Showing posts with label வரவேற்பறை. Show all posts
Showing posts with label வரவேற்பறை. Show all posts

Saturday, 2 August 2014

புரட்டாத பக்கங்கள் - உங்கள் அனுபவப் பகிர்வுக்கான களம்!

                       அன்பார்ந்த வலைப்பதிவர்களே! நீங்கள் நலமா? நலம், நலமறிய ஆவல். வலைப்பதிவுகள் ஆரம்பித்து சில காலங்கள் வரை ஆங்கில மொழியில் மட்டுமே வலைப்பதிவுகள் எழுதப்பட்டு வந்தன. பின்பு தமிழிலும் ஒரு சிலரால் வலைப்பதிவு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. தனியொரு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட வலைப்பதிவுகள் Blogger சேவை கூகிள் உடன் இணைந்த பின்பு வேகமான வளர்ச்சியையும் பன்மொழி சார் ஆதரவையும் வழங்கின.

                           ஆரம்பத்தில் ஒரு சிலரே தமிழில் வலைப்பதிவுகளை எழுதி வந்தாலும் பின்பு வலைப்பதிவுத் துறை பிரபலமானதன் பின்னர் அந்த எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்தது. தமிழில் வலைப்பதிவர்களுக்கு தமிழ்மணம் , இன்ட்லி , தமிழ் 10 ஆகிய திரட்டிகளும் வலைச்சரம் போன்ற வலைப்பதிவுகளும் ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கி வருகின்றன. வலைப்பதிவர் சந்திப்புகள், வலைப்பதிவு மாநாடுகள் போன்றவை இன்னும் உறுதுணை புரிகின்றன.


                    தமிழில் காணாமல் போன திரட்டிகளும் வலைப்பதிவுகளும் ஏராளம். இன்னும் திரட்டிகளும் வலைப்பதிவுகளும் புதிது புதியதாய் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. வலைப்பதிவுகளை ஆரம்பிக்கும் ஒவ்வொருவரின் நோக்கங்களும் இலக்குகளும் மாறுபட்டவை. ஆகவே அவர்கள் அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றிணைக்க ஒரு தளம் தேவை. அந்த முயற்சியை யாரேனும் முன்னெடுத்தால் அதற்கு தக்க உதவிகளை வழங்க நாம் தயாராகவே உள்ளோம்.

               சரி. இப்பதிவை எழுதுவதன் நோக்கத்தை தெரியப்படுத்த வேண்டிய தருணம் இது. நான் முதலிலேயே சொன்னது போல வலைப்பதிவுகளை ஆரம்பிக்கும் ஒவ்வொருவரின் நோக்கங்களும் இலக்குகளும் மாறுபட்டவை.அந்த இலக்குகளை நோக்கி ஒவ்வொருவரும் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வலைப்பதிவரையும் அவரது பதிவுகளூடாக ஒரு அனுமானத்தின் அடிப்படையில் மதிப்பிட்டு வைத்திருக்கிறோம். தம்மைப் பற்றியோ அல்லது தமது அனுபவங்களையோ பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவர்கள் மிகக் குறைவு.

                           ஆகவே தான் "சிகரம்" வலைப்பதிவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை அல்லது சுயசரிதையை மட்டும் பகிர்ந்து கொள்ள ஒரு பொதுவான வலைத்தளம் ஆரம்பிப்பது தொடர்பில் சிந்தித்து வருகிறது. சிந்தனையோட்டத்தில் உள்ள இந்த திட்டம் குறித்து உங்களுடன் விவாதிக்கவே இப்பதிவு. 

வலைப்பதிவு பின்வருமாறு அமையும்.


* துவங்கவிருக்கும் புதிய வலைப்பதிவானது உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் உங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் மட்டுமே உருவாக்கப்படுகிறது.

* ஒரே வார்த்தையில் சொல்வதானால் உங்கள் "சுயசரிதை"யை எழுதுவதற்கான களம் இது. 

* ஒரு பதிவருக்கு அதிக பட்சம் 15 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதுடன் இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்ற அடிப்படையில் அதிக பட்சம் 8 பதிவுகளை வெளியிட முடியும். 

* ஒரு பதிவர் குறைந்த பட்சம் 9 நாட்களில் இரண்டு நாளுக்கு ஒரு பதிவு என்ற அடிப்படையில் 5 பதிவுகளை எழுத வேண்டும். 

