Showing posts with label பிறந்தநாள். Show all posts
Showing posts with label பிறந்தநாள். Show all posts

Friday, 25 July 2014

16ஆவது அகவையில் சூரியன் FM


சூரியன் குழு

முதல் தரம்தான் தேவை என்று இலங்கையின் வானொலிகள் அனைத்தும் போட்டி போட்டு தங்களது சேவைகளில் பல பல புதிய செயற்றிட்டங்களை தொடர்ந்தும் உள் நுழைத்து வருகின்ற இக்காலகட்டத்தில், காலத்திற்கேற்ப தரமான இரசனை நிறைந்த நிகழ்ச்சிகளை, தேவையான நேரம் வழங்கி, பல கோடி வானலை நேயர்களை உறவுகளாக்கி அவர்களின் அன்போடு ஆண்டுகள் ஒன்றல்ல, இரண்டல்ல 15 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதற்தரமாக, வானலை வல்லரசனாக, முதற்தர வானொலியாக பண்பலையிலும் இணையத்திலும் பவனிவரும் சூரியன், இன்று ஜூலை 25ஆம் திகதியுடன் 16ஆவது சாதனை ஆண்டில் தடம் பதிக்கின்றான்.

வானொலி துறை சார்ந்த பல நட்சத்திரங்களை இன்று உலகளாவிய ரீதியில் உருவாக்கிவிட்ட பெருமையும் புகழும் சூரியன் வானொலியை சாரும் என்றால் அது மிகையாகாத உண்மை. இன்றைய காலகட்டத்தில் வானொலிகளின் பரிணாமங்கள் மற்றும் பரிமாணங்கள் சொல்லிலடங்காதவை. பண்பலைகளில் பவனி வந்த வானொலிகள் இப்போது சற்று அதனுடைய போக்கு மாறி இணையத்தினூடாக இணைய வானொலிகளாக பரிணமிக்க தொடங்கிவிட்டன. 

எவ்வாறு நோக்கினாலும், இவை அனைத்தும் சூரியன் வானொலியின் ஒருவகையான தாக்கத்துடன் தான் செயற்படச் செய்கின்றன. நமது வானலை அரசன் சூரியன் இப்போது பண்பலை மூலம் இலங்கை முழுவதிலும் இணைய வானொலியாக உலக நாடுகளிலும் அதிகமான இரசிகர்களைக் கொண்ட இணைய வானொலியாகவும் தெட்டத் தெளிவாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

சகோதர வானொலிகளான ஹிரு, ஷா, ஆங்கில வானொலிகளில் இலங்கையிலே முதற்தரமான Gold FM போன்றவற்றுடன் தொலைகாட்சியையும் தன்னகத்தே கொண்டுள்ள ஆசிய ஊடக வலையமைப்பின் தமிழ் வானொலியாக 1998ஆம் ஆண்டிலிருந்து திறமைமிகு, தன்னுடைய கடின உழைப்பின் பயனாக நாட்டின் பலம் பொருந்திய நிறுவனங்களுள் ஒன்றாக தடைகள் பல தாண்டியும், தளராத உறுதிமிகு மனதுடன் ரெய்னோ சில்வா வழி நடத்திச்செல்ல, சூரியன் வானொலியை, சூரியன் உச்சம் தொட, சூரியன் முதற்தரம் என்ற நாமம் பெற, தற்போதைய வானலைகளில் முன்னணி அறிவிப்பாளர்களை உருவாக்கிவிட்ட, காலை நேர நிகழ்ச்சிகளின் கதாநாயகன், பல விடயங்களிலும் வானொலி துறையிலும் அனுபவம் கொண்டு, தனியார் வானொலிகளில் பல புதுமைகளைப் புகுத்திய A.R.V. லோஷனின் சிறப்பான, துல்லியமான வழி நடத்தலுடன் சூரியன் வானொலியின் வெற்றிப்பயணம் தொடர்கிறது...

சூரியனின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி திறமைகளைத் தன்னகத்தே கொண்டு பல புதுமைகளை வானலையில் புகுத்தி, மக்கள் மனங்களில் இன்னும் நீங்காத கதாநாயகர்களாக திகழ்கின்றார்கள். அவ்வாறாக தனது நகைச்சுவையான பேச்சாற்றல், சிறப்பான நிகழ்ச்சி வடிவமைப்பு, பல வானொலிகளில் இன்று சில நிகழ்ச்சிகள் இவருடைய தயாரிப்புகளின் கொப்பி என்று சொன்னால் யாரும் மறுக்க முடியாது. இவற்றையும் விட விளம்பர கோர்ப்புகள், என பல திறமைகளைக் தன்னகத்தே கொண்ட இசைச்சமர் கதாநாயகன் சந்ரு, சூரியனின் சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளராக தன்னுடைய சேவையை வழங்குகிறார்.
இவர்களுடன் தன்னுடைய இனிமையான குரலால் பல உள்ளங்களை வசீகரித்து 'யாரு பேசுறீங்க' என்ற நிகழ்ச்சியூடாக பலரை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களைக் குழப்பி சிறந்த நகைச்சுவையுணர்வை தூண்டும் நிகழ்ச்சியைத் தருபவர், மாலை வேளையின் மன்னன் தன்னுடன் பழகும் அனைவருக்கும் மாலை போடக்கூடிய (மாலையின் ரகசியம் ஒரு சிலருக்கு தான் தெரியும்) அலுவலகத்தில் இருக்கும் நேரம் அனைவரையும் கலகலக்க வைக்கும் ஒருவர், அவர் தான் DJ டிலான், உதவி முகாமையாளராக செயற்படுகிறார். 

பெருமை மிகு 16ஆவது ஆண்டில் கால்பதித்த சூரியன் வானலையில் அதிகாலை வேளையில் ஆனந்தமாய் நாள் ஆரம்பத்தில் பொழுது விடியும் பொழுதிலே, உறவுகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி, மனதுக்கு இனிமைத் தரும் பாடல்களுடன் சூரியன் தன்னுடைய கதிர்களை அருணோதயம் நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கின்றான். றிம்ஷாட் மற்றும் பிரஷா ஆகியோரின் குரலுடன் உதயமாகிறது அன்றைய நாள்...

