Friday, 28 October 2016

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

நமது நேற்றைய பதிவைப் படித்து விட்டீர்களா? படிக்காதவர்களுக்காக இதோ இணைப்பு : இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 


நேற்றைய பதிவில் நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே அறிமுகங்களைத் தொடங்கியிருந்தேன். இலங்கைத் தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே என்பதான தோற்றமே உலகின் பார்வையில் இருக்கிறது என்பதே அது. நேற்றைய பதிவுக்கு வாசகர்கள் வழங்கிய கருத்துரைகள் அதனை உறுதிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன. "இன்று தான் மலையகத்தைப் பற்றி அறிந்து கொண்டேன்" என்ற கூற்றைக் கண்டபோது மனம் வருந்தினேன்.

ஆனால் துவண்டுவிடாமல் மலையகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்

 இலங்கைப் பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது "சிகரம் 3" தளத்தில் வெளியான "இலங்கைத்  வலைப்பதிவர்கள் கவனத்திற்கு" என்னும் பதிவை பதிவுலகின் பார்வைக்கு சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

"இந்திய வம்சாவளி தமிழர்களின் குரல், வரலாறு அல்லது பிரச்சினைகள் நிச்சயமாக சர்வதேச அளவில் முன்னெடுக்கப் படவில்லை. ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் எடுத்து சொல்லப் பட்ட அளவு கூட இந்த தமிழர்களின் வாழ்வியல் போராட்டம் எடுத்து சொல்லப் படவில்லை. இலக்கியங்கள், கல்வித்துறை என்பவற்றில் அவர்களின் பங்களிப்பு முன்னெடுக்கப் பட மிகநீண்ட காலம் எடுக்கக் காரணங்கள் என்ன?" என்று கேள்வியெழுப்பி அதற்கு "மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்" என்னும் பதிவின் மூலம் விடை தருகிறார் நமது செ.அருண்பிரசாத். இவரது "வரிக்குதிரை" வலைப்பதிவின் மூலம் மலையகம் தொடர்பிலான பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். அது மட்டுமா, "சில்ட்ரென் ஒப் ஹெவன் (Children Of Heaven)" என்று உலக திரைப்படங்களையும் ஒரு கை பார்க்கத் தவறவில்லை. இவர் எனது பள்ளிக்கால நண்பரும்  கூட. இந்த ஆண்டு இவ்வலைத்தளத்தில் ஒரு பதிவேனும் வெளிவரவில்லை.


தமிழின் மீது அளவற்ற பற்று கொண்டவர். "உலகமெலாம் தமிழோசை பரவும் வகை செய்தல் வேண்டும்" என செயல்படுபவர். யாழ்பாவாணன் அவர்களை அறிந்தவர்கள் பலர் இருக்கலாம். "யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்" என யாப்பிலக்கணத்தை நம்வீட்டுக் கணினிகளின் வழியாகவே கற்றுத் தந்தவர். "எதுகை, மோனை விளையாட்டு" மற்றும் "கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்" போன்ற பதிவுகள் சிறப்பானவை.

மலையகத்தின் பிரபல, மூத்த எழுத்தாளர். இன்றும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்  தெளிவத்தை ஜோசப் அவர்கள். "தெளிவத்தை ஜோசப்" என்னும் பெயரிலேயே தன் வலைப்பதிவை வழங்கிய அவர் 2011 இல் 21 பதிவுகளை இட்டதோடு தனது வலைப்பதிவை கண்டுகொள்ளவேயில்லை. ஆனாலும் இதனை இங்கு பகிரக் காரணம் இத்தளத்திலுள்ள பெறுமதியான பதிவுகள் தான். "மனிதர்கள் நல்லவர்கள் - சிறுகதை" மற்றும் "மழலை - சிறுகதை" ஆகியன குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.


இவரை விட்டுவிட்டு நான் இலங்கைப் பதிவர் அறிமுகத்தை முடித்துவிட முடியாது. பதிவுலகின் மூலம் என் நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டவர். ஈழத்தின் கவிதை முத்து. கருத்துக்களில் தெளிவும் எண்ணங்களில் துணிவும் கொண்டவர். இவர் தனது பதிவுகளுக்கு எப்படிப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அத்தனைக்கும் முகம் சுழிக்காமல் பதிலளிப்பார். நீங்கள் அறிந்தவர்தான். அதிசயா. "மழை கழுவிய பூக்கள்" வாயிலாக தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தவர். இவரது "ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்" மற்றும் "இன்னும் சொல்லுவேன் சத்தமாய்" போன்ற பதிவுகள் ஆழ்ந்த வாசிப்பிற்குரியவை.

இன்று அறிமுகப்படுத்திய பதிவுகள் குறைவுதான் என்றாலும் அத்தனையும் கனதியானவை என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். மீண்டும் நாளையும் மேலும் சில அறிமுகங்களுடன் சந்திப்போம்.

அதுவரை ,

அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி

இந்தப் பதிவு "வலைச்சரம்" இல் 2014.07.03 அன்று என்னால் எழுதி வெளியிடப்பட்டதாகும் - நன்றி!