* ஒரு பதிவர் தான் எழுதும் அனைத்துப் பதிவுகளும் தொடர் பதிவாக அமையுமாறு கவனித்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு நாளைக்கு ஒரு வலைப்பதிவில் ஒரு பதிவுக்கு மேல் வெளியிடும் வலைப்பதிவுகளைக் கொண்ட வலைப்பதிவர்களுக்கு இதில் எழுத அனுமதி கிடையாது. காரணம், தினசரி செய்திகளை வெளியிட இணையத்தில் பல நூறு தமிழ் இணையத்தளங்கள் கொட்டிக்கிடக்கும் நிலையில் தினசரி 10 பதிவுகளை வெளியிட்டு அதனை திரட்டிகளிலும் பகிர்ந்து வளரும் பதிவர்களின் பதிவுகளை திரட்டிகளில் தோன்ற விடாமல் செய்வதனால் ஆகும்.

* உங்கள் அனுபவப் பகிர்வுகளை எமது வலைத்தளத்தில் பகிரும் உங்களுக்கான இறுதித் தினத்தில் இருந்து 100 நாட்களுக்குப் பின் அதனை உங்கள் வலைத்தளத்திலும் எங்கள் வலைத்தளத்துக்கான இணைப்புடன் வெளியிட முடியும்.

* இது பிற பதிவர்களையோ அல்லது பதிவுகளையோ அறிமுகப்படுத்தும் தளம் அல்ல.

* உங்களுக்கான ஆசிரியப் பணி குறித்து எங்கள் மின்னஞ்சல் கிடைத்ததும் உங்களுக்கான விருப்பத்தைத் தெரிவித்து உங்கள் அனுபவங்களைப் பகிர முடியும்.

* நீங்கள் எங்கள் அழைப்புக்காக காத்திருக்கத் தேவை இல்லை. உங்கள் விருப்பத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் போதும். அழைப்பு உங்களை நாடி வரும்.

மேலதிக விதிமுறைகள் உங்களுடனான கலந்துரையாடல்களின் பின்னர் அறிவிக்கப்படும்.

இப்புதிய வலைப்பதிவுத் திட்டம் தொடர்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடனான கலந்துரையாடல்களின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். உங்கள் மனதில் பட்டதை தெளிவாய் இங்கே சொல்லுங்கள். விவாதிக்க நாம் தயாராகவே உள்ளோம். 

உங்களை எழுதுங்கள் .புதுயுகம் படைக்க வாருங்கள்.

-சிகரம்-

Monday, 30 June 2014

வலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நலம், நலமறிய ஆவல்.





"வலைச்சரம்" பற்றி அறியாத யாருமே தமிழ் வலைப்பதிவர்களாக இருக்க முடியாது. புதிய வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்துதல், வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை அளிப்பதன் மூலம் ஆசிரியராக வருபவரின் வலைத்தளத்துக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தல், வலைப்பதிவுகளையும் இடுகைகளையும் பிறர் அறிய வாய்ப்பளித்தல் என பல சேவைகளை வலைச்சரம் ஆற்றி வருகிறது.









வாரம் ஒரு ஆசிரியர் தனக்குப் பிடித்த , தான் அறிந்த வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வார். அந்த வகையில் பலரும் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்காக காத்து நிற்கும் இந்த வேளையில் "சிகரம்பாரதி" ஆகிய என்னைத் தேடி வலைச்சர ஆசிரியர் பொறுப்பு வந்திருக்கிறது. 30.06.2014 முதல் தொடங்கும் வாரத்திற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்கும் நான் 06.07.2014 வரை வலைச்சரம் ஆசிரியராக எனது கடமையை ஆற்றவுள்ளேன்.









இதுவரை மூன்று முறை வலைச்சரம் சார்பாக அறிமுகம் பெற்றுள்ள நான் இன்று ஏனையோரை அறிமுகம் செய்யக் கிடைத்தமை மிகப்பெரும் பாக்கியமாகும்.

என்னை அறிமுகம் செய்த பதிவுகள் இவைதான்.

நான் வாசிப்பவர்கள்...

புத்தம் புது காலை

வீட்டில் தோட்டம் , சாலையில் பணம்!!!

வலைச்சர ஆசிரியப் பணிஏற்கவுள்ள நான் பின்வருமாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளேன்:

"நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க சிகரம் என்னும் தளத்தில் எழுதி வரும் சிகரம் பாரதி இணக்கம் தெரிவித்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

துரைசாமி லெட்சுமணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட சிகரம்பாரதி ஆகிய இவரது பிறப்பிடம் இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமான மலையகத்திலுள்ள கொட்டகலை என்னும் இடமாகும். தரம் 13 வரை கல்வி கற்றுள்ள இவர் பல்கலைக்கழக

வாய்ப்புக் கிடைத்தும் அதை ஏற்காமல் கொழும்பிலுள்ள ஈஸ்வரன் என்னும் தனியார் தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தில் மூலப்பொருள் கட்டுப்பாட்டாளர் உதவியாளராக [Material Controller Assistant] பணி புரிந்து வருகிறார்.

தமிழகத்தில் இருந்து 200 வருடங்களுக்கு முன்னாள் இலங்கையில் தேயிலைப் பயிர்ச் செய்கையை விருத்தி செய்வதற்காக கூலிகளாக அழைத்து வரப்பட்ட இவரது சமூகத்தின் அவலத் துயர் துடைத்து சமூகத்தை முன்னேற்றுவதே இவரது வாழ்நாள் இலட்சியமாகும். 2012 முதல் வலைப்பதிவுகளை எழுதி வருகிறார். . அரசியல்,இலக்கியம், விளையாட்டு, நகைச்சுவை , சுயமுன்னேற்றம் என பன்முகப்பட்ட விடயங்களையும்
பலித்து வருகிறது.


சிகரம்பாரதி" என்னும் பெயரிலேயே பலராலும் அறியப்பட்டுள்ள இவர் அப்பெயரிலேயே தொடர்ந்தும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என எண்ணுகிறார்.

இலங்கையின் பல்வேறு தேசிய தமிழ் நாளிதழ்கள் சஞ்சிகைகளில் இவரது
எழுத்துக்கள் பிரசுரமாகியுள்ளன.
இவரைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு:

அகவை ஒன்பதில் சிகரம்!
http://newsigaram.blogspot.com/2014/06/agavai-onbadhil-sigaram.html#.U6R3kLFGMi4


” சிகரம் “ வலைப்பூ பதிவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்....
 

நல்வாழ்த்துகள் சிகரம் பாரதி ."

                    வேலை மற்றும் பல்வேறு சிரமங்கள் காரணமாக இதுவரை எந்தவொரு தயார் படுத்தலும் இல்லை. இறைவன் தான் சாரதியாக இருந்து இப்பயணத்தை வழிநடத்திக் கொடுக்க வேண்டும். வலைத்தள நண்பர்களாகிய நீங்களும் தினமும் வலைச்சரம் வந்து வாழ்த்த வேண்டும் , குறை நிறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.
இப்படிக்கு,
அன்புடன்,

சிகரம்பாரதி.

Sunday, 1 June 2014

அகவை ஒன்பதில் சிகரம்!


                  வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்று ஒரு மிக முக்கியமான நாள். ஒரு கையெழுத்து சஞ்சிகையாக தன் பயணத்தை ஆரம்பித்த "சிகரம்" வலைத்தளம் வரை வேர்விட்டு தனது எட்டு ஆண்டுகளை நிறைவு செய்து ஒன்பதாம் ஆண்டில் கால் பதிக்கிறது.

                 நாம் அறிந்ததை பிறரும் அறிய வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் "சிகரம்". 2003 ஆம் ஆண்டிலிருந்து எனது எழுத்து முயற்சிகள் பல இருந்தாலும் 2006 இல் துவங்கிய "சிகரம்" தான் வெற்றிக் கதவைத் திறந்துவிட்டது. தரம் 11 இல் கல்வி கற்ற போது உருவாக்கப்பட்ட "சிகரம்" கையெழுத்து சஞ்சிகை 2009 வரை தனது பயணத்தை தொடர்ந்தது. போதிய வாசகர்களிடம் கொண்டு சென்று சேர்க்க இயலாத காரணத்தால் 2009 இல் கையெழுத்து சஞ்சிகையை இடை நிறுத்த வேண்டியதாகி விட்டது.


                  கையெழுத்து சஞ்சிகை என்பது ஒரு பிரதி தான் உருவாக்கப் படும். அதாவது என் கையெழுத்தில் உருவாக்கப்படும் நேரடிப் பிரதி ஒன்றைத்தான் ஒவ்வொரு வாசகரிடமும் எடுத்துச் சென்று வாசிக்கும் படி வழங்க வேண்டும். ஒருவரிடம் கொடுத்து அவர் வாசித்த பின் அவரிடம் இருந்து மீளப்பெற்று அடுத்த வாசகரிடம் கொடுக்க வேண்டும். இச்சுழற்சி முறையானது அடுத்த சஞ்சிகை வெளியிடப்படும் வரை நிகழும். அடுத்த சஞ்சிகை வெளியிட்ட பின் இதே முறையில் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மிகக் கடினமான பணிதான். ஆனாலும் பாடசாலைக் காலத்தில் ஓரளவுக்கு இலகுவாக இருந்தது. ஏனெனில் எனது வகுப்பறை மற்றும் பக்கத்து வகுப்பறைகளை கையெழுத்து சஞ்சிகையின் விநியோக மையங்களாக உபயோகித்துக் கொண்டேன்.

