'Unstoppable' - ஆங்கிலத் திரைப்படம். 2010 இல் வெளியானது. 'தொடரி' (2016) தமிழ்த் திரைப்படம் இதில் இருந்து தான் உருவானது அல்லது கதை களவாடப்பட்டது. இன்று இந்தத் திரைப்படத்தை இணையத்தில் தரவிறக்கிப் பார்த்தேன். 'தொடரி' என் கைப்பேசியில் உள்ளது. அதையும் பார்த்துவிட்டேன். 'Unstoppable' ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு.ஆனால் அதிலும் சில விதி மீறல்கள் இருக்கவே செய்கிறது. இருந்தாலும் 150 கி.மீ வேகத்தில் சென்றாலும் 70 கி.மீ வேகத்தில் செல்லும் Unstoppable ஐ தொடரியால் நெருங்கக் கூட முடியாது.
தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை அதில் கட்டாயம் காதல் இருக்கவேண்டும். மேலும் வில்லன் இருக்கவேண்டும். இன்னும் நான்கு பாடல்கள் இருந்தாக வேண்டும். நகைச்சுவைக்கென்று தனியிடம் வேண்டும். கதாநாயகனை ஆகா ஓகோ வென்று புகழ்ந்து அறிமுகக் காட்சி அமைக்க வேண்டும். இதற்கு குறைந்தது முப்பது நிமிடங்களேனும் ஒதுக்கப்பட வேண்டும். கதாநாயகிக்குக் கதாநாயகனின் மேல் காதல் வந்த பிறகே கதை(?) துவங்கும். இப்படியாகவெல்லாம் தமிழ்த் திரைப்படமொன்றை உருவாக்கும் போது பிரதான கதையை மிஞ்சும் சொற்ப நேரத்தில் சொல்லி முடித்தாக வேண்டிய கட்டாயம் நம் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுக்கு. பாவம்!
நூற்றாண்டு கண்ட தமிழ்த் திரையுலகம் காதலைத் தவிர இன்னும் வேறு எதனையும் காணவில்லை. இதில் தொடரி மற்றும் ரெமோ போன்ற குப்பைகள் மூலக் கதையின் அழகையே சிதைத்து விடுகின்றன. 'என்னை வேலை செய்ய விடுங்கய்யா...' என்று சிவகார்த்திகேயன் போன்றவர்களின் நீலிக்கண்ணீர் வேறு . தேனீர் விற்பவரும் முக அலங்காரம் செய்பவரும் தொடரூந்தை ஓட்ட முடியுமாக இருந்தால் நமது தெருக்களில் மோட்டார் வாகனங்களுக்குப் பதிலாக தொடரூந்துகளே பெரும் எண்ணிக்கையில் ஓடிக் கொண்டிருக்கும். என்ன கொடுமை சரவணன் இது? நீங்கள் எல்லாம் படம் எடுக்கவில்லை என்று யாரேனும் அழுதார்களா என்ன? மொத்தத்தில் 'தொடரி' - தடம் புரண்டது!
அன்ஸ்டாப்பபுள் மிக நேர்த்தியான திரைக்கதையாலும்... பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வரும் பரபரப்பாலும் வெற்றி பெற்றிருக்கும்...
ReplyDeleteதொடரியில் அது மிஸ்ஸிங்க்...