Thursday, 27 October 2016

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01

வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே! நமது நேற்றைய "என்னோடு நான் - சிகரம்பாரதி" அறிமுகப் பதிவைப் படித்தீர்களா? இன்று ஏனையோரை அறிமுகம் செய்யும் நாள். வலைச்சரம் ஆசிரியப் பொறுப்புக்கு அழைக்கப்பட்ட நாளில் இருந்தே இலங்கை வலைப் பதிவர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே என் அவாவாக இருந்தது. அதனை இப்பதிவின் மூலம் நிறைவேற்றவுள்ளேன். இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் என்பதில் இலங்கையில் வசிப்பவர்கள் மட்டுமின்றி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் வலைப்பதிவுகளும் உள்ளடங்கும்.

இலங்கையைப் பொருத்தவரை மலையகத் தமிழர் மற்றும் ஈழத் தமிழர் என இரு தமிழ்ச் சமூகங்கள் உண்டு. தமிழகத்துடன் மிக நெருங்கிய தொப்புள்கொடி உறவைக் கொண்டது மலையகம். சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த உறவுகள் தான் இன்றைய இந்திய வம்சாவளி மக்கள் என குறிப்பிடப்படும் மலையகத் தமிழர்கள். இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை , தேயிலைப் பயிர்ச்செய்கை மற்றும் இரயில் பாதை அமைத்தல் , உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றை மேற்கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்டனர். இன்றும் அடிமைகள் போலவே நடத்தப்படுபவர்கள். உலகினால் அதிகம் அறியப்படாதவர்கள். ஈழத் தமிழர்கள் பற்றிக் கூற வேண்டியதில்லை. இலங்கைத் தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே என்று உலகம் கூறும் அளவுக்கு உலகின் கருணைப் பார்வைக்கு உட்பட்டிருப்பவர்கள். இன்று இரு சமூகங்களுமே இலங்கை அரசின் இரும்புப் பிடிக்குள்..

இவை உங்கள் அறிவுக்காக. இனி உங்கள் அறிமுகத்திற்காக...

"இந்து சமுத்திரத்தின் முத்து" என அழைக்கப்படும் நாடு இலங்கை. 1948 வரை ஆங்கிலேயரிடமும் அதன் பின் சிங்கள இனவாதிகளிடமும் அடிமைப்பட்டுக்கிடக்கும் நாடு. இந்நாட்டின் தமிழ் வலைப்பதிவுகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதே நமது பதிவின் நோக்கம்.

மலையகம் குறித்த வரலாற்றையும் செய்திகளையும் ஒரு சேர தொகுத்துத் தரும் தளம். மலையகத்தின் பொக்கிஷம் என்று கூட இத்தளத்தை குறிப்பிடலாம். சி.வி.வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் மற்றும் கோப்பிக்கால வரலாறு ஆகிய பதிவுகள் கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை. மொத்தத்தில் "நமது மலையகம்" மலையகத்தின் அடையாளம்.


"ஒன்று தமிழ் பேசணும் இல்லை தப்பில்லை ஆங்கிலம் பேசணும். அதென்ன “டூ வீக்ஸ்ல கொஞ்சம் கொஞ்சமாய் கெட்டிங் டாா்க் யா..!“. அவள் பேச்சில், பாவம் தமிழ் மூச்சுவிட கஸ்டப்பட்டுக்கொண்டிருந்தது. “கொஞ்சம் தமிழில பேசலாமே..” என நான் கேட்ட போது அவள் என்னை ஒரு மாா்க்கமாய்ப் பாா்த்தாள். “பட்டிக்காடு.. இந்த சிம்பிள் இங்லீஸ் கூட இதுக்கு விளங்கல போல.. இதெல்லாம் எப்புடி உருப்படப்போகுது..!“ என்று  நினைத்திருப்பாளோ? இருக்க, நானோ அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை." என்று "கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்" இல் ஆதங்கப்படுகிறவர் ஈழத்து வலைப்பதிவர் அமல்ராஜ். இது மட்டுமா? பெண்கள் மீதான இராணுவக் கெடுபிடிகள் பற்றிய தனது "பழகிப்போச்சு" என்ற கவிதையில் 

"அவர்கள் கண்கள்

எங்கள்
கண்களை மட்டும் 
பார்த்ததே இல்லை.

தையல் அக்கா 
தைக்க எடுக்கும் அளவை - இவர்கள்
கண்களாலேயே முடித்து விடுகிறார்கள்." - என்று லாவகமாக வார்த்தைகளைக் கையாள்கிறார்.


மலையகத்தின் இளம் சிட்டு. முன்னேறத்துடிக்கும் மங்கை. கவிதைகளின் காதலி. தோட்டத் தொழிலாளியின் மகளாகப் பிறந்தாலும் சாதிக்க முடியும் என்று திடமாக நம்புகிறவர். பிரியதர்ஷினி என்னும் இயற்பெயரைக் கொண்ட செ.கவீதா. கூடிய விரைவில் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிடும் முயற்சியில் உள்ளார். "கவிதாவின் பக்கங்கள்" இவரது கவிதைகளின் களம்.

குறிப்பு: இப்பக்கம் செல்பவர்கள் "இடுகையிட்டது சிகரம்பாரதி" என்றிருப்பதைக் கண்டு எனது படைப்புகள் தான் அங்கும் இருக்கின்றன என நினைத்துவிட வேண்டாம். செ.கவீதா சார்பாக நான் பதிவிடுகிறேன். அவ்வளவே. என்றேனும் ஒரு நாள் வலைப்பதிவை முழுமையாக அவர் கைகளில் ஒப்படைக்க முடியும் என நம்புகிறேன்.

