்தன. திரைவானை ஆனந்தமாய் அளக்கத்தொடங்கிய முத்துக்குமார், இதயம்தொடும் இலக்கியப் பாடல்களால் தனக் கொரு சிம்மாசனத்தை கண்ணதாசன், வாலி, வைரமுத்து வரிசையில் சிருஷ்டித்துக்கொண்டார். இவரது உயிரோட்டமான திரைப்பாடல்கள், இன்று இவரது மார்பில் தேசிய விருதை கம்பீரமாகக் குத்தி யிருக்கிறது.

முத்துக்குமார் எழுதிய 16 நூல்களில் 8 கவிதை நூல்கள், பிற கட்டுரை, கதை, மொழிபெயர்ப்பு வகையைச் சேர்ந்தவை. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் சிங்கப்பூரிலும் முத்துக்குமாரின் நூல்கள் பாடமாக வைக்கப்பட்டிருப்பது உபரி சிறப்பாகும். ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தி, தெலுங்கு, மலையாளம் என இவரது கவிதைகள் பிறமொழிகளிலும் பெயர்க்கப் பட்டு, நாடு, இனம் போன்ற எல்லைகளைத் தாண்டி வலம் வருகின்றன. புகழின் சிகரங்களிலும் தன்னடக்கம் காத்துவரும் நா. முத்துக்குமாரை "இனிய உதய'த்திற்காக சந்தித்தபோது...

உங்களை வார்த்தெடுத்த கிராமத்தைப் பற்றி சொல்லுங்கள்?


சின்னகாஞ்சிபுரம் அருகே இருக்கும் கன்னிகாபுரம்தான் என் தாய்மண். பெரும்பாலும் நெசவுக் குடும்பங்களைக் கொண்ட கிராமம். அங்கே இரண்டே இரண்டுபேர் மட்டும்தான் அரசு வேலையில் இருந்தனர். ஒருவர், என் அப்பா நாகராஜன். தமிழாசிரியர். இன்னொருவர் காவல்துறையில் இருந்தார். சுற்றிலும் பச்சைப்பசேல் வயல்வெளி களால் முற்றுகையிடப்பட்ட அழகிய அந்தக் கிராமத்தில், தெருவெங்கினும் பட்டு நூல் பாவு போட்டி ருப்பார்கள். பிள்ளைகளின் குதூகலமான விளையாட்டுகளால் கிராமம்  நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட எங்கள் கிராமம், இப்போது ரியல் எஸ்டேட் கற்கள் ஊன்றப்பட்டு, புதுப்புது நகர்களாக மாறிக்கொண்டிருக்கிறது. எங்கள் பாலாறு, நீரின்றி பாழாறாக நிறம் மாறிக் காட்சிதருகிறது. எனினும் எங்கள் கிராமத்தவர்களின் உதடுகளில் இருக்கும் அந்த வெள்ளந்திச் சிரிப்பு மட்டும் இன்னும் உதிரவில்லை. தண்ணீர் கேட்டால் மோர் கொடுக்கும் அவர்களின் உபசரிப்புக் குணமும் இன்னும் காலாவதியாகவில்லை.

உங்கள் இளமைக்காலம் பற்றி?


என் நான்கு வயதிலேயே என் அம்மா இறந்து விட்டார். அதனால் என்னைத் தனிமை தத்தெடுத்துக் கொண்டது. அப்பா வாங்கிக்குவித்திருக்கும் நூல்கள், என் தனிமைக்குத் தோழமையாக இருந்தது.

சென்னை வாழ்க்கைக்காக உங்கள் கிராமத்து சந்தோஷங்களில் எதை எதை இழந்திருக்கிறீர்கள்?

இது தொடர்பாக "கிராமம்-நகரம்-மாநகரம்' என்ற புத்தகத்தை நான் எழுதியிருக்கிறேன். எங்கள் கிராமத்தில் இருக்கும் எல்லா வீட்டுக் கதவுகளும் எப்போதும் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் எந்த வீட்டிற்குள்ளும் சமையலறைவரை  சென்று சாப்பாடுபோட்டுச் சாப்பிடலாம். ஆனால் சென்னை அபார்ட்மெண்டுகளிலோ பகலிலிலேயே எல்லாக் கதவுகளும் பூட்டிக்கிடக்கின்றன. கதவில் பொருத்திய லென்ஸ் வழியாக வந்திருப்பவர்களை பெரிதுபடுத்திப் பார்த்துவிட்டுக் கதவைத் திறக்கிறார்கள். அவ்வப்போது மாநகரச் சாலைகளில் பூந்தொட்டிகளுடன் கடந்துபோகும் மாட்டு வண்டிகள்தான் நகர்ப்புற நெருக்கடியில் கிடைக்கும் ஒரே ஆறுதல்.  சென்னையின் குறைகளை மட்டும் நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அதற்கென்று சில நிறைகளும் உண்டு. அது குறித்து "மெரினா' படத்தில் "வணக்கம் வாழவைக்கும் சென்னை' என்ற பாடலையும் எழுதியிருக்கிறேன். நகர வாழ்க்கைக் காக கிராமத்து சந்தோஷங்கள் பலவற்றை இழந்தது உண்மைதான்.

பாடலாசிரியராய் ஆவீர்கள் என்றோ, தேசிய விருதெல்லாம் வாங்குவீர்கள் என்றோ மாணவப் பருவத்தில் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?


இல்லை.

உங்கள் விருப்பப்படி உங்களை செதுக்கியவர் உங்கள் அப்பா. நீங்கள் தேசியவிருது பெறும் இந்த நேரத்தில் அவர் இல்லாததை எப்படி உணர்கிறீர்கள்?


தேசியவிருது அறிவிப்பு வந்தபோது, என் மனக்கண்ணில் இரண்டுபேர் வந்தார்கள். ஒருவர் என் தந்தை நாகராஜன். இன்னொருவர் என் ஞானத்தந்தை பாலுமகேந்திரா. என்னை உச்சிமுகர்ந்து வாழ்த்த அவர்கள் இல்லையே என்று பரிதவித்தேன்.

உங்களின் இன்றைய வளர்ச்சிக்கு உரமிட்டவர்கள் யார் யார்?


நான் சுயம்பு இல்லை. என்னை வளர்த்தவர்கள் நிறைய பேர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் காஞ்சி இலக்கிய வட்ட நாராயணன், கவிஞர் அறிவுமதி அண்ணன், "வீரநடை' படத்தின் மூலம் என்னைப் பாடலாசிரியராய் ஆக்கிய இயக்குநர் சீமான் அண்ணன், இயக்குநர் அருண்மொழி, பாலுமகேந்திரா, பட்டுக்கோட்டை பிரபாகர், பத்திரிகைத் துறையில் நக்கீரன் கோபாலண்ணன், பெ. கருணாகரன், என் முதல் பாட்டுக்கு இசையமைத்த தேனிசைத் தென்றல் தேவா, இன்றுவரை என்னைத் தொடர்ந்து பாடல் எழுதவைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா மற்றும் அனைத்து இயக்குநர்கள், இசையமைப் பாளர்கள், ரசிகர்கள் என்று இத்தனை பேரும் சேர்ந்துதான் என்னைப் பூத்துக் குலுங்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அதிக சந்தோஷம் என்றாலோ அதிக துக்கம் என்றாலோ அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?


