Friday, 7 October 2016

தோட்டத் தொழிலாளர்களும் சம்பள விவகாரமும் - 02

இலங்கையின் தேர்தல் களத்தில் மலையகத்தின் வாக்குகள் தீர்மானம் மிக்கவை. தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை நமது மலையக மக்களின் வாக்குகளுக்கு உண்டு. இலங்கையில் அடுத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2017 இல் இடம்பெறவுள்ளது. மலையக மக்கள் நினைத்தால் இந்தத் தேர்தலின் ஊடாக தமது சம்பளப் பிரச்சினை மற்றும் இதர பிரச்சினைகளை இலங்கை அரசுக்கு மட்டுமல்லாது சர்வதேசத்துக்கும் தெளிவாகப் புரிய வைக்க முடியும். அதாவது தேர்தல் வாக்களிப்பின் போது தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மலையக மக்கள் செல்லாத வாக்குகளை அளித்து மலையகத் தமிழ் அரசியல் வாதிகளை தேர்தலில் தோல்வியடையச் செய்ய வேண்டும். (இலங்கையில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்னும் தெரிவு தேர்தல் வாக்களிப்பில் இல்லை) அல்லது தேர்தல் வாக்களிப்பைப் புறக்கணிக்க வேண்டும்.



இது அனைவரது கவனத்தையும் மலையக மக்களின் பக்கம் திருப்பும். மலையக மக்களின் பிரச்சினைகள் முக்கிய பேசு பொருளாக அமையும். மலையக மக்களை ஏமாற்றி இதுவரைகாலமும் அரசியல் செய்துவந்த மலையகத் தமிழ் அரசியல் வாதிகளுக்கு பேரிடியாய் விழும். இலங்கை அரசியல் அரங்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும். 'சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட மலையகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் நீங்கள் தீர்ப்பதாக இருந்தால் வாக்களிக்க நாம் தயார்' என அப்போது இலங்கை அரசிடமும் நமது அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை வைத்தால் அக்கோரிக்கை உடன் நிறைவேறும். அன்றேல் இப்போராட்டத்தை கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

பணத்துக்கும் சாராயத்துக்கும் ஏனைய இலவசங்களுக்கும் விலை போகாமல் மலையக மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். மலையகத் தமிழர் என்ற ரீதியில் தோட்டத் தொழிலாளர் அல்லாதோரும் இதில் ஒன்றிணைய வேண்டும். வீதி மறியல்களும் கோஷங்களும் ஊடகங்களின் செய்திகளுக்கு மட்டுமே பயன்படும். அரசைப் பொறுத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்குதான். மலையகத்தின் தலையெழுத்தை நாம் நினைத்தால் மாற்றியமைக்கலாம். செய்வீர்களா?

No comments:

Post a Comment