 இலங்கையின் பிரபல ஊடகவியலாளர். சூரியன், சக்தி, வெற்றி ஆகிய வானொலிகளில் பணி  புரிந்தவர். தற்போது மீண்டும் சூரியனில்... முன்பு அடிக்கடி எழுதியவர் இப்போது அத்தி பூத்தாற்போல் அவ்வப்போது தான் எழுதி வருகிறார். அவர் வேறு யாருமல்ல. ஏ.ஆர்.வி.லோஷன். அவரது தளம் லோஷனின் களம். விளையாட்டுச் செய்திகளை தொகுத்து வழங்குவதில் இவருக்கு நிகர் யாருமில்லை. கால்பந்து கோலாகலம் ஆரம்பம் என்று உலகக்கிண்ண கால்பந்து திருவிழாவைப் பற்றி எழுதிய இடுகை அதற்கு சாட்சி. ஈழம் தந்த முத்துக்களில் ஒன்று.

மலையக மக்கள் அபிவிருத்தி ஆய்வு மையம் இனது வலைப்பக்கம் மலையக மக்களின் பல்வேறு தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளது. மலையக மக்களின் நாட்டாரியல் பாடல்கள் முதல் பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் மற்றும் காண்பதற்கரிய புகைப்படங்கள் இங்கே காணக்கிடைக்கின்றன. ஆயினும் வலைதளத்தின் வடிவமைப்பும் இடுகைகளின் ஒழுங்கின்மையும் வாசகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. எது எப்படியிருப்பினும் இங்குள்ள தகவல்கள் பெறுமதியானவை என்பதில் சந்தேகமில்லை.

 

"பச்சை வேலிகள் 
போட்டுக் 
கட்டப்பட்ட 
உலகின் மிகப் பெரிய 
திறந்த வெளி சிறைச்சாலை " என்று மலையகத்தை வர்ணிக்கும் தெளிவத்தை ஜோசப் எழுதிய கவிதையோடு அவர்பற்றிய தகவல்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

ஈழத்து குறுந்திரைப்படவியலாளர், வலைப்பதிவர் என பன்முக ஆளுமை கொண்டவர். மதிசுதா. ஈழத்தின் மைந்தன்.48 மணித்தியால சர்வதேச குறுந்திரைப்படப் போட்டி மற்றும் அனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி ஆகிய பதிவுகள் குறுந்திரைப்படம் பற்றிய இவரது ஆளுமைகளைப் பறை சாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் நிறைய இருக்கின்றன. இலங்கை மண்ணில் உதித்த தமிழ் வலைப்பூக்களின் அறிமுகம் நாளையும் தொடரும்.

அதுவரை ,

அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி

இது வலைச்சரத்தில் நான் 2014.07.01 இல் நான் எழுதி வெளியிட்ட பதிவாகும்.இந்தப் பதிவை வலைச்சரத்தில் காண கீழுள்ள இணைப்பிற்கு செல்லுங்கள்:

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 - வலைச்சரம் 

Sunday, 23 October 2016

சிகரம் - வலை மின்-இதழ் - 007

ஞாயிறு பதிப்பு - 2016.10.23

சிறு குறிப்பு: வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த இதழிலும் தெரிவு செய்யப்பட்ட நமது பதிவர்களின் பதிவுகளின் தொகுப்பு இடம்பெறுகிறது. அந்தந்த வலைப்பதிவுகளுக்கு சென்று கருத்துரைகளை வழங்கி அவர்களின் எழுத்துக்களுக்கு ஓர் அங்கீகாரத்தை அளியுங்கள்!

கவிதைகள்

தளம்  : அதிசயா  


கட்டுரைகள்கதைகள்

தளம் : சகோதரன்
பதிவு : சோழ ரகசியம்   

நகைச்சுவை   


அஞ்சலி


சிறப்புப் பதிவு


தமிழ்மணம் மூலம் இப்பதிவைக் கண்டறிந்து வலைத்தளத்திற்குச் சென்றால் தளத்தில் பதிவைக் காணவில்லை. பின் கூகிளின் உதவியுடன் பதிவைக் கண்டெடுத்து அதனை உங்களுக்காக முழுமையாக தந்திருக்கிறேன். காரணம் திண்டுக்கல் தனபாலன் என்னும் மிகச் சிறந்த வலைப்பதிவர் பற்றி சில மாதங்களாக எந்தத் தகவலும் இல்லை. ஆகவே நானே அவரைப் பற்றி எழுதலாம் என்றிருந்தேன். முரளிதரன் முந்திக்கொண்டார். நிச்சயம் தேவையான பதிவு என்பதால் அப்பதிவு உங்களுக்காக இங்கே:

அன்பு அன்பரே!

    திண்டுக்கல் என்றால் பூட்டு என்று நினைத்துக்   கொண்டிருந்த எங்களை பூட்டை மறந்து திண்டுக்கல் என்றால் தனபாலன் என்றே மாற்றிவிட்ட அற்புதத்தைச் செய்த நீ இப்போது எங்கே இருக்கிறாய்? உமது பின்னூட்டங்கள் இல்லாமல் களை இழந்து தவிக்கிறது வலைப் பதிவுகள். காலை எழுந்ததும் கணினி உன் முகத்தில் தானே விழிக்கும்? சுறுசுறுப்புக்கு இன்னொரு பெயர் திண்டுக்கல் தனபாலன் அல்லவா?