இரண்டிலுமே நான் அழுதுவிடுவேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் என்னை சராசரியாய்த் தயாரித்துக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன்.

நீங்கள் கைதவறவிட்ட உறவுகள், நட்புகள் பற்றி?


மரணம், சில உறவுகளையும் நட்பையும் களவாடியிருக்கிறது. மற்றபடி தொடர்பு எல்லைக்கு வெளியே முகவரி தெரிந்தும் முகவரி தெரியாமலும் நிறைய நண்பர்களைக் கைதவறவிட்டிருக்கிறேன்.

உங்களால் மறக்கமுடியாத ரசிகர்- ரசிகை பற்றி?


உலகெங்கும் நிறைய ரசிகர்களைத் தேடிக் கொடுத்திருக்கிறது என் தமிழ். சென்னை பாண்டிபஜாரில் இருக்கும் ஒரு அசைவ உணவகம். சாப்பிட்டுவிட்டு நான் வெளியே வந்தபோது ஒருவர் ஓடிவந்து கைகுலுக் கினார். பின் சற்றும் எதிர் பாராதபடி என் கன்னத்தில் முத்தமிட்டு "இது ஆனந்த யாழுக்காக' என்று சொல்லிவிட்டு தன் பெயரைக்கூட சொல்லாமல் போய்விட்டார். இது தேசிய விருதுக்கு முன்பாக எனக்குக் கிடைத்த அன்பு விருது. இதேபோல் ஆப்பிரிக்க நாட்டின் பின்சீனியா நகரிலிருந்து நள்ளிரவில் வந்தது அந்தப் பெண் குரல். "நான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்தேன். அப்போது "பேசுகிறேன். பேசுகிறேன். உன் இதயம் பேசுகிறேன்' என்ற உங்கள் பாடலைக் கேட்டேன். எனக்கு வாழும் ஆசை வந்துவிட்டது. நன்றி' என்றார். அவரும் தன் பெயரைச் சொல்லாமலே போனை வைத்து விட்டார்.

உங்கள் கிராமத்துக் கேரக்டர்களில் உங்கள் நினைவில் அடிக்கடி வந்து போகும் கேரக்டர் எது?


பச்சையப்பன் என்கிற கேரக்டரை என்னால் மறக்கமுடியாது. தேநீர்க்கடை வைத்திருந்தார். கோடை என்றால் பனை ஏறி நுங்குக் கடையும் போடுவார். பார்வைக்கு நடிகர் செந்திலைப் போலவே தோற்றமளிப்பார். சுற்றுப்பட்டு கிராமத் தெருக்கூத்துகளில் அவர்தான் கட்டியக்காரர். எனக்கு சினிமா ஆசை வந்ததற்கு இவரும் ஒரு காரணமாக இருக்கலாம்.

உங்கள் பாடல்களில் உங்களுக்கு அதிகம் பிடித்த பாடல்கள் என்றால் எதையெதைச் சொல்வீர்கள்?


எல்லாப் பாடல்களும் என் மனக்கிளையில் மலர்ந்த பூக்கள்தான். எனினும் "7ஜி ரயில்வே காலனி'யின் "கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை', "டும்டும்டும்' படத்தின் "ரகசியமாய்... ரகசியமாய்', "நந்தா' படத்தின் "ஓராயிரம் யானை கொன்றால் பரணி', "காதல்' பட "உனக் கென இருப்பேன்', "வெயில்' பட "வெயிலோடு விளையாடி', கஜினியில் "சுட்டும் விழிச் சுடரே... சுட்டும் விழிச்சுடரே', "மதராசப் பட்டணம்' படத்தில் "பூக்கள் பூக்கும் தருணம்', "பையா' படத்தின் "என் காதல் சொல்ல நேரமில்லை', "சத்தம் போடாதே' பட "பேசுகிறேன் பேசுகிறேன்', தங்கமீன்கள் பட "ஆனந்த யாழை மீட்டுகிறாய்' தற்போது "சைவம்' படத்தின் உன்னிகிருஷ் ணன் மகள் பாடிய "அழகே அழகே' என ஒரு பட்டி யலே போடலாம்.

உங்கள் திரைப்பாடல்களுக்கு பலம் சேர்ப்பது மரபுப் பயிற்சியா? இல்லை புதுக்கவிதை முயற்சியா?


வார்த்தைகளுக்கு மரபுப்பயிற்சியும் வாழ்க்கை அனுபவத்திற்கு புதுக்கவிதை முயற்சியும் பலம் சேர்ப்பதாகக் கருதுகிறேன்.

விடலைப்பருவத்தில் உங்கள் மனதில் கல்லெறிந்த தேவதை பற்றி சொல்ல முடியுமா?


முதல் காதல் என்பது புத்தகத்திற்குள் ஒளித்து வைக்கும் மயிலிறகு மாதிரி. எந்தக் காலத்திலும் அது குட்டிபோடாது என்று தெரிந்தும், ஞாபக உணவை அதற்கு ஊட்டிக்கொண்டுதான் இருக் கிறார்கள். என் பால்யகால சகியை நினைக்கும் போதெல்லாம், தெருவடைத்த மார்கழி வாசல் கோலங்களும், மஞ்சள் நிறத்துப் பூசணிப்பூக்களும்தான் மனதில் வந்துவிட்டுப் போகின்றன.

நல்ல வரிகளை எழுதி, அதை இயக்குநரோ, இசையமைப்பாளரோ மாற்றச் சொன்ன சங்கட விபத்துக்களை நீங்கள் சந்தித்தது உண்டா?

பாடலாசிரியன் என்பவன் இசையமைப்பாளரின் இசைக்குறிப்பை சிதைக்காமல், வார்த்தைகளைத் தைக்கிறவன்- இதை நான் சொல்லவில்லை. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில் இளங்கோவடிகள் சொல்கிறார். எந்த நல்லவரியும் மெட்டுக்குள் அடங்கியிருந்தால் மாற்றச் சொல்ல மாட்டார்கள். எனவே இப்படிப்பட்ட சங்கட விபத்துக்கள் எனக்கு நேர்ந்ததில்லை.

நீங்கள் வெகுநாட்க ளாக எழுத நினைக்கிற படைப்பு எது?


காஞ்சிபுரத்தைக் களமாகக்கொண்டு ஒரு நாவலை 15 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கதையோட்டம் என்னை இழுத்துச் சென்றபடியே இருக்கிறது. நல்ல காற்று வீசுகிறபோது அது மழையாகப் பெய்யும்.

உங்கள் மனதில் இடம்பிடித்த இலக்கியப் படைப்புகள் எவை?


புதுமைப்பித்தனில் தொடங்கி, ஜி. நாகராஜன், சுந்தரராமசாமி, லா.ச.ரா, அசோகமித்திரன், தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, வண்ணநிலவன், கண்ணதாசன் என்று நகர்ந்து இப்போது எழுதும் லட்சுமி சரவணகுமார் என சொல்லிக்கொண்டே போகலாம். தமிழுக்கு நிகராக ஆங்கிலத்திலும் வாசிப்பவன் நான். எதைச் சொல்வது? எதை விடுவது?

நீங்கள் யாரைக்கண்டு பொறாமைப் படுகிறீர்கள்?


கவலைகளே இல்லாமல் எப்போதும் கடவுளைப்போலவே காட்சி தரும் குழந்தைகளைக் கண்டு!

உங்கள் இல்லத்துணைவி பற்றி?


என் மனைவி ஜீவலட்சுமி, என்னோடு இலக்கியங்களையும் என் பாடல்களையும் விமர்சித்து ரசிப்பவர். கண்ணதாசன் வரிகளில் சொல்வதானால் "என் தேவையை யார் அறிவார்? அவளைப் போன்ற தெய்வம் ஒன்றே அறியும்' என்று பாடலாம்.

உங்கள் செல்ல மகன்?

மகன் ஆதவன் நாகராஜுக்கு இப்போது ஏழு வயதாகிறது. மகன் பிறந்த பிறகுதான், என்மீது என் தந்தை வைத்திருந்த பாசத்தை முழுதாக உணர்கிறேன். என் மகனே நாளை உனக்கொரு மகன் பிறந்த பிறகு, என் அன்பை நீ உணர்வாய்.

நீங்கள் ஆத்திகவாதியா? நாத்திகவாதியா?


என் அப்பாவைப்போலவே நானும் நாத்திகவாதி.

தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நம்புகிறீர்களா?


கண்டிப்பாக. தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல; தமிழ்ச் சமூகமும் கவிஞர் களை நன்றாகவே கௌரவப்படுத்துகிறது. அதனால்தான் சென்னை மெரினாவில் கவிஞர்களின் சிலைகள் அதிகமாக இருக்கின்றன.

இலக்கிய ஆளுமைகளான வைரமுத்து, மேத்தா, ரகுமான், தமிழன்பன் போன்றோர் பற்றி உங்கள் எண்ணம் என்ன?


வைரமுத்து புதுக்கவிதையின் கம்பீரம்! மேத்தா, வானம்பாடிகளின் வானம்! அப்துல்ரகுமான், கஜல் கவிதைகளின் கனிமரம். ஈரோடு தமிழன்பன் படிமங்களின் பாசறை இப்படி ஒவ்வொருவரைப் பற்றியும் நிறைய சொல்லலாம்.

உலகின் உச்சபோதை எது?


நம் முப்பாட்டன் வள்ளுவனே இந்தக் கேள்விக்குத் தெள்ளத்தெளிவாய் பதில் சொல்கிறான். உலகின் உச்ச போதை காதலா? காமமா? பணமா? புகழா, மதுவா? இவை எதுவுமே இல்லை.

"தம் மக்கள் மொழி கேட்டல்...'

வங்கிக் கணக்கிற்காக வாழ்கிற வாழ்க்கையில், இதயத்திற்காக செலவிட நேரம் இருக்கிறதா?


நான் இதயத்துடிப்புகளையே வங்கிக் கணக்காக எண்ணி வரவு வைக்கிறவன்.

"ஆனந்த யாழை மீட்டுகிறாய் "பாடலுக்கு தேசிய விருதை எதிர்பார்த்தீர்களா?


எல்லாப் பாடல்களுமே மக்களிடம் அங்கீகாரம் பெறவே எழுதப்படுகின்றன. அந்தவகையில் இந்தப் பாடல், மக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதேசமயம் நான் எதிர்பார்க்காத நிலையிலும், தந்தை- மகள் உறவு பற்றி இந்த உயிரோட்டமான பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்வை ஏற்படுத்துகிறது. இந்த விருதை என் தமிழ்ச்சமூகத்திற்கு நெகிழ்ச்சியோடு சமர்ப்பிக்கிறேன்.

"தங்க மீன்கள்' இயக்குநர் ராம் பற்றி?


ராம், என் கல்லூரிக்கால நண்பன். என்னைவிட என் கவிதைகளை ஆசை தீர ரசிப்பவன். "கற்றது தமிழ்', "தங்கமீன்கள்' படங்களை அவன் உருவாக்கிய ஒவ்வொரு நொடியிலும் நான் அவனோடு இருந் திருக்கிறேன். அவன் இன்னும் நிறைய உயரங்களைத் தொடுவான்.

இன்னொன்றையும் நான் இங்கே சொல்லியாகவேண்டும். "ஆனந்தயாழை' பாடல் வெளி வந்தபோது என்னைத் தொடர்புகொண்ட நக்கீரன்கோபாலண்ணன், எங்க பாப்பா சொல்லிதான் உங்க "ஆனந்த யாழை' பாடலைக் கேட்டேன். இதுக்கு தேசிய விருது கிடைக்கும் தம்பி என்றார். அவர் சொன்னது பலித்துவிட்டது. அதேபோல் இன்னொன்றயும் பகிர விரும்புகிறேன். 94-ல் கோபாலண்ணன் நடத்திய "சிறுகதைக் கதிர்' இதழில் 94-ல் வேலைக்கு சேர்ந்தேன். நான் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்ட முதல் நாள், தம்பி என்று என்னை மீண்டும் அழைத்தார். என் பையில் ஆயிரம் ரூபாயைத் திணித்து, "இது உங்கள் வேலைக்கான அட்வான்ஸ் இல்லை. அண்ணனின் அன்புத் தொகை' என்றார். நெகிழ்ந்து நின்றேன். இப்படிப்பட்ட அவரது உன்னத குணங்கள்தான் அவரை உயரத்திலேயே வைத்திருக்கிறது.


நன்றி: நக்கீரன் 
01.05.2014

Monday, 23 June 2014

கலைஞர் 91 - வைரமுத்து சிறப்பு நேர்காணல்!

 

மிழுக்குப் புது நிறம் கொடுத்தவர். வசீகரச் சொற்களால் தமிழன்னையின் ஆடையை மட்டுமல்ல; அவளையே புதிதாக்கியவர். இவர், வியப்புக் காடாய் விரியும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர்.