புதிய நாளில் புது தகவல் கேட்க, நாட்டு நடப்புகளை நன்கறிந்துக்கொள்ள, சூரியனின் Super Sports கேட்க, பேப்பர் பொடியனின் நகைச்சுவையான நக்கல் உரையாடலுடன், தென்னிந்திய பிரபலங்களின் உள் மன குமுறல்களை கிளறிக்கொட்டுவதுடன், காலைக்கு தேவையான மூளைக்கான பலமாக வருகிறது சூரிய ராகங்கள். சூரியனின் பணிப்பாளர் A.R.V. லோஷனுடன் மனோஜ் சிறப்பாக தொகுத்து வழங்க, அறிவு வளம் பெருகும் காலையாக புதிய நாள் ஆரம்பமாகிறது.

ஒவ்வொரு நாளும் சிரிக்க வேண்டும், அதுவும் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்களே, அதேபோல் சிரிக்க குதூகலமாய் நிகழ்ச்சி கேட்க, நகைச்சுவை பேச்சாற்றலால் நல்ல நிகழ்ச்சியை வழங்கும் சூரியனின் சிரேஷ்ட முகாமையாளர் சந்ருவுடனும் மேனகாவுடனும் இசைச்சமர் வெற்றிநடை போடுகிறது.

இசைச்சமர் ஓயும் நேரம் மதிய பொழுதை அட்டகாசமாக ஆரம்பிக்க, இனிய பாடல்கள்தர உறவுகளுக்கு வாழ்த்துக்களையும் சொல்ல, அலுவலக கடமைகளின் ஓய்வு நேரத்தின் உற்ற தோழனாய் ஓங்கி ஒலிக்கிறது, மதிய நேர இசை விருந்து, நிஷாந்தன் மற்றும் வர்ஷி ஆகியோர் நிகழ்ச்சியை தருகின்றனர்.

மாலை வேளையின் ஆரம்பமாக உலகின் புதினமான தகவல்களை அள்ளிக்கொண்டு, ஏனையோரை முந்திக்கொண்டு மனம் கவர்ந்த பாடல்களுடன், விளையாட்டு தகவல்கள், சினிமா, அரசியல், தொழில்நுட்பம் என சகல அம்சங்களையும் உள்ளடக்கிய சிறப்பு நிகழ்ச்சியாக 'கும்மாளம்' ஒலிக்கிறது. இதனை தரணீதரன் மற்றும் பிரவீனா சிறப்பாக மற்றும் தெளிவாக தருகிறார்கள்.

அலுவலக கடமைகளை முடித்துக்கொண்டு பயணம் செய்வோரின் மனங்களை மகிழ்விக்க, கலகலப்பான மாலை வேளையை அலங்கரிக்கும்படி இனிய புதிய பாடல்களைக் கேட்க 'யார் பேசுறீங்க' பகுதியினூடாக பல இரசிகர்களைக் கலகலப்பாக்கி அவர்களையும் மகிழ்விக்கும் சூரியனின் உதவி நிகழ்ச்சி முகாமையாளர் டிலான் மற்றும் கோபிகா ஆகியோரின் 'என்றென்றும் புன்னகை' எல்லோரையும் புன்னகைக்கச் செய்யும் இரவு 8.45 வரை.

காதல் கீதங்களுடன், மனதுக்கு இனிமையான இடைக்கால பாடல்களின் பயணம், பல கவிஞர்களை உருவாக்கிவரும் நிகழ்ச்சி, உழைத்து களைத்த உள்ளங்களுக்கு ஓர் இரவுமருந்து - சூர்யா தொகுத்தளிக்கும் 'நேற்றைய காற்று' நள்ளிரவு 12 மணிவரை தாலாட்டு பாடுகிறது. 

அதிரடியான ஆட வைக்கும் பாடல்கள் தர சூரியனின் விடிய விடிய இரவுச் சூரியன், இரவு நேர வேலையாட்களை மகிழ்விக்கிறது. அவர்களின் உற்ற தோழனாக விடிய விடிய இரவுச் சூரியன் தனது பங்களிப்பை வழங்குகிறுது. ரமேஷ், பிரஷாந்த், கஸ்ட்ரோ, லரீப் ஆகியோர் ஆடல் பாடல்களாக குதூகலிக்க வைக்கிறார்கள்.

உலகில் எந்த மூலையில் என்ன விளையாட்டுக்கள் நடந்தாலும், உடனுக்குடன் தெட்டத் தெளிவாக உண்மையான தகவல்களை அள்ளித்தர சூரியனின் 'வெற்றி நடைபோடும் விளையாட்டுச் செய்திகள்' என தினமும் தகவல்களைத் தர சனிக்கிழமை பொழுதின் மாலைவேளை முழுமையான விளையாட்டு நிகழ்ச்சியாக 'அட்டகாசம்' வருகிறது. புது புது தகவல்களை தரணீ தொகுத்து வழங்க, காலை நேரத்தின் விளையாட்டு தகவல்களை சூரியனின் சூடான விளையாட்டுத் தகவல்களை, கிழமை நாட்களில் A.R.V. லோஷன் தொகுத்தளிக்கிறார்.


இவ்வாறாக சூரியனின் தொடரும் சாதனைப் பயணத்தில் மணிவண்ணன், மயூரன், ராகவன், வேணி, பிரசாந்தா ஆகியோர் தமது தனித்துவமான செய்தி வாசிப்பினால் நேயர்களின் நெஞ்சங்களில் தமக்கென தனித்துவமானதோர் இடத்தினை பிடித்துள்ளதோடு, வார இறுதி நாட்களில் பல சிறப்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகின்றனர்.