    பின்னூட்டப் புயலே! என்னைப் போன்ற பலர் உனது பின்னூட்டங்களை நம்பித்தானே பதிவுகள் எழுதிக் கொண்டருந்தோம். நீ நுழையாத வலைப் பக்கங்கள் உண்டா? வண்டு காணாத பூக்கள் இருக்கலாம். உன் பின்னூட்டம் காணாத வலைப் பூக்கள்  உண்டா?  பல வலைப்பதிவுகளில் உனது பின்னூட்டம் மட்டுமே அல்லவா இருக்கும்? உனது பின்னூட்டத்தால் யாரையும் காயப் படுத்தியது இல்லை. மோசமான பதிவு என்றாலும் பாரட்டித் தானே பின்னூட்டம் இடுவாய்.  பதிவு எழுதி முடிக்கும் அடுத்த வினாடி உனது பின்னூட்டம் எட்டிப் பார்க்குமே. எப்படி என்று நாங்கள் வியந்து போவோமே! 

   நீ பின்னூட்டத்தால் மட்டுமல்ல தரமான பதிவுகளாலும் அல்லவா எங்கள் உள்ளம் கவர்ந்தாய்! திருக்குறளை வைத்து நீ எழுதிய பதிவுகள் அனைத்தும் முத்துக்களாயிற்றே. வள்ளுவன் இருந்தால் உமது சுவாரசியமான குறள் வலைப் பதிவுகள் இல்லாதது  கண்டு  வருத்தப் படிருப்பான்.   திருக்குறளில் மட்டுமா திரைப்படப் பாடல்களில் நீ விற்பன்னன் அல்லவா?  எந்த ஒரு கருத்தாக  இருப்பினும் பொருத்தமான திரைப் பாடல்களை வெளியிட்டு அசத்திக் கொண்டிருப்பாயே!

   அதற்கும் மேலாக வலையுலக மந்திரவாதியாக அல்லவா விளங்கினாய். உனது வலைப் பக்கத்தில் விதம் விதமான தொழில் நுட்ப வித்தை காட்டி எங்களை மகிழ்வித்தாயே .. உனது வலைப்பதிவுகளில்  எழுத்துகள் நடனமாடும் . படங்கள் பாடல் பாடும்.   சுட்டியை வைத்தால் ஒரு ஜாலம் எடுத்தால் இன்னொரு ஜாலம். சொடுக்கினால் ஒரு வித்தை . கண்களுக்கும் மனதுக்கும் அறிவுக்கும் விருந்தாக திகழ்ந்ததே!  இவற்றை எல்லாம் எப்படிக்  கற்றுக் கொண்டாய் என்று நாங்கள் வியப்பால் விழிகள் விரிப்போம். நீயோ அமைதிப் புன்னகையால் எங்களை ஆட்கொள்வாய்.

  பதிவுகளில் தொழில்நுட்ப மாயாஜாலம் செய்த நீ உனக்கு தெரிந்தவற்றை மற்றவருக்கும் கற்றுக் கொடுக்க முன்வந்தததை நாங்கள் மறக்க முடியுமா?
பலரது வலை வடிவமைப்பு உன்னுடைய  கைவண்ணம்தானே! தொழில் நுட்ப சிக்கல்கள் தீர்க்க  உதவி என்று சொல்லி மின்னஞ்சல் அனுப்பினால் போதும்  இருந்த இடத்தில் இருந்து மட்டுமல்ல தேவைப் பட்டால் நேரில் வந்தும் உதவும் பண்பாளர்   ஆயிற்றே. 

  கவிஞர் முத்து நிலவன் அவர்கள் உங்களுக்கு  வலையுலகம் சார்பாக வலைச்சித்தர் என்று பட்டம் கொடுத்தார். சித்தர்கள் திடீரென்று திடீரென்று மறைவார்கள். அது போல ஒளிந்து நின்று ஆட்டங் காட்டுகிறாயோ?
புதுக்கோட்டை வலைப் பதிவர் சந்திப்பின் வெற்றிக்குக் காரணமானவனே! அந்த திருவிழாவிற்குப்  பின்வலைப் பதிவிலும் உன்னை சந்திக்க முடியாமல் ஏங்குகிறோம். வலை வாசம் செய்த நீ வனவாசம் போனது ஏன்? முகநூலிலாவது முகம் காட்டிக் கொண்டிருந்தாய்.இப்போது முகநூல் பக்கமும் காணவில்லையே!

   கணினியைத் தொடாமல் உன்னால் இருக்க முடியும் என்று எங்களால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் ஏற்றங்கள் இறக்கங்கள் இடர்பாடுகள் வந்து செல்வது வழக்கம்தான். ஆனால் அவை  எல்லாம் வள்ளுவன் வழி அறிந்த உன்னை ஒன்றும் செய்ய இயலாது என்பதை அறிவோம்.. 
      காவிரி நீர் காணாத தமிழகம் போல உன்னைக்  காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ் வலைப் பதிவுலகம். காவிரி நீரை அணை கட்டித் தடுக்கலாம். நீதிமன்ற  ஆணை மறுக்கலாம். ஆனால்  உன்னை வலைப் பக்கம் வர விடாமல் தடுத்தது எது? சொல்! உச்ச  நீதி மன்றம் சென்று உத்தரவு  பெற்று வருகிறோம்!
         அன்புடன் 
    உந்தன் வரவை எதிர்நோக்கும் 
              வலைப்பூ நண்பர்கள்.


உங்கள் கருத்துக்களே இவ்விதழுக்கு நீங்கள் செலுத்தும் விலை. உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். 