இவரது திரைப்பாடல்கள், வறண்ட செவிகளையும் இலக்கிய மழையில் நனைத்து, அவைகளுக்கு ருசி உணர்வை உண்டாக்கின. இவரது "தண்ணீர் தேசம்', "கருவாச்சி காவியம்', "மூன்றாம் உலகப்போர்' போன்ற ஆக்கங்கள், வாழ்வியலிலின்மீது கொண்ட அக்கறையால் உருவான உன்னதப் புதினங்களாகும்.

இவரது காந்தக்குரலும், மேன்மைமிகும் மேடைகளில் கவித்துவமாய்த் தமிழை ஆண்டு கொண்டிருக்கிறது.

"கள்ளிக்காட்டு இதிகாசம்' படைப்புக்காக "சாகித்ய அகாடமி' விருதையும், திரைப்பாடல்களுக்காக ஆறுமுறை தேசிய விருதுகளையும் பெற்ற இவரைத்தேடி, இந்த ஆண்டு பத்மபூஷண் விருதும் பரவசமாய் ஓடிவந்தது. நோபல் பரிசை நோக்கி நகரும் இவரது இலக்கியப் பயணம், கம்பீரம் இழக்காமல் களைகட்டிக் கொண்டிருக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞரோ, பிரமிப்புகளைத் தேக்கி வைத்திருக்கும் தமிழின் பிரபஞ்சப் பெருவெளி. 91-ஐத் தொடும் கலைஞரை உளமார வாழ்த்துவது இலக்கிய உலகின் இதயப்பூர்வமான கடமை.

அவ்வகையில், கலைஞரின் காதலுக்குரியவராகவும் கலைஞரின் ஆத்மார்த்தமான இலக்கிய நண்பராகவும் திகழும் கவிப்பேரரசரை, கலைஞரைக் குறித்த கேள்விகளோடு சந்தித்தோம்.

கேள்விகளைக் கேட்ட நொடியிலேயே, கவிப்பேரரசின் வாயிலிலிருந்து வார்த்தைகள் கவித்துவமாகப் பிரவாகமெடுத்தன. வார்த்தைகள் பூக்களாய் மலர்ந்தன. அவற்றில் நறுமணம் கசிந்தது.

இருபது நிமிடம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட நேர்காணல், உணர்ச்சியின் உத்வேகத்தால் முக்கால் மணி நேரத்துக்கும் மேலாய் நெகிழ்வாய் நீண்டது.

வைக்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும், உற்சாகமாகவும் கம்பீரமாகவும் விடைதந்தார்.

வரும் ஜூலை 13-ல் மணிவிழா காண இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் சிகரப் பேட்டி இதோ....

கலைஞர் என்ற சொல்லைக்கேட்ட மாத்திரத்தில் உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் என்ன?


வேறு எந்தத் தனிமனிதருக்கும் அல்லது தலைவருக்கும் இல்லாத ஒரு பேராற்றல் கலைஞரிடம் இருப்பதைப் பார்த்து நான் திகைக்கிறேன். எழுத்து, சொல், செயல், இந்த மூன்றிலும் செப்பம்- மூன்றிலும் ஒரு நுட்பம்- மூன்றிலும் ஒரு தனி பாணி- இந்த மூன்றும் இயைந்து நிற்கும் பேராற்றல் கலைஞரிடம் இருப்பதுபோல், சமகாலத்தில் யாரிடமும் நான் கண்டு வியந்ததில்லை. மேலும் கலைஞரை அவரது தீராத உழைப்பில் நான் வியக்கிறேன்.

கலைஞரின் இலக்கிய சாதனைகள் குறித்து?


தமிழ் இலக்கியம் என்பது புலவர்களுக்கு, பண்டிதர்களுக்கு மேட்டுக்குடி மக்களுக்கு அல்லது புலமையின் பொழுதுபோக்குக்கு என்று இருந்த நிலையை முதலில் மாற்றியவன் மகாகவி பாரதி. அதற்குப் பிறகு தமிழ் இலக்கியத்தை வீதிக்குக் கொண்டுவந்தது திராவிட இயக்கம்.

அப்படி வீதிக்குக் கொண்டுவந்த முதல் மனிதர்; பேச்சால் அண்ணா. எழுத்தால் அண்ணா. திரையுலகில் அண்ணா. இதைத் தொடர்ந்து முழுமைசெய்தவர் கலைஞர்.

தமிழ், இன, மொழி அடையாளங்களை மீட்டெடுத்ததில் அவருடைய பங்கு அளப்பரியது. சிலப்பதிகாரத்தை அவர் நவீனப்படுத்தியபிறகுதான் தமிழனுக்கென்று ஒரு மகாகாவியம் உண்டு என்பதைத் தமிழனம் உணர்ந்தது.

தமிழினத்திற்கு வெளியேயும் அது உணரப்பட்டது. சங்க இலக்கியத்தை எளிமை செய்தல், பழைய மரபுகளை மீட்டெடுத்தல் என அவரது தேர் ராஜபாட்டையில் நகர்ந்தது.

தொல்காப்பியத்திற்கு உரையாக, தொல்காப்பியப் பூங்கா என கவிதை வடிவில் அவர் எழுதியதையும் நான் பெரிதும் வியக்கிறேன். ஏனென்றால் தொல்காப்பியம் என்பது புலவர்களால்கூட தொடமுடியாத உயரத்தில் இருப்பது.

இலக்கணம்போல் ஓர் இலக்கியம் என்று சொல்லவேண்டும் தொல்காப்பியத்தை. இலக்கியம்போல் ஓர் இலக்கணம் என்று சொல்லவேண்டும் திருக்குறளை. இந்த இரண்டுக்கும் அவர் எழுதிய உரைகள் பொதுமக்கள் மத்தியில் அவைகளைக் கொண்டு சென்றன. இந்தப் பெருமை கலைஞருக்குதான் உண்டு. புலவர்களும் பண்டிதர்களும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களும் இந்தப் பணியை ஆற்றியிருந்தால் அது மாணவர்களை மட்டுமே சென்று அடைந்திருக்கும்! மாணவர்களைத் தாண்டி மக்களை இவை சென்று அடைய வேண்டுமென்றால் அதற்கு முகம் வேண்டும். அந்த முகம் கலைஞருக்கு இருந்தது. அதை எடுத்துச் சொல்லும் திறன் வேண்டும். அந்தத் திறன் கலைஞருக்கு இருந்தது. அதை எடுத்துச் சொல்ல ஒரு தளம் வேண்டும். அந்தத் தளமும் இயக்கம் என்ற பீடமாகக் கலைஞருக்கு அமைந்தது. இது எல்லாருக்கும் வாய்க்காது. பிறகு, திரையுலகில் அவர் எழுதிய வசனங்களை அசை பிரித்தால் புதுக்கவிதை என்று சொல்லத்தோன்றுகிறது.

