கவிப்பேரரசு வைரமுத்து, ஜூலை 13-ல் மணிவிழாவைக் காணுகிறார். அவரை இலக்கிய உலகம் மகிழ்வாய் வாழ்த்தத் தொடங்கியிருக்கிறது. தமிழுலகமே வாழ்த்திக்கொண்டிருக்கும் நிலையில், அவரை ஈன்றெடுத்த அன்னையின் வாழ்த்தை "இனிய உதயம்' பதிவுசெய்ய விரும்பியது.
பெரியகுளத்திலிருந்து மினி பேருந்தில் வடுகபட்டி நோக்கிப் புறப்பட்டோம்.
அங்கிருந்து ஐந்தாவது கிலோமீட்டரிலேயே அந்த ஊர் எதிர்கொண்டது. முல்லைப் பெரியாறு ஊரைத் தொட்டுக்கொண்டி ருப்பதால், ஊர் முழுக்க வாழையும், தென்னையும், நெல்லும் தழைத்து ஊரையே பசுமையாக்கியிருந்தது. 5.12 கிலோ சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த ஊர், 51 தெருக்களைக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் முழுக்க முழுக்க கிராம மயமாக இருந்த வடுகபட்டி, தற்போது நகரப் புனைவுகளோடு, இரண்டாம் நிலைப் பேரூராட்சியாகக் காட்சியளிக்கிறது.
எதிர்ப்பட்ட பெரியவரிடம், "கவிஞர் வீடு எங்கிருக்கு?'' என்றோம்.
குபீரெனப் புன்னகைத்தவர், "அதோ பகவதியம்மன் கோயில் இருக்குல்ல, அதுக்குப் பக்கத்தில் பெரிய மார்க்கெட் ரோடு போகும். அதிலேயே போங்க. ஒரு பள்ளிக்கூடம் வரும். அதுக்கு எதிர்ல, ஒயிட்டும் புளூவுமா ஒரு காரைவீடு இருக்கும். அதாந் தம்பீ கவிஞர் வூடு'' என்றார்.
அவர் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு, கவிஞர் வீட்டுமுன் நின்றோம். வீட்டு முகப்பில் தென்பட்ட பக்கவாட்டு நடையில், கவிஞரின் அம்மா அங்கம்மாள் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். கம்பீரமான அவர் முகத்தில் மங்களகரமான அம்சம் இருந்தது.
அவருக்கு வணக்கம் சொன்னோம்.
நம்மை ஏறிட்டுப் பார்த்தவர், "வாப்பா, எந்த ஊரு'' என்றார்.
நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம்.
"பத்திரிகைக்காரத் தம்பியா. வாப்பா உள்ளே'' என்று வீட்டின் ஹாலுக்குள் அழைத்துச் சென்றார். சுவர் முழுக்க கவிஞரும் கவிஞரின் உறவுகளுமாய் புகைப்படங்களில் புன்னகைத்தனர்.
நாற்காலியில் நம்மை அமரச்சொன்ன அவர், "கொஞ்சம் இருப்பா'' என்றபடி உள்ளே சென்றார். வரும்போது தட்டில் நிறைய பலாச் சுளைகளோடு வந்தார்.
"தோட்டத்தில் பலாப்பழங்கள் நிறைய உதிர்ந்துபோச்சு. சாப்பிடுப்பா நல்லா இருக்கு'' என அன்பாக உபசரித்தார்.
"அம்மா உங்கள் மகன் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மணிவிழா வருது. அவரைப் பற்றிய உங்கள் நினைவுகளை யும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்க'' என்றோம்.
"ஆம்புளைப் புள்ளை இல்லையேன்னு நானும் அவங்க அய்யாவும் கவலைப்பட்டுக்கிட்டிருந்தோம். அப்ப எங்க கவலையப்போக்க பொறந்ததுதான் வைரமுத்து. பொறந்தப்ப, கருகரு துருதுருன்னு என் மடியில் கிடந்த வைரமுத்துவுக்கு, இப்ப 60 வயசான்னு ஆச்சரியமா இருக்குப்பா'' என்றவர் சுவர்களில் தொங்கிய படங்களை ஒருதரம் கூர்ந்து பார்த்து கண்கலங்கினார்.
"கஷ்டப்பட்ட குடும்பம். எங்க புள்ளைங்க எல்லாரையும் சிரமத்தில் வளர்த்தோம். வளர்ந்த பிள்ளைகள், ரொம்ப கருத்தா குடும்ப வேலைகளையும் தோட்ட வேலைகளையும் பார்த்துக்கிட்டாங்க. அப்படிப்பட்ட என் பிள்ளைச் செல்வங்கள்ல சிலரை இழந்துட்டேன். அதுபோல குடும்பத்துல உருத்தா இருந்த அவங்க அய்யாவும் ஒரு வருசத்துக்கு முன்னால போய்ச் சேர்ந்துட்டாக. வாழ்க்கையே வெறுமையா இருக்கு. இதுக்கு மத்தியில் எம்புள்ளை வைரமுத்து பேரோடும் புகழோடும் இருக்குறதுதான் இப்ப எனக்கு இருக்குற ஒரே ஆறுதல்'' என்றவர் கொஞ்ச நேரம் அமைதிகாத்தார்.
பின்னர் சுதாரித்துக்கொண்டு "முதல்ல மெட்டூர்ல இருந்தோம். அங்க நாப்பது அம்பது குடும்பம்தான் இருந்துது.
அங்க தோட்டம் துரவுன்னு நிம்மதியா இருந்தோம். வையை அணையக் கட்டுனப்ப, தண்ணியத் தேக்குறதுக்காக பத்து பண்ணண்டு கிராமங்களைக் காலி பண்ணச்சொல்லிட்டாக. அதுல எங்க மெட்டூரும் ஒண்ணு.