சூரியன் செய்திப் பிரிவு

சூரியன் ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரை அனைவர் மத்தியிலும் சிறந்து வரவேற்பு பெற்றது சூரியன் செய்திகள் என்றால் அது மிகையாகாது. செய்தி பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக இந்திரஜித் செயற்பட சிரேஷ்ட செய்தி ஆசிரியராக V.S.சிகாமணி, சதீப்குமார், விக்னேஷ்வரன், கிருஷ்ணகுமார், நாகவாணி ராஜா ஆகியோர் சூரியன் செய்தி பிரிவில் தங்களுடைய வேலையை சிறப்பாக வழங்குகிறார்கள்.

இதேபோல சூரியனின் புது மெருகு பெறும் நிலையக்குறியிசைகளை புதிய மெட்டுக்கள், ரசனையான இசைக்கோர்வைகளுடன் தந்து அசத்திக்கொண்டிருக்கும் இசைக் கோர்ப்பாளர் ஹனி நயாகராவும் சூரியக் குழுவின் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவர்.

அதேபோல் சூரியன் பல சாதனைகளைத் தொட, சூரியனின் பல வெளிக்கள நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி அவை அனைத்திலும் சாதனை படைக்க முக்கிய காரணமாக இரவு - பகல் பாராது உழைத்துக்கொண்டு, சூரியனின் வளர்ச்சிக்கு தூண்டு கோலாக சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவினர் செயற்படுகின்றனர். 


கள்ளமனத்தின் கோடியில் என்ற நிகழ்ச்சியினூடாக பல தென்னிந்திய நட்சத்திரங்களை சந்திக்க சூரியனின் பிரம்மாண்டமான Mega Blast இசை நிகழ்ச்சிக்கும் பெரும் பங்கு வகிக்கும் அஷ்ரப், சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளராக பணியாற்றுகிறார். உதவி முகாமையாளராக  அஜித்குமார் மற்றும்  கார்த்திக், பாரி, சுரேன் ஆகியோரும் இன்னும் புதியவர்கள் பலரும்  சூரிய குழுவுடன் இணைந்து சூரியன் வானொலி விண்ணைத் தொட்ட சாதனைப் பயணத்தில் கரம் கோர்க்கிறார்கள்.

வானொலி வரலாற்றில் இணையத்தளத்திலும் தனது கைவரிசையைக் காட்ட தொடங்கியுள்ளான் முதல்வன். சமூக வலைத்தளமான சூரியனின் பேஸ்புக் பக்கத்திலும் இலங்கையின் ஏனைய வானொலிகளும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு 3 லட்சத்துக்கும் அதிகமான இரசிகர்களை உள்ளடக்கி மாபெரும் சாதனையை படைத்துள்ளமை, சூரியன் ரசிகர் மட்டத்தில் பெற்றுள்ள முக்கியத்துவத்தை எடுத்தியம்புகிறது. 

வெறுமனே ஒலிபரப்புத்துறை சார்ந்த விடயங்களில் மட்டுமல்லாது சமூக சிந்தனையுடன் பல சமூக நலத் திட்டங்களையும் வெற்றிகரமாக முதல்வன் சூரியன் முன்னெடுத்து மாபெரும் சாதனையை படைத்துள்ளான். சமூக அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவுகளை வழங்கியமை மட்டுமல்லாது, இன்று வரைக்கும் சமூக சேவைகளிலும் தன்னுடைய முழுமையான பங்களிப்பை தன் அன்பு நேயர்களின் முழு உதவியுடன் மேற்கொண்டு வருகிறான். எமது நாட்டில் மட்டுமல்லாது, தெற்காசியா போன்ற இடங்களிலும் சிறந்த வானொலியாக பல விருதுகளைப் பெற்ற ஒரே ஓர் இலங்கையின் தமிழ் வானொலி சூரியன் மட்டுமே. அதேபோல் இரசிகர் மன்றங்கள் சூரியன் வானலைக்கு ஏராளம், எமது நாட்டில் மட்டுமல்லாது, எம் உறவுகள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் தனக்கான தனி இடத்தை ரசிகர் மன்றங்களினூடாக அதிகரித்திருக்கிறான். 

இவ்வாறாக சூரியன் வான் அளவு ஓங்கியுள்ளது என்றால் அதற்கு முழுக்காரணமும் சூரியன் பண்பலையை நேசிக்கும் அதன் உண்மையான இரசிகர்களையே சாரும். அதனையே சூரியக் குடும்பமும் எப்போதும் நினைவுபடுத்துகிறது. இவ்வாறாக தன் குடும்பத்தில் ஓர் உறவுபோல் சூரியன் வானலையை போற்றும், நேசிக்கும் யாரும் அசைக்க முடியாத அன்பு நேயர்களின் முழுமையான பங்களிப்போடு, தொடரும் ஆண்டுகளிலும் முதல்வனின் முத்தான சாதனைப் பயணம் முதற்தரமாக இன்றுபோல் என்றும் மாறாமல் தொடரும் என்பதில் ஐயமில்லை.


16 வது அகவையை நிறைவு செய்து 17 வது அகவையில் கால்பதிக்கும் "சூரியன் " பன்பலைக்கு "சிகரம்" குடும்பம் சார்பாகவும் இனிய வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

-சிகரம்-

Monday, 21 July 2014

முதலாம் மண்டேலா தினம்!

நெல்சன் மண்டேலா… ஜூலை 18, 1918-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள  முவெசோ என்ற ஊரில் பிறந்தார். முழுப் பெயர் ‘நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா’  ரோலிஹ்லாலா என்றால், தொல்லைகள் கொடுப்பவன் என்று அர்த்தம். இவரது தந்தை சோசா, பழங்குடி இன மக்களின் தலைவர்.