அவருடைய பழைய பராசக்தியையும் பழைய மனோகராவையும் திரும்பிப் பார்த்தால் அங்கே புதுக்கவிதை வீச்சுக்களை நம்மால் காணமுடிகிறது. கலைஞருடைய வசனங்களில் ஊளைச்சதையற்ற வார்த்தைகளை நான் பார்த்தேன். அலங்காரங்கள்கூட அர்த்தத் தோடு இருக்கவேண்டும்.

அடைமொழியை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது என்று கவிஞர் சுரதா சொல்லுவார். தாமரை என்று சொல். செந்தாமரை என்று சொல்லுகிறபோது சிவப்பு என்ற அடையை அனாவசியமாகப் பயன்படுத்தாதே என்று அவர் சொல்லுவார். அடைமொழியைக்கூட அளந்து, அர்த்தத்தோடு பயன்படுத்திய ஆற்றல் கலைஞரிடம் உண்டு. என்றைக்கோ அவர் எழுதிய உரைநடைகள் இன்றைக்கும் எடுத்தாளப்படுவது ஆச்சரியமில்லையா?

தமிழ் இலக்கியத்தில் வெண்பாக்களும் விருத்தங்களும் பழமொழிகளும் மேற்கோள் காட்டப்படுவது இயல்பு.

எந்த ஒரு மேற்கோள் வடிவமானாலும் அது செய்யுள் என்ற பாத்திரத்திற்குள் செப்பமாக உட்கார்ந்திருக்க வேண்டும்.

 செய்யுள் என்ற பீடத்தில் இருக்கிற அல்லது யாப்பு என்ற கட்டமைப்பில் இருக்கிற சொற்களை மட்டும்தான் தமிழன் மேற்கோள் காட்டுவான். முதன்முதலில் உரைநடை மேற்கோள்காட்டப்பட்டது என்றால் அது கலைஞருடைய உரைநடைதான்.

"ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்' என்று கலைஞர், பராசக்தியில் எழுதினார். பிரிட்டிஷ் ராஜகுடும்பத்தின் உயரமான பெண்ணும், உயரமான பெண்களில் துயரமான பெண்ணுமான டயானா இறந்தபோது, ஒரு பத்திரிகை அந்தச் செய்திக்குத் தலைப்பிட்டது "ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்' என்று.

எழுதப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பின்னும், ஒரு உலக நிகழ்வுக்குத் தலைப்பாக அமையக்கூடிய எழுத்து கலைஞரின் எழுத்து. அது ஆச்சரியமில்லையா? இன்னும் சொல்லலாம். அவர் ஆற்றல் ஒரு பேட்டிக்குள் முடிகிற பொருளல்ல, ஒரு கிளிஞ்சல் கொண்டு கடலை இறைத்துவிட முடியாது.


ஒரு திரைப்படப் பாடலாசிரியராக இருந்து, கலைஞரின் திரைப்பாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?


கலைஞர், திரைப்படப் பாடல்களை அளந்து எழுதியிருக்கிறார். அதிலும் அழகாக எழுதியிருக்கிறார். எண்ணிக்கையில் குறைவாக எழுதியிருக்கிறார். ஆனால் எண்ணங்களில் வலிமையாக எழுதியிருக்கிறார்.

"பூமாலை நீயே', பாடலில் நீதிக்கட்சித் தலைவர் பன்னீர்செல்வத்தைக் கொண்டு வந்து, திராவிட இயக்க முத்திரையைப் பதித்திருக்கிறார். வசனங்களில் தனது சமகாலத் தோழர்களின் பெயர்களைப் பதிவு செய்து பாசத்தைக்காட்டியிருக்கிறார்.

சேரன் செங்குட்டுவன் வசனத்தில்,

"அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள். ஆசைத்தம்பி இளங்கோ உன்னை இகழ்ந்தார்கள். நெடுஞ்செழியப் பாண்டியரே உன்னை இகழ்ந்தார்கள், என்றெல்லாம் தன் சமகாலத் தோழர்களை இலக்கியத்திற்குள் கொண்டுவரும் பெருந்தன்மை அவருக்கு இருந்தது.

அதே பாணியைத்தான் நான் முன்னர் தொட்டுக்காட்டிய "பூமாலை நீயே' பாட்டில் கையாண்டார். அவருடைய பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது "வாழ்க்கை எனும் ஓடம்' ஆகும். அது பாட்டல்ல. பாடம்.' ஒருமுறை சில அரசு அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். எய்ட்ஸ் தடுப்பு குறித்து சில வரிகள் எழுதித்தர முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள். நான் சொன்னேன்... "கலைஞரை முதலமைச்சராக வைத்துக்கொண்டு என்னிடம் வந்து இதற்கு வரிகள் கேட்கிறீர்களே, அவர் எழுதிய வரிகளே பொருத்தமாக இருக்குமே. வருமுன் காப்பவன்தான் அறிவாளி அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி என்ற கலைஞரின் வரிகளை எழுதிக் கொள்ளுங்கள்' என்றேன். சிரித்துக்கொண்டே எழுதி வாங்கிக்கொண்டு போனார்கள். இப்படி எல்லாத் துறைகளுக்கும் இவரது பாட்டு பயன்பட்டுக்கொண்டிருக்கிறது.

காஞ்சித்தலைவனில் ஒரு பாட்டு எழுதியிருப்பார்.
"மகிமைகொண்ட மன்னரின் மீது எதிரிகளின் கால்கள்!
மலர் பறிப்ப தில்லையடா வீரர்களின் கைகள்'

இவையெல்லாம் தமிழனுக்கு உணர்ச்சி கொடுத்த உயிர்ப்பான வரிகள்- குறைவாக எழுதினாலும் நிறைவான கருத்துக்களோடு திகழுகின்றன கலைஞருடைய பாடல்கள்.

கலைஞரை எப்போது, எந்த வயதில் எவ்விதமாக அறிந்தீர்கள்? அவரை எப்போது முதன்முதலாகச் சந்தித்தீர்கள்?


கலைஞரை நான் உணர்ந்துகொண்டது சின்ன வயதில். எனக்கு அப்போது பன்னிரண்டு பதின்மூன்று வயதிக்கும்! என் சித்தப்பா பாண்டித்தேவர், பெரியகுளத்தில் இருந்து வாங்கி வந்த பராசக்தி வசனப் புத்தகம் அந்த வயதில் என் மடியில் விழுகிறது. பராசக்தி வெளிவந்து ஓராண்டுக்குப் பிறகுதான் நான் பிறக்கிறேன். கலைஞர் கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்றுத் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தபோது நான் இரண்டுநாள் குழந்தை. நான் பிறந்து பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள், தமிழ்ச் சமூகத்தில் "பராசக்தி' ஊடறுத்துப் பயணம் செய்துகொண்டிருந்தது. ஐம்பது அறுபதுகளில் பிறந்த, படிக்கத்தெரிந்த கலைஞர்கள் அனைவரும் கலைஞரின் "பராசக்தி', "மனோகரா'வில் மனம் பறிகொடுக்காமல் இருந்திருக்க முடியாது. அன்றைக்கிருந்த தலைமுறைக்கு ஒரு தமிழ் ஊட்டம் கிடைத்தது என்று சொன்னால் அது கலைஞரின் வசனங்களால்தான்.

