Friday, 14 October 2016

தேயிலைத் துறையின் எதிர்காலம்.

இலங்கையின் தேயிலைத் துறையில் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் காணி உரிமை , கல்வி போன்ற சிக்கல்கள் தற்போது காணப்படும் அதே நேரம் மற்றுமொரு பேராபத்தும் நமது தேயிலைத் துறைக்குக் காத்திருக்கிறது. அதுதான் ஊழியர்படை. இது என்ன புதுப் படையாக இருக்கிறது என்று பார்க்கிறீர்களா? ஒரு நாட்டின் ஊழியர்களை / தொழிலாளர்களை ஊழியப்படை என்றழைப்பர். தற்போது தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கணிசமாகக் குறைந்து வருகிறது. சிலர் வியாபாரங்களைத் தொடங்கியிருக்கின்றனர். மரக்கறி உற்பத்தியாளர்களாயிருக்கின்றனர். சிலர் கொழும்பிலும் பிற மாவட்டங்களிலும் பணி புரிகிறார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடிச் செல்கின்றனர். இவ்வாறு படிப்படியாக மக்கள் தேயிலைத் தோட்டத் தொழிலைக் கைவிட்டு வெவ்வேறு வேலைவாய்ப்புகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாக தேயிலைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் தேயிலைத் தோட்டங்களின் உற்பத்தி குறைவடையும். பின் நஷ்டமடைந்து மூடப்படும் அபாயம் உள்ளது. இரண்டு நூற்றாண்டுகளாய் மலையகத்தின் அடையாளமாய் விளங்குவது தேயிலை உற்பத்தியாகும். இலங்கையின் பொருளாதாரத்திலும் கணிசமான பங்கு தேயிலை உற்பத்திக்கு உண்டு. மேலும் உலக சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு நல்ல கேள்வி உள்ளது.

ஆகவே தேயிலைத் தொழிலாளர்களின் வீழ்ச்சியைத் தடுக்க இலங்கை அரசு ஆவண செய்ய வேண்டும். இலங்கையில் தேயிலைத் தொழிலை நவீன மயப்படுத்துவதனூடாக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களை உள்ளீர்க்க முடியும். தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்வாதார சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வினை வழங்க வேண்டும். மேலும் இலங்கைத் தேயிலையின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் தேயிலைத் துறையை அழிவிலிருந்து காக்க முடியும். செய்வார்களா?

1 comment:

  1. செய்வார்களா...? செய்தால் நல்லதுதான்...

    ReplyDelete