Showing posts with label சூரியன் FM. Show all posts
Showing posts with label சூரியன் FM. Show all posts

Friday, 25 July 2014

16ஆவது அகவையில் சூரியன் FM


சூரியன் குழு

முதல் தரம்தான் தேவை என்று இலங்கையின் வானொலிகள் அனைத்தும் போட்டி போட்டு தங்களது சேவைகளில் பல பல புதிய செயற்றிட்டங்களை தொடர்ந்தும் உள் நுழைத்து வருகின்ற இக்காலகட்டத்தில், காலத்திற்கேற்ப தரமான இரசனை நிறைந்த நிகழ்ச்சிகளை, தேவையான நேரம் வழங்கி, பல கோடி வானலை நேயர்களை உறவுகளாக்கி அவர்களின் அன்போடு ஆண்டுகள் ஒன்றல்ல, இரண்டல்ல 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதற்தரமாக, வானலை வல்லரசனாக, முதற்தர வானொலியாக பண்பலையிலும் இணையத்திலும் பவனிவரும் சூரியன், இன்று ஜூலை 25ஆம் திகதியுடன் 16ஆவது சாதனை ஆண்டில் தடம் பதிக்கின்றான்.

வானொலி துறை சார்ந்த பல நட்சத்திரங்களை இன்று உலகளாவிய ரீதியில் உருவாக்கிவிட்ட பெருமையும் புகழும் சூரியன் வானொலியை சாரும் என்றால் அது மிகையாகாத உண்மை. இன்றைய காலகட்டத்தில் வானொலிகளின் பரிணாமங்கள் மற்றும் பரிமாணங்கள் சொல்லிலடங்காதவை. பண்பலைகளில் பவனி வந்த வானொலிகள் இப்போது சற்று அதனுடைய போக்கு மாறி இணையத்தினூடாக இணைய வானொலிகளாக பரிணமிக்க தொடங்கிவிட்டன. 

எவ்வாறு நோக்கினாலும், இவை அனைத்தும் சூரியன் வானொலியின் ஒருவகையான தாக்கத்துடன் தான் செயற்படச் செய்கின்றன. நமது வானலை அரசன் சூரியன் இப்போது பண்பலை மூலம் இலங்கை முழுவதிலும் இணைய வானொலியாக உலக நாடுகளிலும் அதிகமான இரசிகர்களைக் கொண்ட இணைய வானொலியாகவும் தெட்டத் தெளிவாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

சகோதர வானொலிகளான ஹிரு, ஷா, ஆங்கில வானொலிகளில் இலங்கையிலே முதற்தரமான Gold FM போன்றவற்றுடன் தொலைகாட்சியையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆசிய ஊடக வலையமைப்பின் தமிழ் வானொலியாக 1998ஆம் ஆண்டிலிருந்து திறமைமிகு, தன்னுடைய கடின உழைப்பின் பயனாக நாட்டின் பலம் பொருந்திய நிறுவனங்களுள் ஒன்றாக தடைகள் பல தாண்டியும், தளராத உறுதிமிகு மனதுடன் ரெய்னோ சில்வா வழி நடத்திச்செல்ல, சூரியன் வானொலியை, சூரியன் உச்சம் தொட, சூரியன் முதற்தரம் என்ற நாமம் பெற, தற்போதைய வானலைகளில் முன்னணி அறிவிப்பாளர்களை உருவாக்கிவிட்ட, காலை நேர நிகழ்ச்சிகளின் கதாநாயகன், பல விடயங்களிலும் வானொலி துறையிலும் அனுபவம் கொண்டு, தனியார் வானொலிகளில் பல புதுமைகளைப் புகுத்திய A.R.V. லோஷனின் சிறப்பான, துல்லியமான வழி நடத்தலுடன் சூரியன் வானொலியின் வெற்றிப்பயணம் தொடர்கிறது...