கலைஞரின் விரலும் சிவாஜியின் குரலும்- இந்த இரண்டும் இல்லையென்றால் தமிழனுக்குக் காதுகளின் வழியாகத் தமிழ் பாய்ந்திருக்காது. "இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற பாரதியின் பாடலுக்கு கலைஞரும் சிவாஜியும்தான் உரையெழுதியவர்கள்.

கலைஞரின் தமிழை சிவாஜியின் குரலில் கேட்ட தமிழ்நாடு சிலிர்த்தது. அப்படி அறிந்தபோது யார் கலைஞர் என்ற சின்ன வயதுக் கேள்வி எனக்குள் வளர்ந்தது. நான் வளர வளர அவர்மீது ஒரு பற்று வளர்ந்தது. கலைஞர் யார்? எப்படி இருப்பார்? என்ற எண்ணம் எனக்குள் ஓடியது. "ஆறுமாதக் கடுங்காவல்' என்று ஒரு புத்தகம் அப்போது வந்தது. அதில் மீசைமுளைக்காத கலைஞரின் சின்ன வயதுப்படம் பிரசுரமாகியிருந்தது.  நான் ஆசையாக அவருக்கு  மீசை வரைந்து பார்த்தேன். அந்தப் படம் இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அண்ணா மறைந்த போது அவர் இரங்கல் கவிதை ஆற்றினார்.

அப்போது நான் பள்ளி மாணவன். எங்களூர்த் திடலில், அங்கிருந்த பஞ்சாயத்து வானொலி யின் கீழே ஊரே கூடியிருந்தது. கலைஞரின் கவிதையை அழுதுகொண்டே கேட்டோம். அந்தக் கவிதையின் தாக்கம் கலைஞரை என் இதயத்தின் மையத்தில் கொண்டுவந்து இருத்தியது.

அவரை நான் முதன்முதலாகப் பார்த்தது; பச்சையப்பன் கல்லூரியில் நான் படிக்க வந்தபோதுதான். 71-ல் நான் பி.யூ.சி படித்தபோது அவர் முதலமைச்சர்.

அப்போது பச்சையப்பன் கல்லூரியில் புலவர்கள் மாநாடு நடந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை, எந்த மாணவரும் வரவில்லை. புலவர்களும் அறிஞர்களும் வந்திருந்தார்கள். நான் ஒருவன் மட்டுமே மாணவன். கூட்டமற்ற கூட்டம் அது. அங்கே கலைஞர் கம்பீரமாக  நடந்து வந்தார். நான் அவரைத் திரும்பிப்பார்க்கிறேன். அதுதான் அவர்மீது நான் பதித்த முதல் பார்வை. மேடையில் அமர்ந்தார். சொற்பொழிவு செய்தார். அந்த விழாவில் புலவர்களுக்கு ஒரு பை  வழங்கப்பட்டது. பையில் ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை என்றார்கள்.

கலைஞர் சொன்னார், புலவர்கள் வெறும் பையோடும் வெறும் கையோடும் போகக்கூடாது. அவர்களுக்கு நிதி வழங்குகிறேன் என்று ஒவ்வொரு பையிலும் 100 ரூபாய் இட்டு வழங்கச் செய்தார். கலைஞர் புறப்பட்டார். அப்போது அவர் பின்னாலேயே சென்று கார் கதவை அடைத்தேன். காவலர்கள் நின்றார்கள்.  தள்ளி நின்றுகொண்டேன். நான் வணங்கினேன். அவர் புன்னகைத்தார். நான் யார் என்று அப்போது அவருக்குத் தெரியாது. அவரின் அன்றைய புன்னகை இன்னும் என் இதயத்தின் அலமாரியில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.


கலைஞர் உங்கள்மீது வைத்திருக்கிற அக்கறை பற்றியும் நீங்கள் அவர்மீது வைத்திருக்கும் அக்கறை பற்றியும் சொல்லுங்கள்?

இது மிகவும் உணர்ச்சிகரமான உணர்வை ஏற்படுத்தும் கேள்வி. அவர் என்மீது வைத்திருக்கிற அக்கறையைப் பார்த்து திகைத்து நெகிழ்கிறேன். அவர்மீது நான் வைத்திருக்கும் அக்கறை இயல்பானது.

ஒருமுறை நான் அவரிடம் சொல்லிவிட்டு இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம்போனேன்.

இந்தோனேஷியாவில் விமான நிலையத்திற்கு நாங்கள் வந்தோம். அங்கே நானும் நண்பர் சிங்கப்பூர் முஸ்தபாவும் இந்தோனேஷியாவின் "கருடா' விமானத்தில் பயணம் செய்யப் பயணச்சீட்டு பெற்றுக்கொண்டோம். ஜகார்த் தாவில் இருந்து சிங்கப்பூருக்குப் பயணம். முஸ்தபாவின் உதவியாளர் மாலிக் சொன்னார்.

ஏன் இந்த விமானத்தில் போகிறீர்கள்.  இது பழைய விமானம். அதிலும் இது ஒன்றரை மணிநேரம் கழித்துத்தான் புறப்படும். அதற்கு முன்னால் சிங்கப்பூர் விமானமான "சில்க் ஏர்'  இன்னும் 20 நிமிடத்தில் புறப் படப் போகிறது. அது புத்தம் புது விமானம் என்றார். பயணச்சீட்டை மாற்றுவதற்கு எனக்கு வாய்ப்பிருக்கிறது. எனவே சீட்டை ரத்து செய்துவிட்டு அந்த விமானத்துக்கு ஏற்பாடு செய்யட்டுமா என்றார்.  ஏற்பாடு செய்யுங்களேன் என்றார் என் நண்பர் முஸ்தபா. நான் சொன்னேன். "போர்டிங் பாஸ்' வாங்கியாகிவிட்டது. ஒரு மணி நேரம் தாமதித்துப்போனால் தப்பில்லை.