ஆடு மாடு மேய்த்துக்கொண்டே  குத்துச் சண்டையையும், பல்வேறு போர்க் கலைகளையும் பயின்றார். அவற்றை, ஆடு மாடு மேய்க்க வரும் மற்ற பிள்ளைகளுடன் பயிற்சி செய்வார். அப்போது ஏகப்பட்ட பழங்குடியினர் கதைகளைக் கேட்டு, தன் நாடு எப்படி ஆங்கிலேயர் வசம் போனது என அறிந்துகொண்டார்.


ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். பின்னர் உறவுக்காரரான ஜோன்கின்தபா என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். தன் இனத்திலேயே முதன் முதலில் பள்ளிக்குச் சென்ற மண்டேலா, படிப்பில் சுட்டியாக இருந்தார்.
ஜோன்கின்தபா இவருக்கும் இவரின் தம்பிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்தார். இதை விரும்பாத நெல்சன் மண்டேலா, வீட்டைவிட்டு ஓடிப்போய் சுரங்கத்தில் காவலாளியாகவும் தோட்டக்காரராகவும் வேலைபார்த்தார்.
நெல்சன் மண்டேலா, கல்லூரிக் காலத்தில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ராணுவப் பிரிவை உருவாக்கினார். கல்லூரியில் ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி, ஆயுதக் கலகம் விளைவிக்க முயன்றார். அதனால் கல்லூரியைவிட்டு நீக்கப்பட்டார்.
  
ஒரு வழியாக சட்டம் பயின்று முடித்தார். அப்போது கறுப்பின மக்களை அடக்கி ஆளும் தேசியக் கட்சி, தேர்தலில் வென்றதால், பல்வேறு போராட்டங்களில் கல்லூரித் தோழர்களுடன் ஈடுபட்டார்.  இலவசமாக சட்ட மையம் ஒன்றை ஆரம்பித்து, ஏழை மற்றும் அப்பாவிக் கறுப்பின மக்களுக்குச் சட்ட உதவி செய்தார்.

முதலில் அமைதி வழியில் செயல்பட்ட மண்டேலா, பிறகு ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்தார். அதனால், குற்றம்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் வழக்கு நடைபெற்றது. அப்போது பல மாறுவேடங்களில்  சுற்றினார். இங்கிலாந்து மக்களைப் ஃபிரான்ஸில் இருந்து காப்பாற்றிய நாயகன் பிம்பெர்னல் போல மாறுவேடம் பூண்டபோது, மக்கள் கறுப்பு பிம்பெர்னல் என அழைத்தனர்.


தென் ஆப்பிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 1964 ஜுன் 12-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது 46. கடந்த நூற்றாண்டில் அதிக ஆண்டு காலம் சிறையில் இருந்த அரசியல் தலைவர் நெல்சன் மண்டேலாதான். 27 வருடங்கள் சிறையில் இருந்தார். உடன் இருக்கும் கைதிகளுடன் பேசவும் அனுமதி இவருக்கு இல்லை.
இவரது மூத்த மகன் விபத்தில் இறந்தபோது,  ‘மன்னிப்புக் கேட்டால் வெளியே விடுகிறோம்’ என்ற நிபந்தனை விதித்தது அரசு. கம்பீரமாக மறுத்தார் மண்டேலா. காந்தியின் சத்திய சோதனையைப் பொறுமையாக வாசித்தார். காந்தி மீது அபிமானம் ஏற்பட்டது. ‘எனக்கு எல்லை இல்லாத மன தைரியம் வழங்கியது காந்திஜியின் சத்திய சோதனைதான்’ என்றார். 1990-ல் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி கிளார்க் முயற்சியால் விடுதலை ஆனார்.

அரசாங்கத்துடன் நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, அனைத்து மக்களும் இணைந்து ஓட்டு அளிக்கும் முறைக்கு ஒப்புக்கொண்டனர். அப்போது நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதி ஆனார்.  இவருக்கு 1993-ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ”நான் கறுப்பின மக்களின் விடுதலையை விரும்புகிறேன். அதே சமயம் வெள்ளையர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் வெறுக்கிறேன். நிறங்களைக் கடந்து மனிதர்களாக அன்பு செய்பவர்களாக என் நாட்டு மக்கள் திகழ வேண்டும்” என்றார் மண்டேலா.

********

தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத் தலைவராகத் திகழ்ந்து மறைந்த நெல்சன் மண்டேலாவின் 96ஆவது பிறந்த நாள் கடந்த 18 ஆம் திகதி உலகெங்கும் 'மண்டேலா தின'மாகக் கொண்டாடப்பட்டது.

67 வருடங்கள் அவர் தங்களது நாட்டிற்கு சேவை செய்ததை நினைவு கூறும் விதமாக கடந்த ஐந்து வருடங்களாக லட்சக்கணக்கான மக்கள் அவரது பிறந்த நாளன்று 67 நிமிடங்கள் பொதுநல செய்கைகளில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்கிலும், நியுயார்க்கிலும் தொடங்கப்பட்ட இந்த பொதுநல நடவடிக்கைகள் இந்த ஆண்டு 126 நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய நிகழ்ச்சிகள் பாரிஸ், நியுயார்க், டல்லாஸ், லண்டன், எடின்பரோ, லண்டன் போன்ற நகரங்களில் நடைபெற்றன. சீனாவில் அவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியிடப்பட்டது. தென்னாப்பிரிக்க மக்கள் இந்த நாளை பள்ளிகளை சுத்தம் செய்வதில் தொடங்கி பெங்குவின் பறவையை தத்தெடுத்துக் கொள்ளுவது வரையிலான செயல்களில் ஈடுபட்டனர்.

அந்நாட்டின் அதிபர் ஜாகப் ஜுமாவும் மண்டேலா பிறந்த ஊரான முவேசொவில் உள்ள பள்ளி ஒன்றில் சுத்தம் செய்யும் பொறுப்பில் சிறிது நேரம் ஈடுபட்டார். மண்டேலாவின் பழங்குடிப் பெயரான மடிபா என்ற பெயரில் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் திட்டம் ஒன்றினை அறிவித்த அவர் இதன்மூலம் தங்களுடைய நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்துவதாகக் கூறினார். பத்திரிக்கை நிறுவனங்களும் தங்கள் தரப்பில் அநாதை இல்லங்களுக்கு உதவுவது, ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குவது போன்ற பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தின.