சூரியனின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி திறமைகளைத் தன்னகத்தே கொண்டு பல புதுமைகளை வானலையில் புகுத்தி, மக்கள் மனங்களில் இன்னும் நீங்காத கதாநாயகர்களாக திகழ்கின்றார்கள். அவ்வாறாக தனது நகைச்சுவையான பேச்சாற்றல், சிறப்பான நிகழ்ச்சி வடிவமைப்பு, பல வானொலிகளில் இன்று சில நிகழ்ச்சிகள் இவருடைய தயாரிப்புகளின் கொப்பி என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது. இவற்றையும் விட விளம்பர கோர்ப்புகள், என பல திறமைகளைக் தன்னகத்தே கொண்ட இசைச்சமர் கதாநாயகன் சந்ரு, சூரியனின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளராக தன்னுடைய சேவையை வழங்குகிறார்.
இவர்களுடன் தன்னுடைய இனிமையான குரலால் பல உள்ளங்களை வசீகரித்து 'யாரு பேசுறீங்க' என்ற நிகழ்ச்சியூடாக பலரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களைக் குழப்பி சிறந்த நகைச்சுவையுணர்வை தூண்டும் நிகழ்ச்சியைத் தருபவர், மாலை வேளையின் மன்னன் தன்னுடன் பழகும் அனைவருக்கும் மாலை போடக்கூடிய (மாலையின் ரகசியம் ஒரு சிலருக்கு தான் தெரியும்) அலுவலகத்தில் இருக்கும் நேரம் அனைவரையும் கலகலக்க வைக்கும் ஒருவர், அவர் தான் DJ டிலான், உதவி முகாமையாளராக செயற்படுகிறார். 

பெருமை மிகு 16ஆவது ஆண்டில் கால்பதித்த சூரியன் வானலையில் அதிகாலை வேளையில் ஆனந்தமாய் நாள் ஆரம்பத்தில் பொழுது விடியும் பொழுதிலே, உறவுகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி, மனதுக்கு இனிமைத் தரும் பாடல்களுடன் சூரியன் தன்னுடைய கதிர்களை அருணோதயம் நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கின்றான். றிம்ஷாட் மற்றும் பிரஷா ஆகியோரின் குரலுடன் உதயமாகிறது அன்றைய நாள்...

புதிய நாளில் புது தகவல் கேட்க, நாட்டு நடப்புகளை நன்கறிந்துக்கொள்ள, சூரியனின் Super Sports கேட்க, பேப்பர் பொடியனின் நகைச்சுவையான நக்கல் உரையாடலுடன், தென்னிந்திய பிரபலங்களின் உள் மன குமுறல்களை கிளறிக்கொட்டுவதுடன், காலைக்கு தேவையான மூளைக்கான பலமாக வருகிறது சூரிய ராகங்கள். சூரியனின் பணிப்பாளர் A.R.V. லோஷனுடன் மனோஜ் சிறப்பாக தொகுத்து வழங்க, அறிவு வளம் பெருகும் காலையாக புதிய நாள் ஆரம்பமாகிறது.

ஒவ்வொரு நாளும் சிரிக்க வேண்டும், அதுவும் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்களே, அதேபோல் சிரிக்க குதூகலமாய் நிகழ்ச்சி கேட்க, நகைச்சுவை பேச்சாற்றலால் நல்ல நிகழ்ச்சியை வழங்கும் சூரியனின் சிரேஷ்ட முகாமையாளர் சந்ருவுடனும் மேனகாவுடனும் இசைச்சமர் வெற்றிநடை போடுகிறது.

இசைச்சமர் ஓயும் நேரம் மதிய பொழுதை அட்டகாசமாக ஆரம்பிக்க, இனிய பாடல்கள்தர உறவுகளுக்கு வாழ்த்துக்களையும் சொல்ல, அலுவலக கடமைகளின் ஓய்வு நேரத்தின் உற்ற தோழனாய் ஓங்கி ஒலிக்கிறது, மதிய நேர இசை விருந்து, நிஷாந்தன் மற்றும் வர்ஷி ஆகியோர் நிகழ்ச்சியை தருகின்றனர்.

மாலை வேளையின் ஆரம்பமாக உலகின் புதினமான தகவல்களை அள்ளிக்கொண்டு, ஏனையோரை முந்திக்கொண்டு மனம் கவர்ந்த பாடல்களுடன், விளையாட்டு தகவல்கள், சினிமா, அரசியல், தொழில்நுட்பம் என சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சியாக 'கும்மாளம்' ஒலிக்கிறது. இதனை தரணீதரன் மற்றும் பிரவீனா சிறப்பாக மற்றும் தெளிவாக தருகிறார்கள்.