Tuesday, 18 October 2016

தொடரி எதிர் Unstoppable !

'Unstoppable' - ஆங்கிலத் திரைப்படம். 2010 இல் வெளியானது. 'தொடரி' (2016) தமிழ்த் திரைப்படம் இதில் இருந்து தான் உருவானது அல்லது கதை களவாடப்பட்டது. இன்று இந்தத் திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்த்தேன். 'தொடரி' என் கைப்பேசியில் உள்ளது. அதையும் பார்த்துவிட்டேன். 'Unstoppable' ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு.ஆனால் அதிலும் சில விதி மீறல்கள் இருக்கவே செய்கிறது. இருந்தாலும் 150 கி.மீ வேகத்தில் சென்றாலும் 70 கி.மீ வேகத்தில் செல்லும் Unstoppable ஐ தொடரியால் நெருங்கக் கூட முடியாது.  

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை அதில் கட்டாயம் காதல் இருக்கவேண்டும். மேலும் வில்லன் இருக்கவேண்டும். இன்னும் நான்கு பாடல்கள் இருந்தாக வேண்டும். நகைச்சுவைக்கென்று தனியிடம் வேண்டும். கதாநாயகனை ஆகா ஓகோ வென்று புகழ்ந்து அறிமுகக் காட்சி அமைக்க வேண்டும். இதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களேனும் ஒதுக்கப்பட வேண்டும். கதாநாயகிக்குக் கதாநாயகனின் மேல் காதல் வந்த பிறகே கதை(?) துவங்கும். இப்படியாகவெல்லாம் தமிழ்த் திரைப்படமொன்றை உருவாக்கும் போது பிரதான கதையை மிஞ்சும் சொற்ப நேரத்தில் சொல்லி முடித்தாக வேண்டிய கட்டாயம் நம் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு. பாவம்! நூற்றாண்டு கண்ட தமிழ்த் திரையுலகம் காதலைத் தவிர இன்னும் வேறு எதனையும் காணவில்லை. இதில் தொடரி மற்றும் ரெமோ போன்ற குப்பைகள் மூலக் கதையின் அழகையே சிதைத்து விடுகின்றன. 'என்னை வேலை செய்ய விடுங்கய்யா...' என்று சிவகார்த்திகேயன் போன்றவர்களின் நீலிக்கண்ணீர் வேறு . தேனீர் விற்பவரும் முக அலங்காரம் செய்பவரும் தொடரூந்தை ஓட்ட முடியுமாக இருந்தால் நமது தெருக்களில் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக தொடரூந்துகளே பெரும் எண்ணிக்கையில் ஓடிக் கொண்டிருக்கும். என்ன கொடுமை சரவணன் இது? நீங்கள் எல்லாம் படம் எடுக்கவில்லை என்று யாரேனும் அழுதார்களா என்ன? மொத்தத்தில் 'தொடரி' - தடம் புரண்டது!  

Sunday, 16 October 2016

சிகரம் - வலை மின்-இதழ் - 006

ஞாயிறு மலர் - 2016.10.16

சிறு குறிப்பு:

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இந்த இதழிலும் தெரிவு செய்யப்பட்ட நமது பதிவர்களின் பதிவுகளின் தொகுப்பு இடம்பெறுகிறது. அந்தந்த வலைப்பதிவுகளுக்கு சென்று கருத்துரைகளை வழங்கி அவர்களின் எழுத்துக்களுக்கு ஓர் அங்கீகாரத்தை அளியுங்கள்!

கட்டுரைகள்:

வலைத்தளம் : மாற்று


வலைத்தளம் : அரசர்குளத்தான்
பதிவு                 : தொடரி- தடம் புரண்டதா?

கதைகள்:

வலைத்தளம் : குரங்கு BLOG   

கவிதைகள் :

பதிவு                 : குரல்  

சிறப்புப் பதிவு :

# நாம் என்னதான் ஆண் - பெண் சமத்துவம் பற்றிப் பேசினாலும் அதுகுறித்த ஆழமான புரிதல் நமக்குள் இல்லை. அதுகுறித்த புரிதலை வழங்கும் கட்டுரை ஒன்று . பதிவர் எழில் அருள் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவை 'நிகழ்காலம்' என்னும் தனது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். 'பிறப்புறுப்புப் பற்றிப் பேச ஏன் வெட்கப்படுகிறோம்?' என்னும் பதிவு இவ்வார சிறப்புப் பதிவாக இடம் பிடிக்கிறது. வாழ்த்துக்கள் பதிவர் எழிலுக்கு!

உங்கள் மேலான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறோம். 

Saturday, 15 October 2016

நமது கிரீடங்கள்

01. வாசிப்பு -  இன்னுமொரு வாழ்க்கை - இன்னுமொரு உலகம் -  இன்னுமொரு பிறப்பு . நமது வாழ்க்கைக்கு சுடரேற்றும் ஒளி முதல். அறிவின் ஊற்றை சுரக்க வைக்கும் அற்புத மந்திரம். ஒவ்வொரு எழுத்திலும் சொல்லிலும் நிதமும் புதுப்புது அனுபவங்களை அள்ளி வழங்குகிறது. வாருங்கள்! வாசிப்பால் ஒன்றிணைவோம்!