அதுவரை பேசிக் கொண்டிருப்போம் என்றேன். உதவியாளர் மாலிக் எங்களை முன்னால் சென்று வரவேற்க அந்த விமானத்தில் புறப்பட்டுப் போய்விட்டார். நாங்கள் ஒரு மணிநேரம் கழித்து இந்தோனேஷிய விமானத்தில் புறப்பட்டோம். போய் இறங்கினோம். மாலிக் எங்களை வரவேற்க வந்திருக்கவில்லை. எங்காவது தேநீர் விடுதியில் இருப்பாரோ என்று தேடினோம். கிடைக்கவில்லை. சற்று நேரத்தில் சிங்கப்பூர் விமானம் தொடர்பு எல்லையில் இல்லை என்று எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. ஒருவேளை அது மலேசியா சென்றுவிட்டு இங்கு வருமோ என்ற ஐயத்தில் நாங்களிருந்தோம். சற்று நேரத்தில் விமானம் காணக்கிடைக்கவில்லை என்ற தகவல் வந்தது. அஞ்சினோம். கொஞ்ச நேரத்தில் விமானம் எங்கோ விழுந்துவிட்டது என்று சொன்னார்கள். அடுத்த நாற்பது நிமிடத்தில் கடலில் விமானத்தின் உதிரி பாகங்களும் பொருட்களும் பிணங்களும் பணங்களும்  மிதக்கின்றன என்ற கொடுந்தகவல் வந்தது. அந்த விமானத்தில் பயணித்த ஒருவர்கூட உயிரோடு இல்லை. அந்தப் புதுவிமானம் எப்படி விபத்தைச் சந்தித்தது என்று நாங்கள் கலக்கத்தோடு விசாரித்தோம். அந்த விமானிக்குக் கடன் தொல்லை இருந்திருக்கிறது. தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். தன் தற்கொலையோடு விமானத்தையும் சாகடித்திருக்கிறார்.

இதைக்கேட்டு எங்கள் நெஞ்சு வெடித்து விட்டது. செய்தி உலகமெல்லாம் பரவுகிறது. அது தமிழ்நாட்டுக்கும் வருகிறது. அந்தச் செய்தி வந்த பதினைந்து, இருபது நிமிடங்களுக்குள் என் நண்பர்களுக்கெல்லாம் கலைஞரின் செய்தி பறக்கிறது. வைரமுத்து எங்கே என்று விசாரிக்கிறார்.

நான் இந்தோனேஷியாவில் இருந்து புறப்படும்போது சிங்கப்பூர் கிளம்புகிறேன் என்று கலைஞரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். சிங்கப்பூர் விமானம் கடலில் விழுந்தது. அதில் ஒரு இந்தியரும் பலி என்று தகவல் வந்ததால் கலைஞர் பதறிவிட்டார். என் நண்பர்களையெல்லாம் தொடர்புகொண்டு வைரமுத்து எங்கே என்கிறார்.   இதையறிந்த ஒருவர் என்னை நோக்கி ஓடிவருகிறார். செக்யூரிட்டிகளை எல்லாம்  தாண்டிக்கொண்டு  ஓடிவருகிறார். வந்து கலைஞர் உங்களைத் தேடுகிறார். தேடிக்கொண்டிருக்கிறார் என்றார். உடனே அங்கிருந்து கலைஞரைத் தொடர்பு கொண்டு, அய்யா, நான் நலமாக இருக்கிறேன் என்றேன். இப்பத்தான் எனக்கு நிம்மதி என்றார். ஒரு முதலமைச்சர் தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு வைரமுத்துவுக்கு என்ன ஆயிற்று என்று கவலைப்படுகிறார் என்றால் இந்த அக்கறையை என்னவென்று சொல்வது.

அவர்மீது எனக்கிருக்கிற அக்கறையும் அளப்பரியதுதான். அவர் அறுவைச் சிகிச்சைக்குப் போனபோது ஒரு பதினைந்து நாள், காலைச் சிற்றுண்டியையே நான் சரியாகச் சாப்பிடவில்லை. அவரது ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே இருந்து ஒரு கவிதை எழுதினேன். அவர் நலமாகி வந்தபிறகு அதை அவர் கையில் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டுக் கண்ணாடியைத் தூக்கிக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

என்னை அருகிலே வருமாறு சைகை செய்தார். சென்றேன். என் நெற்றியிலே முத்தமிட்டார். என் தலையைத் தடவி வாழ்த்தினார். அந்தக் கவிதை முரசொலியில் வந்திருந்தது. அதைப் படித்துவிட்டு சின்னக்குத்தூசியார்  பாராட்டினார்.. பொதுவாக அவர் கவிதைகளைப் பாராட்ட மாட்டார்.  அவர் கட்டுரையாளர் அவரே பாராட்டியது பெருமகிழ்வை ஏற்படுத்தியது.

எல்லா வகையிலும் சோதனைகளையே சந்தித்து வரும் கலைஞரின் இதயம், எப்படி அவற்றையெல்லாம் தாங்குகிறது?


அவர், வாழ்க்கையில் சுகங்களைவிட அல்லல்களை அதிகமாக அனுபவத்திருக்கிறார். அவர் உடலும் மூளையும் துன்பத்துக்கு தயாராகிவிட்டன. அதாவது  வள்ளுவர் குறளுக்கு உரையெழுதிய கலைஞருக்கு வள்ளுவர் குறளேதான் பொருந்தும்.

"இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்'

இன்பம் வந்தால்தான் அவருக்கு ஆச்சரியம். இது நமது இயல்புக்கு விரோத மாயிற்றே. இந்த வெற்றி நமது இயல்புக்கு அந்நியமாயிற்றே. துன்பம்தானே நமது வாழ்வின் அன்றாட உணர்வு. துன்பம் தானே நமது இயல்பு என அப்படியே பழகிவிட்டார். அதனால் அவரைத் துன்பம் எதுவும் செய்வதில்லை. துன்பம் இல்லாத நாள் கலைஞருக்குத் துன்பமான நாள்.

கலைஞரின் சமயோஜித புத்தி பற்றி?

நிறையச் சொல்லலாம். சொல்லிக் கொண்டே இருக்கலாம். கொள்கையோடு கலந்து வரும் கலைஞரின் சமயோஜித புத்தியை நான் மிகவும் ரசிப்பேன். ஒருமுறை சட்டமன்றத்தில் ஹெச்.வி. ஹண்டே கலைஞர்  பற்றி, மூன்றாந்தர அரசென்று விமர்சனம் செய்துவிட்டார். இதைக்கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அவர்மீது பாயப்போய்விட்டார்கள். ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் கைகாட்டி அமர்த்திய கலைஞர், "ஹண்டே, தவறாகச் சொல்கிறீர்கள். இது மூன்றாம்தர அரசல்ல. நான்காம் தர அரசு பிராமண, சத்ரிய, வைசிய, சூத்ர என்ற வரிசையில் இது சூத்திரர்களின் அரசு' என்று சொன்னார். இந்த பதிலைக் கேள்விப்பட்டு பெரியார் ஆடிப்போய்விட்டாராம். பெரியார் சாதாரணமாக நெகிழமாட்டார்.  அப்படிப்பட்ட பெரியாரையே இந்த பதில் உணர்ச்சிவசப்படுத்தியது. இது கொள்கையோடுகூடிய சமயோஜிதம். தனது பேராற்றல் முழுவதையும் இயக்கத்தை வளர்ப்பதற்காகப் பயன்படுத்துகிறவர் கலைஞர்.

இங்கு பிறப்பதற்கு பதில் கலைஞர் கிரேக்கத்திலோ ஜெர்மனியிலோ பிறந் திருந்தால்?


நாம் அவரை இழந்திருப்போம். திருக்குறள் வேறு ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்தால், உலக இலக்கியம் ஆகியிருக்கும் என்பது உண்மை. தமிழர்களுக்கு அந்தச் செல்வம் இல்லாது போயிருக்கும். அது ஒரு வெறுமை. கலைஞர் இந்த மண்ணில் பிறக்காமல் வேறு நாட்டில் பிறந்திருந்தால் உலகத்தலைவர் ஆகியிருப்பார் என்பது உண்மை. ஆனால்  தமிழ்நாடு அந்தப் பெருமையை இழந்திருக்கும். அது வெறுமை.

கலைஞர் ஒரு தேர்தலில்கூட  நின்று தோற்றதாய்ச் சரித்திரமில்லையே இது எப்படி?


தமிழ்நாட்டு மக்கள் அவரை மட்டும் இழக்கத் தயாராக இல்லை.

வாஜ்பாய் போன்ற பல தேசியத் தலைவர்கள் 80, 85-ஐத் தாண்டியதுமே அரசியலில் இருந்து ஓய்வுபெற்று விடுகிறார்கள். கலைஞர் மட்டும் எப்படி 91- ஐத்தொட்டும் அரசியலில் தொடர்கிறார்?


இரண்டு செய்திகளைப் பார்க்கவேண்டும். உடல்நலம், மூளை வளம்.  இரண்டும் எல்லோருக்கும் ஒத்துழைப்பது இல்லை. வாஜ்பாய் பெரும் தலைவர்தான். தனிப்பட்ட முறையில் என்மீது அன்பு செலுத்துகிறவர். நான் அவர்மீது பாசமுள்ளவன். அவரோடு பழகியிருக்கிறேன்.

அவர் கலைஞரைவிட  8 மாதம் இளையவர்.

ஆனால் உடல்நலம் அவருக்கு ஒத்துழைக்க வில்லை. உடல்நலம் அவருக்கு இருந்திருந்தால் அவரும் அரசியலில் இருந்திருப்பார். கலைஞரின் வாழ்க்கை சக்கர நாற்காலிக்கு நகர்ந்திருந்தாலும் அவர் சிறகுகள் முறியவில்லை. இன்னொன்று அவரது குடும்பத்தின்  மரபணுக்கள், அவர்கள் எல்லோரையும் நீண்டநாட்கள் வாழவைக்கும் தன்மை கொண்டவை. அவர் குடும்பத்தில் எல்லோருமே 90 வயதுக்கு மேல்தான் வாழ்ந்திருக்கிறார்கள். (முரசொலிமாறன் தவிர). மரபணுக்கள் அவருக்குப் பாதி உதவி செய்திருக்கின்றன. தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பவன் முதுமை ஆகமாட்டான். சொல்லால், செயலால், எழுத்தால் தன்னைக் கலைஞர் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார். போன மாத "இனிய உதய'த்தில் என்ன வந்திருக்கிறது என்று கேட்டால் உடனே சொல்லுவார். ஏதாவது உரையாடலுக்கு மத்தியில் நக்கீரனில் அந்தச் செய்தி வந்திருக்கிறது பார் என்பார். அவ்வளவு நினைவாற்றல் உள்ள அவருக்கு பழைய நடிகர்களான டி.ஆர். ராஜகுமாரியும் சாரங்கபாணியும்தான் தெரியும் என்றில்லை, இன்று இருக்கிற அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், ஆர்யா, நயன்தாரா, ஹன்சிகா வரைக்கும் அவருக்குத் தெரியும். இது அவரது கலைமீதான ஈடுபாட்டின் அடையாளம். இந்த வயதிலும் கிரிக்கெட்டில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரே என்பது எனக்கு ஆச்சரியம். நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. அவர் கிரிக்கெட்மீது ரொம்ப ஆர்வமாக இருப்பார். அவர் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்தால் யாரோடும் பேசமாட்டார். அவர் கிரிக்கெட்டில் உட்கார்ந்தால் நான் விரைவில் விடைபெற்று வந்துவிடுவேன்.

அவருக்குக் கிரிக்கெட்டில் அவ்வளவு ஈடுபாடு. யார் ஜெயிப்பார் என்று சரியாகச் சொல்வார். ஸ்கோரையும் மற்றவர்களுக்குச் சொல்வார். அதுபோன்ற ஈடுபாடு அவரை இளமையாக வைத்திருக்கிறது.

கலைஞருக்கு தமிழர்கள் செலுத்த வேண்டிய நன்றி என்ன?


காட்டவேண்டிய நேரத்திலாவது அதைக் காட்டினால் போதும்.

கலைஞரிடம் உங்களுக்குப் பிடித்ததும் பிடிக்காததும் என்ன?


பிடித்தது; மன்னிப்பது! பிடிக்காதது; தவறுகளையும் மன்னிப்பது.

கலைஞருக்கு இன்னும் கிடைக்கவேண்டிய சிறப்புகளென்று எதைக் கருதுகிறீர்கள்?  91-ல் அடியெடுத்து வைக்கும் அவருக்கு நீங்கள் சொல்லும் வாழ்த்துகள் என்ன?


திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது பலருக்கும் வழங்கப் பட்டிருக்கிறது. பெற்றவர்கள் எல்லாம் பெருமைக்கு  உரியவர்கள் என்ற கருத்தில் எனக்கு மாறுபாடு இல்லை. ஆனால் பெருமைக்குரிய ஒருவர் அதை இன்னும் பெறாமல் இருக்கிறாரே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. திரையுலகில் எழுபது ஆண்டுகளாகப் பங்களிப்பு செய்த ஒரு மாமனிதரை மொழி என்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக்கொண்டு சாதனை நிகழ்த்திய ஒரு எழுத்தாளரை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு என திரையுலகின் எல்லாத் தளங்களிலும் இயங்கியவரை, மூத்த பெருமகனை கௌரவம் செய்ய நூற்றாண்டு கண்டுமுடித்த திரையுலகம் ஒரு பெரும் விருதை வழங்க வேண்டுமென்றால் அது தாதா சாகிப் பால்கே விருதாகத்தான் இருக்கும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இதைச் சிந்திக்க வேண்டும் என்று உரியவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.  கலைஞர் நூறாண்டுகளுக்கும் மேல் உடல்நலத்தோடு வாழ வேண்டும். மனவளத்தோடு வாழவேண்டும். உடன் இருப்பவர்கள் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

ஒலிப்பதிவு உதவி: பெலிக்ஸ்படங்கள்: சுந்தர்


நன்றி: நக்கீரன்.
இணைப்பு: http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=20206