இதுதவிர உணவு பாதுகாப்பும் மற்றொரு முக்கிய திட்டமாக இங்கு செயல்படுத்தப்பட்டது.மொத்த ஜனத்தொகையில் கால் பங்கு மக்கள் பசி, பட்டினியில் வாடுவதாக அறியப்படும் இந்த நாட்டில் பொதுமக்கள் காய்கறித் தோட்டங்களை உருவாக்கும் செயலிலும், இலவச உணவளிக்கும் திட்டங்களுக்கு உதவுவதிலும் ஈடுபட்டனர். உயர் குற்றங்களுக்குப் பெயர்போன இந்த நாட்டில் ஒருவர் சுய பாதுகாப்பு குறித்தும் 67 நிமிடங்கள் மற்றவர்களுக்கு இலவச பயிற்சிகளை அளித்தார்.

சர்வதேச அஞ்சலிகளில் கூகுள் நிறுவனம் பிரபலமான அதன் லோகோ [சின்னம்] வெளியீடு மூலம் மண்டேலாவை நினைவு கூர்ந்தது. அதுபோல் கிளாஸ்கோவில் நடந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி ஒன்றில் மண்டேலாவின் பேத்தி டுக்வினி மண்டேலா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

இதுதவிர பொதுமக்கள் சமூகரீதியாகத் தாங்கள் செய்யும் நல்ல செயல்களையும் இணையதளங்களில் குறிப்பிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர். அரசியல்வாதிகளும் ஊடக செய்திகளின் மூலம் தங்களின் சொந்த செல்வாக்கை உயர்த்திக்கொள்ள இத்தகைய நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.

உலகெங்கும் முதல் மண்டேலா தினம் அனுசரிப்பு 
 நன்றிகள்:
18 & 19 / 07/2014.

Thursday, 10 July 2014

கவிப்பேரரசுவிற்கு அன்னையின் தாலாட்டு!


விப்பேரரசு வைரமுத்து, ஜூலை 13-ல் மணிவிழாவைக் காணுகிறார். அவரை இலக்கிய உலகம் மகிழ்வாய் வாழ்த்தத் தொடங்கியிருக்கிறது. தமிழுலகமே வாழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், அவரை ஈன்றெடுத்த அன்னையின் வாழ்த்தை "இனிய உதயம்' பதிவுசெய்ய விரும்பியது.

பெரியகுளத்திலிருந்து மினி பேருந்தில் வடுகபட்டி நோக்கிப் புறப்பட்டோம்.

அங்கிருந்து ஐந்தாவது கிலோமீட்டரிலேயே அந்த ஊர் எதிர்கொண்டது. முல்லைப் பெரியாறு ஊரைத் தொட்டுக்கொண்டி ருப்பதால், ஊர் முழுக்க வாழையும், தென்னையும், நெல்லும் தழைத்து ஊரையே பசுமையாக்கியிருந்தது. 5.12 கிலோ சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த ஊர், 51 தெருக்களைக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் முழுக்க முழுக்க கிராம மயமாக இருந்த வடுகபட்டி, தற்போது நகரப் புனைவுகளோடு, இரண்டாம் நிலைப் பேரூராட்சியாகக் காட்சியளிக்கிறது.

எதிர்ப்பட்ட பெரியவரிடம், "கவிஞர் வீடு எங்கிருக்கு?'' என்றோம்.

குபீரெனப் புன்னகைத்தவர், "அதோ பகவதியம்மன் கோயில் இருக்குல்ல, அதுக்குப் பக்கத்தில் பெரிய மார்க்கெட் ரோடு போகும். அதிலேயே போங்க. ஒரு பள்ளிக்கூடம் வரும். அதுக்கு எதிர்ல, ஒயிட்டும் புளூவுமா ஒரு காரைவீடு இருக்கும். அதாந் தம்பீ கவிஞர் வூடு'' என்றார்.

அவர் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு, கவிஞர் வீட்டுமுன்  நின்றோம். வீட்டு முகப்பில் தென்பட்ட பக்கவாட்டு நடையில், கவிஞரின் அம்மா அங்கம்மாள் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். கம்பீரமான அவர் முகத்தில் மங்களகரமான அம்சம் இருந்தது.

அவருக்கு வணக்கம் சொன்னோம்.

நம்மை ஏறிட்டுப் பார்த்தவர், "வாப்பா, எந்த ஊரு'' என்றார்.

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். 
 

"பத்திரிகைக்காரத் தம்பியா. வாப்பா உள்ளே'' என்று வீட்டின் ஹாலுக்குள் அழைத்துச் சென்றார். சுவர் முழுக்க கவிஞரும் கவிஞரின் உறவுகளுமாய் புகைப்படங்களில் புன்னகைத்தனர்.

நாற்காலியில் நம்மை அமரச்சொன்ன அவர், "கொஞ்சம் இருப்பா'' என்றபடி உள்ளே சென்றார். வரும்போது தட்டில் நிறைய பலாச் சுளைகளோடு வந்தார்.
 

"தோட்டத்தில் பலாப்பழங்கள் நிறைய உதிர்ந்துபோச்சு. சாப்பிடுப்பா நல்லா இருக்கு'' என அன்பாக உபசரித்தார்.
 

"அம்மா உங்கள் மகன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மணிவிழா வருது. அவரைப் பற்றிய உங்கள் நினைவுகளை யும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்க'' என்றோம்.

"ஆம்புளைப் புள்ளை இல்லையேன்னு நானும் அவங்க அய்யாவும் கவலைப்பட்டுக்கிட்டிருந்தோம். அப்ப எங்க கவலையப்போக்க பொறந்ததுதான் வைரமுத்து. பொறந்தப்ப, கருகரு துருதுருன்னு என் மடியில் கிடந்த வைரமுத்துவுக்கு,  இப்ப 60 வயசான்னு ஆச்சரியமா இருக்குப்பா'' என்றவர் சுவர்களில் தொங்கிய படங்களை ஒருதரம் கூர்ந்து பார்த்து கண்கலங்கினார்.
 

"கஷ்டப்பட்ட குடும்பம். எங்க புள்ளைங்க எல்லாரையும் சிரமத்தில் வளர்த்தோம். வளர்ந்த பிள்ளைகள், ரொம்ப கருத்தா குடும்ப  வேலைகளையும் தோட்ட வேலைகளையும் பார்த்துக்கிட்டாங்க. அப்படிப்பட்ட என் பிள்ளைச்  செல்வங்கள்ல சிலரை இழந்துட்டேன். அதுபோல குடும்பத்துல உருத்தா இருந்த அவங்க அய்யாவும் ஒரு வருசத்துக்கு முன்னால போய்ச் சேர்ந்துட்டாக. வாழ்க்கையே வெறுமையா இருக்கு. இதுக்கு மத்தியில் எம்புள்ளை வைரமுத்து பேரோடும் புகழோடும் இருக்குறதுதான் இப்ப எனக்கு இருக்குற ஒரே ஆறுதல்'' என்றவர் கொஞ்ச நேரம் அமைதிகாத்தார்.

பின்னர் சுதாரித்துக்கொண்டு "முதல்ல மெட்டூர்ல இருந்தோம். அங்க நாப்பது அம்பது குடும்பம்தான் இருந்துது.

அங்க தோட்டம் துரவுன்னு நிம்மதியா இருந்தோம். வையை அணையக் கட்டுனப்ப, தண்ணியத் தேக்குறதுக்காக  பத்து பண்ணண்டு கிராமங்களைக்  காலி பண்ணச்சொல்லிட்டாக. அதுல எங்க மெட்டூரும் ஒண்ணு.

வைரமுத்து அந்த மெட்டூர்லதான் பொறந்துச்சு. நாங்க ஊரைக் காலி பண்ணும்போது வைரமுத்து சின்னப்புள்ள. என்ன பண்ணப்போறோம்.

எப்படி வாழப்போறோம்னு குழப்பத்துலயே இருந்தேன். அவங்க அய்யா ரொம்ப தைரிய மான ஆளு. அவக கொடுத்த தைரியத்துல பச்சப் புள்ளைகளோட ஊரைக் காலி பண்ணிப்புட்டுக் கிளம்புனேன். தோட்டம்தொறவு வூடுவாசல்ன்னு எல்லாத்தையும் வுட்டுப்புட்டு, முதல்ல தாமரைகுளத்துக்கு வந்தோம். அந்தவூரு கவர்மெண்ட் ஸ்கூல்லதான் வைரமுத்து ஒண்ணாம்ப்பு படிச்சிது. அப்புறம் ஒருவருசம் கழிச்சி வடுகபட்டிக்கு வந்தோம். அப்ப வூரு இப்படி இருக்காது. சரியான ரோடோ, கரண்ட்டோ இருக்காது. கிராமத்திலும் கிராமம். இங்கயும் குடிசை போட்டு தோட்டம் தொறவோட வாழ ஆரம்பிச்சோம். வைரமுத்து இரண்டுல இருந்து பத்து வரைக்கும் இங்கதான் படிச்சிது. சின்னப் புள்ளையா இருக்கும்போதே  புத்தகமும் கையுமாத்தானிருக்கும். மத்த பசங்க தோட்ட வேலை வயல்வேலை பாக்கும். ஆனா வைரமுத்து அப்படி எதுவும் செய்யாது. எப்பப் பாத்தாலும் படிப்பு படிப்புதான். வீட்டில் கரண்ட் இல்லை. அதனால் ராத்திரியில் அவங்க தாத்தா வூட்டுக்குப்போய்ப் படிச்சிட்டு வரும். வீட்டுக்கு வந்து தூங்கும்போதும் நெஞ்சுமேல் புத்தகம் கிடக்கும். பகல்ல வயல் வரப்புகள்ல நடந்துக்கிட்டே படிக்கும். அப்ப வயல்களுக்கு நடுவில் இருக்கும் வரப்புகள்ல, நெல்கதிர் உதிர்ந்து கொட்டியிருக்கும். வைரமுத்து அதைக்கூட கவனிக்காம, அதுமேல் நடந்துக்கிட்டே படிக்கும். எங்க வீட்டுப் பண்ணையாளுக, அவங்க அய்யாகிட்ட, "என்னங்கய்யா தம்பி இப்படி நெல்லுமணியைக் கூடப்  பாக்காம அதை மிதிச்சிக்கிட்டே படிச்சிக்கிட்டு இருக்கு புலவர் கணக்கான்னு' சொல்லுவாங்க. அவங்க சொன்ன மாதிரியே புலவராவே தம்பி ஆய்டிச்சி'' என்றார் பெருமிதச் சிரிப்போடு.


"எங்கூரு லைப்ரரியில்  ராசாவோ கீசாவோ, ஒரு தம்பி இருந்தாரு. அவர், வைரமுத்துக்கு ரொம்ப உபகாரமா இருந்தாரு. வைரமுத்து கேக்குற புத்தகத்தையெல்லாம் அவர் கொடுப்பாரு. அதை வாங்கிப் படிச்சிக்கிட்டே இருக்கும்.

எனக்கும் அவங்க அய்யாவுக்கும் சாமி பக்தி அதிகம். நாங்க கோயிலுக்குப் போகும்போது, நீயும் வாய்யான்னு கூப்புடுவோம். ஆனா வைரமுத்து வராது.  நீங்க போய்ட்டு வாங்கன்னு ஒதுங்கிக்கிடும். அதுக்கு சாமி பக்தியே கிடையாது. எப்படி அது இப்படி ஆச்சுன்னு தெரியலை.