02. நம்மால் முடியுமா என்ற சந்தேகத்துடனேயே வலைப்பதிவில் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் உங்கள் பேராதரவு என்னை நம்பிக்கையுடன் தொடர வைத்திருக்கிறது. தங்கள் வருகை மட்டுமல்ல, கருத்துக்களும் தான் என்னை வளப்படுத்தும் என்பதால் தங்கள் மேலான கருத்துரைகளையும் வழங்கி உதவ வேண்டுகிறேன்.
03. உங்கள் மனதுக்கு விரோதமின்றி செய்யப்படும் எந்தவொரு செயலுமே சரியானதுதான்.

04. என் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.

Friday, 14 October 2016

தேயிலைத் துறையின் எதிர்காலம்.

இலங்கையின் தேயிலைத் துறையில் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் காணி உரிமை , கல்வி போன்ற சிக்கல்கள் தற்போது காணப்படும் அதே நேரம் மற்றுமொரு பேராபத்தும் நமது தேயிலைத் துறைக்குக் காத்திருக்கிறது. அதுதான் ஊழியர்படை. இது என்ன புதுப் படையாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? ஒரு நாட்டின் ஊழியர்களை / தொழிலாளர்களை ஊழியப்படை என்றழைப்பர். தற்போது தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கணிசமாகக் குறைந்து வருகிறது. சிலர் வியாபாரங்களைத் தொடங்கியிருக்கின்றனர். மரக்கறி உற்பத்தியாளர்களாயிருக்கின்றனர். சிலர் கொழும்பிலும் பிற மாவட்டங்களிலும் பணி புரிகிறார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடிச் செல்கின்றனர். இவ்வாறு படிப்படியாக மக்கள் தேயிலைத் தோட்டத் தொழிலைக் கைவிட்டு வெவ்வேறு வேலைவாய்ப்புகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாக தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் தேயிலைத் தோட்டங்களின் உற்பத்தி குறைவடையும். பின் நஷ்டமடைந்து மூடப்படும் அபாயம் உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளாய் மலையகத்தின் அடையாளமாய் விளங்குவது தேயிலை உற்பத்தியாகும். இலங்கையின் பொருளாதாரத்திலும் கணிசமான பங்கு தேயிலை உற்பத்திக்கு உண்டு. மேலும் உலக சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு நல்ல கேள்வி உள்ளது.

ஆகவே தேயிலைத் தொழிலாளர்களின் வீழ்ச்சியைத் தடுக்க இலங்கை அரசு ஆவண செய்ய வேண்டும். இலங்கையில் தேயிலைத் தொழிலை நவீன மயப்படுத்துவதனூடாக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை உள்ளீர்க்க முடியும். தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வினை வழங்க வேண்டும். மேலும் இலங்கைத் தேயிலையின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தேயிலைத் துறையை அழிவிலிருந்து காக்க முடியும். செய்வார்களா?

Monday, 10 October 2016

தோட்டத் தொழிலாளர்களும் சம்பள விவகாரமும் - 03

வணக்கம் வலைத்தள வாசகர்களே! 

இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது கடந்த கூட்டொப்பந்த சம்பள அதிகரிப்பின் போதே இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரப்பட்டது. ஆனால் அப்போது ரூ 620 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் வெறும் 110 ரூபாவே இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருட காலப்பகுதியில் வாழ்க்கைச் செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் 17 % த்தால் மட்டுமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மலையகக் கட்சிகளின் கூட்டணி இன்று (2016.10.06) அறிவித்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 730 ரூபா நாட்சம்பளம் இன்றைய சூழலுக்குப் போதுமானதா? 30 நாட்களும் தொழில் புரிந்தாலே 21,900 ரூபா மட்டுமே கிடைக்கும். மேலும் எல்லா நாட்களும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படப் போவதில்லை. கொழுந்தின் அளவு மற்றும் வரவு ஆகியன இந்த 730 ரூபாவில் தாக்கம் செலுத்தும். ஆகவே மீண்டும் மிகக் குறைந்த வேதனம் ஒன்றையே மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளப் போகின்றனர். மலையக மக்கள் சிந்தித்துச் செயல் பட வேண்டிய நேரம் இது. சிந்திப்பீர்களா?

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை விவகாரத்தில் இலங்கை அரசு முதலாளிமார் பக்கமே பேசி வருகிறது. தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் பின் வருமாறு பேசியுள்ளார்.''சம்பளத்தை 1000 ரூபாய் ஆக அதிகரிக்க கேட்பது தற்போதைக்கு சாத்தியமற்றது உலக சந்தையில் தேயிலை, ரப்பர் ஆகிய பெருந்தோட்டத்துறையில் பாரிய விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த காரணங்களால் தற்போது வழங்கப்படுகின்ற சம்பளத்தை அதிகரிக்க முடியாது என தோட்ட நிர்வாகங்கள் வலியுறுத்தி கூறியிருந்தன. ஆனால் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு கட்டாயம் தேவை என்ற கோணத்தில் பார்த்து தான் ரூ. 730 ஆக அதிகரிக்க செய்திருக்கின்றோம்'' என்று கூறினார்.

வேலை நாட்கள் எண்ணிக்கை பற்றி இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை. அது பற்றி இன்னமும் பேச வேண்டியுள்ளது. அடுத்த சில தினங்களில் இரு தரப்புடனும் பேசி முடிவொன்றை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தொழிலாளர்கள் எதிர்பார்ப்பதுபோல் சம்பள அதிகரிப்பு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் நிலுவையுடன் அவர்களுக்கு கிடைக்குமா? என்று அவரிடம் கேட்ட போது '' இந்த சம்பளம் அரசாங்கம் கொடுப்பது அல்ல. தோட்ட நிர்வாகங்கள் தான் கொடுக்க வேண்டும். அதனை கொடுப்பதற்கு லாபம் இருக்க வேண்டும்'' என பதிலளித்தார் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன  - என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் தொழில் புரியும் மலையக உறவுகள் 2016.10.07 அன்று கொழும்பு ஐந்துலாம்பு சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதுதவிர மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தின் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பஸ் டிப்போவுக்கு சுமார் 40 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் இதுவரை நஷ்டத்தைத் தவிர இதுவரை வேறு எதையுமே தம் வாழ்நாளில் கண்டதில்லையே? தொழில் அமைச்சர் மக்களின் வாழ்க்கைச் செலவு பற்றிய தெளிவுடன் தான் பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. 

ஒரு நாளைக்கு ரூ 730 சம்பளம். வாரத்திற்கு ஆறு நாள் கணக்குப்படி ஒரு மாதத்துக்கு பார்த்தாலே 26 x 730 = 18980 ரூபா. ஊழியர் சேமலாப நிதி ரூபா 1518.40 கழிக்கப்பட்டால் கைக்குக் கிடைக்கப் போவது ரூபா 17461.60 தான். குடும்பத்தில் கணவன் - மனைவி இருவரும் உழைப்பதாக எடுத்துக்கொண்டாலே 2 x 17461.60 = 34923.20 ரூபா மட்டுமே வருமானமாகக் கிடைக்கும். இது ஐந்து பேரைக் கொண்ட குடும்பத்தின் செலவுக்குப் போதுமானதாக இருக்குமா? இதில் தொழிற்சங்க சந்தாக்கள் வேறு. இந்த நிலையில் மூன்று அல்லது நான்கு நாள் வேலை கொடுத்தால் சம்பளமாக கைக்கு எவ்வளவு தான் கிடைக்கும்? சிந்தித்துப் பாருங்கள். தனியார் நிறுவனங்களைப் போல மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு , போயா மற்றும் விடுமுறை தினக் கொடுப்பனவு போன்ற மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இல்லை. ஆகவே இந்த சம்பளம் போதுமானதா என நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 

நாளொன்றுக்கு 1000 ரூபா சம்பளப்படி 26 நாட்களுக்கு குடும்பத்தில் இருவர் தொழில் புரிந்தால் ஊழியர் சேமலாப நிதி பிடித்தம் போக கைக்கு 47840 ரூபா கிடைக்கும். ஆனால் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் ஏனையோருக்கு சம்பளம் லட்சங்களில் இருக்கும். இது எந்த விதத்தில் நியாயம்? இப்போது சொல்லுங்கள். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம் நியாயமானது தானே? 

Sunday, 9 October 2016

சிகரம் - வலை மின்-இதழ் - 005

சிகரம் - வலை மின்-இதழ் - 005

ஞாயிறு மலர்   - 2016.10.09


சிறு குறிப்பு: 

வணக்கம் வாசகர்களே. சில நாட்கள் (இரண்டு வருடங்கள்) இதழ் வெளிவரவில்லை. மன்னிக்கவும். பணிச்சுமையே காரணம். இந்த இதழை இன்று முதல் மீண்டும் வெளிக்கொண்டுவர எண்ணியுள்ளேன். அதற்கு உங்கள் அனைவரினதும் மேலான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.  நான் படித்த வலைப்பதிவுகளில் சிறந்தவற்றின் தொகுப்பே இங்கு காணப்படுகிறது. உங்கள் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்படும். நன்றி.

கவிதைகள்:

வலைப்பதிவு : சி.வெற்றிவேல்
பதிவு                  : காலக்கணக்கில் குழம்பிய காலதேவன்

வலைப்பதிவு : தீதும் நன்றும் பிறர் தர வாரா...
பதிவு                  : உங்களுக்கு நேரமிருக்க வாய்ப்பில்லை

வலைப்பதிவு : -அருணா செல்வம்-
பதிவு                  : இராவணன் பேசுகிறான்!!

வலைப்பதிவு : புலவர் கவிதைகள் 

சிறுகதைகள்:

வலைப்பதிவு : சும்மா 
பதிவு                  : திருநிலை 

வலைப்பதிவு : மனசு 
பதிவு                 : காத்தாயி 

கட்டுரைகள் :

வலைப்பதிவு : டி.என்.முரளிதரன் 

வலைப்பதிவு: சேவியர் 


நமது இதழில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களுக்கு சென்று பதிவுகளை படிப்பதோடு நில்லாமல் மறக்காமல் பின்னூட்டத்தையும் அளிக்க மறவாதீர்கள். மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். நன்றி!

