Friday, 28 October 2016

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02

வணக்கம் வலைத்தள நண்பர்களே!

நமது நேற்றைய பதிவைப் படித்து விட்டீர்களா? படிக்காதவர்களுக்காக இதோ இணைப்பு : இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 


நேற்றைய பதிவில் நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியே அறிமுகங்களைத் தொடங்கியிருந்தேன். இலங்கைத் தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே என்பதான தோற்றமே உலகின் பார்வையில் இருக்கிறது என்பதே அது. நேற்றைய பதிவுக்கு வாசகர்கள் வழங்கிய கருத்துரைகள் அதனை உறுதிப்படுத்துவனவாகவே அமைந்திருந்தன. "இன்று தான் மலையகத்தைப் பற்றி அறிந்து கொண்டேன்" என்ற கூற்றைக் கண்டபோது மனம் வருந்தினேன்.

ஆனால் துவண்டுவிடாமல் மலையகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி செய்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்

 இலங்கைப் பதிவர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது "சிகரம் 3" தளத்தில் வெளியான "இலங்கைத்  வலைப்பதிவர்கள் கவனத்திற்கு" என்னும் பதிவை பதிவுலகின் பார்வைக்கு சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.

"இந்திய வம்சாவளி தமிழர்களின் குரல், வரலாறு அல்லது பிரச்சினைகள் நிச்சயமாக சர்வதேச அளவில் முன்னெடுக்கப் படவில்லை. ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டம் எடுத்து சொல்லப் பட்ட அளவு கூட இந்த தமிழர்களின் வாழ்வியல் போராட்டம் எடுத்து சொல்லப் படவில்லை. இலக்கியங்கள், கல்வித்துறை என்பவற்றில் அவர்களின் பங்களிப்பு முன்னெடுக்கப் பட மிகநீண்ட காலம் எடுக்கக் காரணங்கள் என்ன?" என்று கேள்வியெழுப்பி அதற்கு "மலைகளைத் தகர்த்துப் பயிர் செய்த தமிழர்கள்" என்னும் பதிவின் மூலம் விடை தருகிறார் நமது செ.அருண்பிரசாத். இவரது "வரிக்குதிரை" வலைப்பதிவின் மூலம் மலையகம் தொடர்பிலான பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். அது மட்டுமா, "சில்ட்ரென் ஒப் ஹெவன் (Children Of Heaven)" என்று உலக திரைப்படங்களையும் ஒரு கை பார்க்கத் தவறவில்லை. இவர் எனது பள்ளிக்கால நண்பரும்  கூட. இந்த ஆண்டு இவ்வலைத்தளத்தில் ஒரு பதிவேனும் வெளிவரவில்லை.


தமிழின் மீது அளவற்ற பற்று கொண்டவர். "உலகமெலாம் தமிழோசை பரவும் வகை செய்தல் வேண்டும்" என செயல்படுபவர். யாழ்பாவாணன் அவர்களை அறிந்தவர்கள் பலர் இருக்கலாம். "யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்" என யாப்பிலக்கணத்தை நம்வீட்டுக் கணினிகளின் வழியாகவே கற்றுத் தந்தவர். "எதுகை, மோனை விளையாட்டு" மற்றும் "கள்ளுக் குடித்தவர் பெண் பனையோடு மோதினால்" போன்ற பதிவுகள் சிறப்பானவை.

மலையகத்தின் பிரபல, மூத்த எழுத்தாளர். இன்றும் எழுத்துப் பணியில் ஈடுபட்டிருப்பவர்  தெளிவத்தை ஜோசப் அவர்கள். "தெளிவத்தை ஜோசப்" என்னும் பெயரிலேயே தன் வலைப்பதிவை வழங்கிய அவர் 2011 இல் 21 பதிவுகளை இட்டதோடு தனது வலைப்பதிவை கண்டுகொள்ளவேயில்லை. ஆனாலும் இதனை இங்கு பகிரக் காரணம் இத்தளத்திலுள்ள பெறுமதியான பதிவுகள் தான். "மனிதர்கள் நல்லவர்கள் - சிறுகதை" மற்றும் "மழலை - சிறுகதை" ஆகியன குறிப்பிட்டுக் கூறக்கூடியவை.


இவரை விட்டுவிட்டு நான் இலங்கைப் பதிவர் அறிமுகத்தை முடித்துவிட முடியாது. பதிவுலகின் மூலம் என் நட்பு வட்டத்தில் இணைந்து கொண்டவர். ஈழத்தின் கவிதை முத்து. கருத்துக்களில் தெளிவும் எண்ணங்களில் துணிவும் கொண்டவர். இவர் தனது பதிவுகளுக்கு எப்படிப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அத்தனைக்கும் முகம் சுழிக்காமல் பதிலளிப்பார். நீங்கள் அறிந்தவர்தான். அதிசயா. "மழை கழுவிய பூக்கள்" வாயிலாக தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தவர். இவரது "ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்" மற்றும் "இன்னும் சொல்லுவேன் சத்தமாய்" போன்ற பதிவுகள் ஆழ்ந்த வாசிப்பிற்குரியவை.

இன்று அறிமுகப்படுத்திய பதிவுகள் குறைவுதான் என்றாலும் அத்தனையும் கனதியானவை என்பதை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். மீண்டும் நாளையும் மேலும் சில அறிமுகங்களுடன் சந்திப்போம்.

அதுவரை ,

அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி

இந்தப் பதிவு "வலைச்சரம்" இல் 2014.07.03 அன்று என்னால் எழுதி வெளியிடப்பட்டதாகும் - நன்றி!

1 comment:

  1. பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete