Thursday, 27 October 2016

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01

வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே! நமது நேற்றைய "என்னோடு நான் - சிகரம்பாரதி" அறிமுகப் பதிவைப் படித்தீர்களா? இன்று ஏனையோரை அறிமுகம் செய்யும் நாள். வலைச்சரம் ஆசிரியப் பொறுப்புக்கு அழைக்கப்பட்ட நாளில் இருந்தே இலங்கை வலைப் பதிவர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே என் அவாவாக இருந்தது. அதனை இப்பதிவின் மூலம் நிறைவேற்றவுள்ளேன். இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் என்பதில் இலங்கையில் வசிப்பவர்கள் மட்டுமின்றி இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களின் வலைப்பதிவுகளும் உள்ளடங்கும்.

இலங்கையைப் பொருத்தவரை மலையகத் தமிழர் மற்றும் ஈழத் தமிழர் என இரு தமிழ்ச் சமூகங்கள் உண்டு. தமிழகத்துடன் மிக நெருங்கிய தொப்புள்கொடி உறவைக் கொண்டது மலையகம். சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த உறவுகள் தான் இன்றைய இந்திய வம்சாவளி மக்கள் என குறிப்பிடப்படும் மலையகத் தமிழர்கள். இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை , தேயிலைப் பயிர்ச்செய்கை மற்றும் இரயில் பாதை அமைத்தல் , உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகியவற்றை மேற்கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து கூலிகளாக அழைத்து வரப்பட்டனர். இன்றும் அடிமைகள் போலவே நடத்தப்படுபவர்கள். உலகினால் அதிகம் அறியப்படாதவர்கள். ஈழத் தமிழர்கள் பற்றிக் கூற வேண்டியதில்லை. இலங்கைத் தமிழர்கள் என்றால் அது ஈழத் தமிழர்கள் மட்டுமே என்று உலகம் கூறும் அளவுக்கு உலகின் கருணைப் பார்வைக்கு உட்பட்டிருப்பவர்கள். இன்று இரு சமூகங்களுமே இலங்கை அரசின் இரும்புப் பிடிக்குள்..

இவை உங்கள் அறிவுக்காக. இனி உங்கள் அறிமுகத்திற்காக...

"இந்து சமுத்திரத்தின் முத்து" என அழைக்கப்படும் நாடு இலங்கை. 1948 வரை ஆங்கிலேயரிடமும் அதன் பின் சிங்கள இனவாதிகளிடமும் அடிமைப்பட்டுக்கிடக்கும் நாடு. இந்நாட்டின் தமிழ் வலைப்பதிவுகளை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவதே நமது பதிவின் நோக்கம்.

மலையகம் குறித்த வரலாற்றையும் செய்திகளையும் ஒரு சேர தொகுத்துத் தரும் தளம். மலையகத்தின் பொக்கிஷம் என்று கூட இத்தளத்தை குறிப்பிடலாம். சி.வி.வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும் மற்றும் கோப்பிக்கால வரலாறு ஆகிய பதிவுகள் கட்டாயம் வாசிக்கப்படவேண்டியவை. மொத்தத்தில் "நமது மலையகம்" மலையகத்தின் அடையாளம்.


"ஒன்று தமிழ் பேசணும் இல்லை தப்பில்லை ஆங்கிலம் பேசணும். அதென்ன “டூ வீக்ஸ்ல கொஞ்சம் கொஞ்சமாய் கெட்டிங் டாா்க் யா..!“. அவள் பேச்சில், பாவம் தமிழ் மூச்சுவிட கஸ்டப்பட்டுக்கொண்டிருந்தது. “கொஞ்சம் தமிழில பேசலாமே..” என நான் கேட்ட போது அவள் என்னை ஒரு மாா்க்கமாய்ப் பாா்த்தாள். “பட்டிக்காடு.. இந்த சிம்பிள் இங்லீஸ் கூட இதுக்கு விளங்கல போல.. இதெல்லாம் எப்புடி உருப்படப்போகுது..!“ என்று  நினைத்திருப்பாளோ? இருக்க, நானோ அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை." என்று "கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்" இல் ஆதங்கப்படுகிறவர் ஈழத்து வலைப்பதிவர் அமல்ராஜ். இது மட்டுமா? பெண்கள் மீதான இராணுவக் கெடுபிடிகள் பற்றிய தனது "பழகிப்போச்சு" என்ற கவிதையில் 

"அவர்கள் கண்கள்

எங்கள்
கண்களை மட்டும் 
பார்த்ததே இல்லை.