Saturday, 8 October 2016

பத்து கேள்வி

1.உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
4. 24 மணி  நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

http://kalaicm.blogspot.com/2014/06/1.html

http://geethamanjari.blogspot.com/2014/06/blog-post_22.html    

http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/06/blog-post_21.html 

http://saamaaniyan.blogspot.in/2014/06/blog-post_23.html 

http://tnmurali.blogspot.com/2014/06/self-interview.html

Friday, 7 October 2016

தோட்டத் தொழிலாளர்களும் சம்பள விவகாரமும் - 02

இலங்கையின் தேர்தல் களத்தில் மலையகத்தின் வாக்குகள் தீர்மானம் மிக்கவை. தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை நமது மலையக மக்களின் வாக்குகளுக்கு உண்டு. இலங்கையில் அடுத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2017 இல் இடம்பெறவுள்ளது. மலையக மக்கள் நினைத்தால் இந்தத் தேர்தலின் ஊடாக தமது சம்பளப் பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகளை இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்கும் தெளிவாகப் புரிய வைக்க முடியும். அதாவது தேர்தல் வாக்களிப்பின் போது தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்கள் செல்லாத வாக்குகளை அளித்து மலையகத் தமிழ் அரசியல் வாதிகளை தேர்தலில் தோல்வியடையச் செய்ய வேண்டும். (இலங்கையில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்னும் தெரிவு தேர்தல் வாக்களிப்பில் இல்லை) அல்லது தேர்தல் வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டும்.இது அனைவரது கவனத்தையும் மலையக மக்களின் பக்கம் திருப்பும். மலையக மக்களின் பிரச்சினைகள் முக்கிய பேசு பொருளாக அமையும். மலையக மக்களை ஏமாற்றி இதுவரைகாலமும் அரசியல் செய்துவந்த மலையகத் தமிழ் அரசியல் வாதிகளுக்கு பேரிடியாய் விழும். இலங்கை அரசியல் அரங்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். 'சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட மலையகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் நீங்கள் தீர்ப்பதாக இருந்தால் வாக்களிக்க நாம் தயார்' என அப்போது இலங்கை அரசிடமும் நமது அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை வைத்தால் அக்கோரிக்கை உடன் நிறைவேறும். அன்றேல் இப்போராட்டத்தை கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

பணத்துக்கும் சாராயத்துக்கும் ஏனைய இலவசங்களுக்கும் விலை போகாமல் மலையக மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். மலையகத் தமிழர் என்ற ரீதியில் தோட்டத் தொழிலாளர் அல்லாதோரும் இதில் ஒன்றிணைய வேண்டும். வீதி மறியல்களும் கோஷங்களும் ஊடகங்களின் செய்திகளுக்கு மட்டுமே பயன்படும். அரசைப் பொறுத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்குதான். மலையகத்தின் தலையெழுத்தை நாம் நினைத்தால் மாற்றியமைக்கலாம். செய்வீர்களா?

Thursday, 6 October 2016

தோட்டத் தொழிலாளர்களும் சம்பள விவகாரமும்

மலையகம். இலங்கையின் வஞ்சிக்கப்பட்ட மக்கள் வாழும் பூமி. தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கே போராட்டம் நடத்த வேண்டிய நிலை. இலங்கையில் மலையகத் தமிழர் , ஈழத் தமிழர் என இரு பிரிவினர் உள்ளனர். ஈழம் கடல்சார் உற்பத்திகள், தென்னை மற்றும் பனை போன்ற உற்பத்திகளுடன் விவசாயத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளது. மலையகம் தேயிலை மற்றும் மரக்கறி உற்பத்திகளில் சிறந்து விளங்குகின்றது. 200 ஆண்டுகளாய் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மலையகத்தின் தேயிலைத்துறையினூடாக பங்களிப்புச் செய்து வந்திருக்கின்றனர் இம்மலையக மக்கள்.

மலையகத்தின் பிரதான விளைபொருள் தேயிலை ஆகும். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய மலையகத் தேயிலைத் தோட்டங்களை இலங்கை  சனநாயக சோசலிசக் குடியரசு தனியாருக்கு குத்தகை என்னும் பெயரில் தாரை வார்த்தது. இதனால் மலையக மக்களுக்கு பல்வேறு உரிமைகள் பறிபோயின. முக்கியமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இலங்கை அரசினாலோ அல்லது வேறு எவரினாலுமோ தலையிட முடியாதுள்ளது. காரணம் கூட்டொப்பந்தம் ஒன்றின் மூலமே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப் படுகிறது.

தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மூன்று தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையில் இரண்டு வருட காலப் பகுதிக்கான சம்பளம் கூட்டொப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கப் படுகிறது.

தோட்டத் தொழிலாளர்கள் அண்மைக்காலமாக தமது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தும்படி கோரி வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். ஆனால் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு ஒப்புக்கொள்ள மறுப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் போராட்டம் தொடர்ந்தவண்ணமுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது கடந்த கூட்டொப்பந்த சம்பள அதிகரிப்பின் போதே இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரப்பட்டது. ஆனால் அப்போது ரூ 620 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. 

இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் வெறும் 110 ரூபாவே இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருட காலப்பகுதியில் வாழ்க்கைச் செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் 17 % த்தால் மட்டுமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மலையகக் கட்சிகளின் கூட்டணி இன்று (2016.10.06) அறிவித்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 730 ரூபா நாட்சம்பளம் இன்றைய சூழலுக்குப் போதுமானதா? 30 நாட்களும் தொழில் புரிந்தாலே 21,900 ரூபா மட்டுமே கிடைக்கும். மேலும் எல்லா நாட்களும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படப் போவதில்லை. கொழுந்தின் அளவு மற்றும் வரவு ஆகியன இந்த 730 ரூபாவில் தாக்கம் செலுத்தும். ஆகவே மீண்டும் மிகக் குறைந்த வேதனம் ஒன்றையே மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளப் போகின்றனர். மலையக மக்கள் சிந்தித்துச் செயல் பட வேண்டிய நேரம் இது. சிந்திப்பீர்களா?