ஒரு தடவை பணக்காரப் பசங்களோட பெரிய குளத்துக்குப் போய், "நாடோடி மன்னன்' படம் பார்த்துட்டு வந்துச்சு வைரமுத்து. வந்த பொறவு, படத்துல வரும் நாட்டு எம்.ஜி.ஆர். எப்படிப் பேசுவார். காட்டு எம்.ஜி.ஆர் எப்படிப் பேசுவார்ன்னு அப்படியெ எங்க முன்னாடிப் பேசிக்காட்டும்.

அதுபோல கலைஞர் வசனத்தை பேசிக்காட்டும். அவங்கய்யாவுக்கு அது பெருமையா இருக்கும். ஆனா அதை நேர்ல காட்டிக்கமாட்டாக.

ஊர்ல மரத்தடியில் உட்கார்ந்துக்கிட்டு என்னவோ எழுதிக்கிட்டே இருக்கும். ஊர்ப் பசங்க, அம்மா உங்க பையன் பாட்டுக் கட்டுதும்மாம்பாங்க. எனக்கு ஆச்சரியமா இருக்கும்.

எழுதப் படிக்கத் தெரியாத என் வயித்துல, பொறந்த புள்ள, இப்ப ஊரே பாராட்டுற அளவுக்கு இருக்குன்னா, இதைவிட என்ன வேணும் எனக்கு?

ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் மேல படிக்க மெட்ராசுக்குப் போறேன்னு வைரமுத்து சொல்லுச்சு. அம்மாம்பெரிய  பட்டணத்துல எப்படிய்யா தனியா இருப்பேன்னு கேட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. நான் நல்லா வருவேம்மான்னு சொல்லுச்சு. அவங்க மாமன் தயவாலே மெட்ராசுக்குப் படிக்கப் போச்சு. அப்பவே புஸ்தகமெல்லாம் போட்டுச்சு.

படிச்சு முடிச்ச 15 நாள்லயே வைரமுத்துக்கு  வேலை கிடைச்சிது. அதைக் கேட்டப்ப ரொம்ப சந்தோசப்பட்டோம். அவுக அய்யா ரொம்ப பெருமைப்பட்டாக.  ஊர்க்காரங்களை எல்லாம்  கூப்பிட்டு வைரமுத்துக்கு கவர்மெண்ட்ல பெரிய வேலை கிடைச்சிருக்கும்பாக. அப்புறம் வைரமுத்துக்கு பொண்ணு பாக்கலாம்னு நினைச்சப்ப, அது லவ்  கல்யாணம் பண்ணிக்கிச்சு. எங்ககிட்டக்கூட சொல்லலை. அவுக அய்யா தாண்டிக் குதிச்சாரு. வைரமுத்து பண்ணுனது சரியா தப்பான்னு அப்ப சொல்லத் தெரியாம தவிச்சிக்கிட்டிகிருந்தேன். அப்புறம் சமாதானமாயிட்டோம்.

பொன்மணி, எங்களுக்குப் பிடிச்ச மருமக. காரணம் என்னன்னா, எங்களைப்போலவே அதுக்கு பக்தி ஜாஸ்தி. அதனால எனக்கு அதை ரொம்பப் பிடிச்சிப்போச்சு. எம் புள்ளையைவிட அது எம்மேல காட்டுன பாசத்த நினைச்சா கண்ணுல தண்ணி ததும்புதுய்யா. எம்பேரப் புள்ளைகளும் தங்கக் கட்டிக.
ஏதாவது பாட்டுச்  சத்தம் கேட்டுச்சுன்னா,

பக்கத்துல இருக்கவக, ஏத்தா, இது யார் எழுதுன பாட்டு தெரியுமா? உம்புள்ளை எழுதின பாட்டும்பாங்க. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாததால, எம் புள்ளைகிட்ட ,

அது எழுதின  பாட்டையும் கவிதையையும் எனக்கு பாராட்டத் தெரியல.

ஆனாலும் வைரமுத்துன்னு அது பேரை மத்தவங்க சொல்லும் போதெல்லாம் எனக்கு சந்தோசம் தாங்கமுடியாது.

நான்  மெட்ராசுக்குப் போகும்போதெல்லாம், வீட்டுக்கு பலபேர் வருவாக. வைரமுத்து அம்மான்னு பிரமிப்பா பாத்து, எங்கிட்ட ஆசி வாங்குவாக. அப்ப பூரிச்சுப்போய் வாழ்த்துவேன். அடுத்த தடவை அவங்க பாக்கும்போது, அம்மா, போனமுறை உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கினேன். அதுக்குப் பொறவு இப்ப நல்லா இருக்கேம்பாக. கேக்க சந்தோசமா இருக்கும்.

அதேபோல வைரமுத்து அடிக்கடி வடுகபட்டிக்கு வரும். அப்ப நிறைய பேர் பாக்கவருவாக. ஆனா அது இங்க பெரும்பாலும் தனிமையா சிந்தனையிலே உக்கார்ந்திருக்கும். அப்ப அது என்னென்ன நினைக்குமோ  தெரியலை. நான் தூரத்தில் இருந்து பார்த்துக்கிட்டே இருப்பேன். கிட்டப்போய் என்னய்யான்னு கேட்டா, நீ சாப்பிட்டியா? நேரத்தோட  சாப்புடும் மான்னு, பேச்சை மாத்தும்.

மெட்ராசுல ஒரு விழா நடந்துச்சு. அப்ப அவுகய்யாவும் நானும் போயிருந்தோம். எப்பேர்ப்பட்ட  தலைவர் கலைஞரே வந்திருந்தாக. எம் புள்ளய அவுக பாராட்டுனதக் கேட்டப்ப, சந்தோசத்தில் திண்டாடிப் போய்ட்டேன்.

அதைவிட அவுக அய்யாவுக்கு பெரிய சந்தோசம்.

கடைசியா தேனீல ஒருவிழா நடந்துச்சு. அங்கவச்சி, அவுக அய்யாக்கிட்டயும் எங்கிட்டவும் சேர்ந்தா மாதிரி வைரமுத்து ஆசிர்வாதம் வாங்குச்சு.

அதான் அவங்க அய்யாவின் கடைசி ஆசிர்வாதம். உடம்பு சரியில்லாம இருந்த அவுங்க அய்யா, புள்ள முகத்தைப் பாக்கணும்ன்னு ஆசைப்பட்டாக. கடைசியா நினைவு தப்பிடிச்சி. வைரமுத்து வர்றதுக்குள்ளேயே போய்ட்டாக.'' என விழிகளைத் துடைத்துக் கொண்டவர், கமறிய தொண்டையைச் சரி செய்துகொண்டு "உசுருக்கு உசுறா வளர்க்கும் புள்ளைக, உசுர் போகும்போது பக்கத்துல இருக் கும்ங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்?'' என்றார். புத்தியை வலிக்க வைத்த கேள்வி இது.

திடீரென எழுந்தவர், "இருப்பா  காபித் தண்ணி எடுத்துட்டு வர்றேன்'' என அடுக் களைக்குப் போனார். அடுத்த கொஞ்ச நேரத்தில், முகத்தைக் கழுவிக்கொண்டு புன்னகையும் காபியுமாக வந்தார்.

வந்தவர், "வைரமுத்துவுக்கு 60 வயசுன்னு சொன்னப்ப ஆச்சரியமா இருந்துச்சு. கோயமுத்தூர்ல இந்த வருசம் கொண்டாடறாங்க. அடிக்கடி அந்தப் பரிசு வாங்கினேன்.

இந்தப் பரிசு வாங்கினேன்னு சொல்லும். அது என்ன பரிசுன்னு எனக்குத் தெரியாது. ஆனா எம் புள்ளை உலகை ஜெயிக்குதுன்னு மட்டும் புரிஞ்சி பெருமைப்பட்டுக்குவேன். திடீர்ன்னு போனைக் கொடுத்து, அவக பேசுறாக இவுக பேசுறாகன்னு அவவுக பேசும்போது வைரமுத்து போனை எங்கிட்டக் கொடுக்கும்.  அவுகளும் உருத்தாப்  பேசுவாக. நானும் அதானுன்னு தெரியாமலே பேசுவேன். அப்படி பேசுனதுல ரஜினிகிட்டயும் கலைஞர்கிட்டவும் பேசியிருக்கேன். சாதாரண பொம்பளைக்கு இந்தக் கொடுப்பினை கிடைக்குமா? வைரமுத்துவைப் பெத்ததால் எனக்கு இந்தக் கொடுப்பினை.  

எம் புள்ளை இன்னும் ஒசர ஒசரத்துக்குப்  போகணும். நீண்ட ஆயுளோட நிம்மதியா வாழணும். அதான் இந்த அம்மாவோட பொறந்தநாள்  வாழ்த்து'' என்றார் உற்சாகமாக.

கொஞ்சம்கூட கர்வம் இல்லாமல், வெள்ளந்தியாய்ப் பேசிய அந்த தாயிடமிருந்து மகிழ்வோடு விடைபெற்றோம்.


********

கவிப்பேரரசுவிற்கு அன்னையின் தாலாட்டு! 

நன்றி: இனிய உதயம் [ நக்கீரன் ] 


01.07.2014.

Wednesday, 4 June 2014

கருணாநிதி 91 !

 
 
                     தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இன்று [ஜூன் 3] பிறந்தநாள். தமிழின் போர்வாள், திராவிடர் தலைவர், முத்தமிழறிஞர்  இப்படிப் பல அடைமொழிகளால் வர்ணிக்கப்படும் கருணாநிதிக்கு இன்று பிறந்தநாள். இக்கால சூழ்நிலையில் கருணாநிதியை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள், எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
 
                    கடந்த ஆட்சிக் காலங்களில் பல்வேறு ஊழல்களுக்கு சொந்தக்காரர் இவர் என்று பலரும் கூறுகின்றனர். போர்க்காலத்திலும் இன்னபிற சந்தர்ப்பங்களிலும் மக்கள் முன் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றிய திறமைமிகு கலைஞர். உணவு மற்றும் வளிச் சீராக்கிகள் சகிதம் இவர் நடத்திய ஒரு நாள் போர்நிறுத்த நாடகம் தமிழர்களால் அவ்வளவு இலகுவில் மறக்கக் கூடியதல்ல. இன்னமும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இவரின் சாதனைகள் பற்றி மக்களே நன்கு அறிவர்.
 
                அரசியலில் தன் முழுக் குடும்பத்தையும் இறக்கி நன்கு ஆதாயம் தேடிக் கொண்டார். தவிர, இவரது குடும்பம் வியாபாரத்தில் கொழிக்கும் பல்வேறு நிறுவனங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐ.பி.எல் அணி, சன் தொலைகாட்சி  குழுமம், தினகரன் நாளிதழ் உள்ளிட்ட சில நாளிதழ்கள், குங்குமம் மற்றும் குமுதம் உள்ளிட்ட வார இதழ்கள், வானொலிகள் , கலைஞர் தொலைக்காட்சி  குழுமம், சன் டைரக்ட் செய்மதி தொலைக்காட்சி சேவை , ஸ்பைஸ் ஜெட் விமான சேவை , ரெட் ஜெயண்ட் மூவீஸ் , கிளவுட் நைன் மூவீஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் என்று நீளும் பட்டியலில் வந்தவை வராதவை எத்தனை எத்தனையோ?

                 எது எப்படி இருந்தாலும் சக மனிதர் என்ற அடிப்படையில் பிறந்த நாள் வாழ்த்தை பதிவு செய்வதில் தவறில்லை என எண்ணுகிறேன். கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு விகடன் இணையத்தளம் சிறப்பு புகைப்படத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதனை இங்கே காணலாம்: கருணாநிதி 91 சிறப்பு புகைப்படத் தொகுப்பு.