தையல் அக்கா 
தைக்க எடுக்கும் அளவை - இவர்கள்
கண்களாலேயே முடித்து விடுகிறார்கள்." - என்று லாவகமாக வார்த்தைகளைக் கையாள்கிறார்.


மலையகத்தின் இளம் சிட்டு. முன்னேறத்துடிக்கும் மங்கை. கவிதைகளின் காதலி. தோட்டத் தொழிலாளியின் மகளாகப் பிறந்தாலும் சாதிக்க முடியும் என்று திடமாக நம்புகிறவர். பிரியதர்ஷினி என்னும் இயற்பெயரைக் கொண்ட செ.கவீதா. கூடிய விரைவில் கவிதைத் தொகுப்பொன்றை வெளியிடும் முயற்சியில் உள்ளார். "கவிதாவின் பக்கங்கள்" இவரது கவிதைகளின் களம்.

குறிப்பு: இப்பக்கம் செல்பவர்கள் "இடுகையிட்டது சிகரம்பாரதி" என்றிருப்பதைக் கண்டு எனது படைப்புகள் தான் அங்கும் இருக்கின்றன என நினைத்துவிட வேண்டாம். செ.கவீதா சார்பாக நான் பதிவிடுகிறேன். அவ்வளவே. என்றேனும் ஒரு நாள் வலைப்பதிவை முழுமையாக அவர் கைகளில் ஒப்படைக்க முடியும் என நம்புகிறேன்.

 இலங்கையின் பிரபல ஊடகவியலாளர். சூரியன், சக்தி, வெற்றி ஆகிய வானொலிகளில் பணி  புரிந்தவர். தற்போது மீண்டும் சூரியனில்... முன்பு அடிக்கடி எழுதியவர் இப்போது அத்தி பூத்தாற்போல் அவ்வப்போது தான் எழுதி வருகிறார். அவர் வேறு யாருமல்ல. ஏ.ஆர்.வி.லோஷன். அவரது தளம் லோஷனின் களம். விளையாட்டுச் செய்திகளை தொகுத்து வழங்குவதில் இவருக்கு நிகர் யாருமில்லை. கால்பந்து கோலாகலம் ஆரம்பம் என்று உலகக்கிண்ண கால்பந்து திருவிழாவைப் பற்றி எழுதிய இடுகை அதற்கு சாட்சி. ஈழம் தந்த முத்துக்களில் ஒன்று.

மலையக மக்கள் அபிவிருத்தி ஆய்வு மையம் இனது வலைப்பக்கம் மலையக மக்களின் பல்வேறு தகவல்களை ஆவணப்படுத்தியுள்ளது. மலையக மக்களின் நாட்டாரியல் பாடல்கள் முதல் பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் மற்றும் காண்பதற்கரிய புகைப்படங்கள் இங்கே காணக்கிடைக்கின்றன. ஆயினும் வலைதளத்தின் வடிவமைப்பும் இடுகைகளின் ஒழுங்கின்மையும் வாசகர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. எது எப்படியிருப்பினும் இங்குள்ள தகவல்கள் பெறுமதியானவை என்பதில் சந்தேகமில்லை.

 

"பச்சை வேலிகள் 
போட்டுக் 
கட்டப்பட்ட 
உலகின் மிகப் பெரிய 
திறந்த வெளி சிறைச்சாலை " என்று மலையகத்தை வர்ணிக்கும் தெளிவத்தை ஜோசப் எழுதிய கவிதையோடு அவர்பற்றிய தகவல்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.

ஈழத்து குறுந்திரைப்படவியலாளர், வலைப்பதிவர் என பன்முக ஆளுமை கொண்டவர். மதிசுதா. ஈழத்தின் மைந்தன்.48 மணித்தியால சர்வதேச குறுந்திரைப்படப் போட்டி மற்றும் அனைவருக்கும் தெரிந்த கதையை சிறந்த படமாக்குவது எப்படி ஆகிய பதிவுகள் குறுந்திரைப்படம் பற்றிய இவரது ஆளுமைகளைப் பறை சாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் நிறைய இருக்கின்றன. இலங்கை மண்ணில் உதித்த தமிழ் வலைப்பூக்களின் அறிமுகம் நாளையும் தொடரும்.

அதுவரை ,

அன்புடன் 
உங்கள் 

சிகரம்பாரதி

இது வலைச்சரத்தில் நான் 2014.07.01 இல் நான் எழுதி வெளியிட்ட பதிவாகும்.இந்தப் பதிவை வலைச்சரத்தில் காண கீழுள்ள இணைப்பிற்கு செல்லுங்கள்:

இந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01 - வலைச்சரம் 

No comments:

Post a Comment