அலுவலக கடமைகளை முடித்துக்கொண்டு பயணம் செய்வோரின் மனங்களை மகிழ்விக்க, கலகலப்பான மாலை வேளையை அலங்கரிக்கும்படி இனிய புதிய பாடல்களைக் கேட்க 'யார் பேசுறீங்க' பகுதியினூடாக பல இரசிகர்களைக் கலகலப்பாக்கி அவர்களையும் மகிழ்விக்கும் சூரியனின் உதவி நிகழ்ச்சி முகாமையாளர் டிலான் மற்றும் கோபிகா ஆகியோரின் 'என்றென்றும் புன்னகை' எல்லோரையும் புன்னகைக்கச் செய்யும் இரவு 8.45 வரை.

காதல் கீதங்களுடன், மனதுக்கு இனிமையான இடைக்கால பாடல்களின் பயணம், பல கவிஞர்களை உருவாக்கிவரும் நிகழ்ச்சி, உழைத்து களைத்த உள்ளங்களுக்கு ஓர் இரவுமருந்து - சூர்யா தொகுத்தளிக்கும் 'நேற்றைய காற்று' நள்ளிரவு 12 மணிவரை தாலாட்டு பாடுகிறது. 

அதிரடியான ஆட வைக்கும் பாடல்கள் தர சூரியனின் விடிய விடிய இரவுச் சூரியன், இரவு நேர வேலையாட்களை மகிழ்விக்கிறது. அவர்களின் உற்ற தோழனாக விடிய விடிய இரவுச் சூரியன் தனது பங்களிப்பை வழங்குகிறுது. ரமேஷ், பிரஷாந்த், கஸ்ட்ரோ, லரீப் ஆகியோர் ஆடல் பாடல்களாக குதூகலிக்க வைக்கிறார்கள்.

உலகில் எந்த மூலையில் என்ன விளையாட்டுக்கள் நடந்தாலும், உடனுக்குடன் தெட்டத் தெளிவாக உண்மையான தகவல்களை அள்ளித்தர சூரியனின் 'வெற்றி நடைபோடும் விளையாட்டுச் செய்திகள்' என தினமும் தகவல்களைத் தர சனிக்கிழமை பொழுதின் மாலைவேளை முழுமையான விளையாட்டு நிகழ்ச்சியாக 'அட்டகாசம்' வருகிறது. புது புது தகவல்களை தரணீ தொகுத்து வழங்க, காலை நேரத்தின் விளையாட்டு தகவல்களை சூரியனின் சூடான விளையாட்டுத் தகவல்களை, கிழமை நாட்களில் A.R.V. லோஷன் தொகுத்தளிக்கிறார்.


இவ்வாறாக சூரியனின் தொடரும் சாதனைப் பயணத்தில் மணிவண்ணன், மயூரன், ராகவன், வேணி, பிரசாந்தா ஆகியோர் தமது தனித்துவமான செய்தி வாசிப்பினால் நேயர்களின் நெஞ்சங்களில் தமக்கென தனித்துவமானதோர் இடத்தினை பிடித்துள்ளதோடு, வார இறுதி நாட்களில் பல சிறப்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகின்றனர்.

சூரியன் செய்திப் பிரிவு

சூரியன் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அனைவர் மத்தியிலும் சிறந்து வரவேற்பு பெற்றது சூரியன் செய்திகள் என்றால் அது மிகையாகாது. செய்தி பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக இந்திரஜித் செயற்பட சிரேஷ்ட செய்தி ஆசிரியராக V.S.சிகாமணி, சதீப்குமார், விக்னேஷ்வரன், கிருஷ்ணகுமார், நாகவாணி ராஜா ஆகியோர் சூரியன் செய்தி பிரிவில் தங்களுடைய வேலையை சிறப்பாக வழங்குகிறார்கள்.

இதேபோல சூரியனின் புது மெருகு பெறும் நிலையக்குறியிசைகளை புதிய மெட்டுக்கள், ரசனையான இசைக்கோர்வைகளுடன் தந்து அசத்திக்கொண்டிருக்கும் இசைக் கோர்ப்பாளர் ஹனி நயாகராவும் சூரியக் குழுவின் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவர்.

அதேபோல் சூரியன் பல சாதனைகளைத் தொட, சூரியனின் பல வெளிக்கள நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி அவை அனைத்திலும் சாதனை படைக்க முக்கிய காரணமாக இரவு - பகல் பாராது உழைத்துக்கொண்டு, சூரியனின் வளர்ச்சிக்கு தூண்டு கோலாக சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவினர் செயற்படுகின்றனர். 


கள்ளமனத்தின் கோடியில் என்ற நிகழ்ச்சியினூடாக பல தென்னிந்திய நட்சத்திரங்களை சந்திக்க சூரியனின் பிரம்மாண்டமான Mega Blast இசை நிகழ்ச்சிக்கும் பெரும் பங்கு வகிக்கும் அஷ்ரப், சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக பணியாற்றுகிறார். உதவி முகாமையாளராக  அஜித்குமார் மற்றும்  கார்த்திக், பாரி, சுரேன் ஆகியோரும் இன்னும் புதியவர்கள் பலரும்  சூரிய குழுவுடன் இணைந்து சூரியன் வானொலி விண்ணைத் தொட்ட சாதனைப் பயணத்தில் கரம் கோர்க்கிறார்கள்.

வானொலி வரலாற்றில் இணையத்தளத்திலும் தனது கைவரிசையைக் காட்ட தொடங்கியுள்ளான் முதல்வன். சமூக வலைத்தளமான சூரியனின் பேஸ்புக் பக்கத்திலும் இலங்கையின் ஏனைய வானொலிகளும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு 3 லட்சத்துக்கும் அதிகமான இரசிகர்களை உள்ளடக்கி மாபெரும் சாதனையை படைத்துள்ளமை, சூரியன் ரசிகர் மட்டத்தில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது. 

வெறுமனே ஒலிபரப்புத்துறை சார்ந்த விடயங்களில் மட்டுமல்லாது சமூக சிந்தனையுடன் பல சமூக நலத் திட்டங்களையும் வெற்றிகரமாக முதல்வன் சூரியன் முன்னெடுத்து மாபெரும் சாதனையை படைத்துள்ளான். சமூக அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுகளை வழங்கியமை மட்டுமல்லாது, இன்று வரைக்கும் சமூக சேவைகளிலும் தன்னுடைய முழுமையான பங்களிப்பை தன் அன்பு நேயர்களின் முழு உதவியுடன் மேற்கொண்டு வருகிறான். எமது நாட்டில் மட்டுமல்லாது, தெற்காசியா போன்ற இடங்களிலும் சிறந்த வானொலியாக பல விருதுகளைப் பெற்ற ஒரே ஓர் இலங்கையின் தமிழ் வானொலி சூரியன் மட்டுமே. அதேபோல் இரசிகர் மன்றங்கள் சூரியன் வானலைக்கு ஏராளம், எமது நாட்டில் மட்டுமல்லாது, எம் உறவுகள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தனக்கான தனி இடத்தை ரசிகர் மன்றங்களினூடாக அதிகரித்திருக்கிறான். 

இவ்வாறாக சூரியன் வான் அளவு ஓங்கியுள்ளது என்றால் அதற்கு முழுக்காரணமும் சூரியன் பண்பலையை நேசிக்கும் அதன் உண்மையான இரசிகர்களையே சாரும். அதனையே சூரியக் குடும்பமும் எப்போதும் நினைவுபடுத்துகிறது. இவ்வாறாக தன் குடும்பத்தில் ஓர் உறவுபோல் சூரியன் வானலையை போற்றும், நேசிக்கும் யாரும் அசைக்க முடியாத அன்பு நேயர்களின் முழுமையான பங்களிப்போடு, தொடரும் ஆண்டுகளிலும் முதல்வனின் முத்தான சாதனைப் பயணம் முதற்தரமாக இன்றுபோல் என்றும் மாறாமல் தொடரும் என்பதில் ஐயமில்லை.


16 வது அகவையை நிறைவு செய்து 17 வது அகவையில் கால்பதிக்கும் "சூரியன் " பன்பலைக்கு "சிகரம்" குடும்பம் சார்பாகவும் இனிய வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

-சிகரம்-