              பாடசாலைக் காலத்தின் பின் இது மிகக் கடினமான பணியானது. 2009 ஆகஸ்ட்டில் எனது பாடசாலைக் காலம் நிறைவடைந்தது. நாட்டின் பல பிரதேசங்களிலுமிருந்து வந்த மாணவர்கள் எங்கள் வகுப்பில் / தரத்தில் கல்வி கற்றனர். அவ்வாறான சுமார் 100 வாசகர்களே "சிகரம்"  கையெழுத்து சஞ்சிகையின் வாசகர்களாக இருந்து வந்தனர். பாடசாலைக் காலம் நிறைவடைந்த பின்னர் அவர்களில் முக்கால் வாசிப்பேர் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போய்விட்டனர். ஆகவே எனது ஊரை அண்டிய - மிகக் கிட்டிய பிரதேச நண்பர்களையே எனது வாசகர்களாக்கிக் கொள்ள நேர்ந்தது. ஒரு பத்துப் பதினைந்து பேரளவில் தான் இருக்கும்.

 

                       ஒவ்வொருவர் வீடுகளையும் தேடிச் சென்று கையெழுத்துப் பிரதியைக் கொடுத்துவிட்டு வரவேண்டும். மீண்டும் அவர் வீட்டுக்கு சென்று பிரதியை வாங்கிக் கொண்டு அடுத்த வாசகரின் இல்லம் நாடிச் செல்ல வேண்டும். வெயில், மழை மற்றும் தூரம் பாராது இப்பணியை சிலகாலம் முன்னெடுத்தேன். ஆனால் போதுமான வாசகர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் 100 வது பிரதியுடன் "சிகரம்" கையெழுத்து சஞ்சிகையை இடை நிறுத்தினேன்.

                   பாடசாலைக் காலத்திலேயே இலங்கையிலிருந்து வெளிவந்த பல்வேறு சஞ்சிகைகள், நாளிதழ்களுக்கு ஆக்கங்களை எழுதிக் கொண்டிருந்தேன். ஆகவே அதனை தொடர்ந்து செய்தேன். 75 க்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியிருக்கிறேன். பின்பு " தூறல்கள்" வலைத்தளத்தின் வாயிலாக செப்டெம்பர் 03, 2010 இல் கால் பதித்தேன். தொடர்ந்து மே 02, 2012 இல் "சிகரம்" வலைத்தளம் வாயிலாக பயணத்தைத் தொடர்கிறேன்.  ஜூலை 01, 2012 முதல் "கவீதாவின் பக்கங்கள்" வலைத்தளம் வாயிலாக என் தோழியின் கவிதைகளை அவரின் பிரதிநிதியாக இருந்து அவரது கவிதைகளை வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறேன்.

                  அத்துடன் இன்று மற்றுமொரு தளத்திலும் "சிகரம்" கால் பதிக்கிறது. அதாவது "சிகரம்" தனது செய்தி வலைத்தளமாக "சிகரம் 3" இனை அறிமுகம் செய்கிறது.   அரசியல், விளையாட்டு, சினிமா , அறிவியல் மற்றும் தொழிநுட்பம் சார்ந்த செய்திகளை [ஏனைய செய்தி வலைத்தளங்கள் / இணையத்தளங்கள் போல நிறைய பதிவுகளை வெளியிடாமல்] நாளுக்கு ஒன்று என்ற அடிப்படையில் வெளியிட தீர்மானித்துள்ளேன். முக்கியமான, பயனுள்ள விடயங்கள் மட்டுமே பகிரப்படும்.

 

                             இந்த நன்னாளில் எனது பெற்றோர் , பாடசாலை நண்பர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், பிரதேச எழுத்தாளர்கள், வலைத்தளம் மற்றும் முகநூல் [Facebook ] , டுவிட்டர் மற்றும் இன்ன பிற சமூக வலைத்தள நண்பர்கள் ,  திரட்டிகள் மற்றும் என் நலனில் அக்கறையுடையோர் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது பயணத்தின் முடிவிடமல்ல, ஒரு தரிப்பிடம். அவ்வளவுதான். இதோ புறப்பட்டுவிட்டேன், அடுத்த தரிப்பிடத்தை நோக்கி... ஒவ்வொரு தரிப்பிடங்களையும் நான் சென்றடையும் வரை என் நன்றிக்குரிய அனைவரிடமிருந்தும் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்க்கிறேன்.

அதுவரை 
என்றும் 
உங்கள் அன்பின் 
சிகரம்பாரதி.