வைரமுத்து அந்த மெட்டூர்லதான் பொறந்துச்சு. நாங்க ஊரைக் காலி பண்ணும்போது வைரமுத்து சின்னப்புள்ள. என்ன பண்ணப்போறோம்.
எப்படி வாழப்போறோம்னு குழப்பத்துலயே இருந்தேன். அவங்க அய்யா ரொம்ப தைரிய மான ஆளு. அவக கொடுத்த தைரியத்துல பச்சப் புள்ளைகளோட ஊரைக் காலி பண்ணிப்புட்டுக் கிளம்புனேன். தோட்டம்தொறவு வூடுவாசல்ன்னு எல்லாத்தையும் வுட்டுப்புட்டு, முதல்ல தாமரைகுளத்துக்கு வந்தோம். அந்தவூரு கவர்மெண்ட் ஸ்கூல்லதான் வைரமுத்து ஒண்ணாம்ப்பு படிச்சிது. அப்புறம் ஒருவருசம் கழிச்சி வடுகபட்டிக்கு வந்தோம். அப்ப வூரு இப்படி இருக்காது. சரியான ரோடோ, கரண்ட்டோ இருக்காது. கிராமத்திலும் கிராமம். இங்கயும் குடிசை போட்டு தோட்டம் தொறவோட வாழ ஆரம்பிச்சோம். வைரமுத்து இரண்டுல இருந்து பத்து வரைக்கும் இங்கதான் படிச்சிது. சின்னப் புள்ளையா இருக்கும்போதே புத்தகமும் கையுமாத்தானிருக்கும். மத்த பசங்க தோட்ட வேலை வயல்வேலை பாக்கும். ஆனா வைரமுத்து அப்படி எதுவும் செய்யாது. எப்பப் பாத்தாலும் படிப்பு படிப்புதான். வீட்டில் கரண்ட் இல்லை. அதனால் ராத்திரியில் அவங்க தாத்தா வூட்டுக்குப்போய்ப் படிச்சிட்டு வரும். வீட்டுக்கு வந்து தூங்கும்போதும் நெஞ்சுமேல் புத்தகம் கிடக்கும். பகல்ல வயல் வரப்புகள்ல நடந்துக்கிட்டே படிக்கும். அப்ப வயல்களுக்கு நடுவில் இருக்கும் வரப்புகள்ல, நெல்கதிர் உதிர்ந்து கொட்டியிருக்கும். வைரமுத்து அதைக்கூட கவனிக்காம, அதுமேல் நடந்துக்கிட்டே படிக்கும். எங்க வீட்டுப் பண்ணையாளுக, அவங்க அய்யாகிட்ட, "என்னங்கய்யா தம்பி இப்படி நெல்லுமணியைக் கூடப் பாக்காம அதை மிதிச்சிக்கிட்டே படிச்சிக்கிட்டு இருக்கு புலவர் கணக்கான்னு' சொல்லுவாங்க. அவங்க சொன்ன மாதிரியே புலவராவே தம்பி ஆய்டிச்சி'' என்றார் பெருமிதச் சிரிப்போடு.
"எங்கூரு லைப்ரரியில் ராசாவோ கீசாவோ, ஒரு தம்பி இருந்தாரு. அவர், வைரமுத்துக்கு ரொம்ப உபகாரமா இருந்தாரு. வைரமுத்து கேக்குற புத்தகத்தையெல்லாம் அவர் கொடுப்பாரு. அதை வாங்கிப் படிச்சிக்கிட்டே இருக்கும்.
எனக்கும் அவங்க அய்யாவுக்கும் சாமி பக்தி அதிகம். நாங்க கோயிலுக்குப் போகும்போது, நீயும் வாய்யான்னு கூப்புடுவோம். ஆனா வைரமுத்து வராது. நீங்க போய்ட்டு வாங்கன்னு ஒதுங்கிக்கிடும். அதுக்கு சாமி பக்தியே கிடையாது. எப்படி அது இப்படி ஆச்சுன்னு தெரியலை.
ஒரு தடவை பணக்காரப் பசங்களோட பெரிய குளத்துக்குப் போய், "நாடோடி மன்னன்' படம் பார்த்துட்டு வந்துச்சு வைரமுத்து. வந்த பொறவு, படத்துல வரும் நாட்டு எம்.ஜி.ஆர். எப்படிப் பேசுவார். காட்டு எம்.ஜி.ஆர் எப்படிப் பேசுவார்ன்னு அப்படியெ எங்க முன்னாடிப் பேசிக்காட்டும்.
அதுபோல கலைஞர் வசனத்தை பேசிக்காட்டும். அவங்கய்யாவுக்கு அது பெருமையா இருக்கும். ஆனா அதை நேர்ல காட்டிக்கமாட்டாக.
ஊர்ல மரத்தடியில் உட்கார்ந்துக்கிட்டு என்னவோ எழுதிக்கிட்டே இருக்கும். ஊர்ப் பசங்க, அம்மா உங்க பையன் பாட்டுக் கட்டுதும்மாம்பாங்க. எனக்கு ஆச்சரியமா இருக்கும்.
எழுதப் படிக்கத் தெரியாத என் வயித்துல, பொறந்த புள்ள, இப்ப ஊரே பாராட்டுற அளவுக்கு இருக்குன்னா, இதைவிட என்ன வேணும் எனக்கு?
ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் மேல படிக்க மெட்ராசுக்குப் போறேன்னு வைரமுத்து சொல்லுச்சு. அம்மாம்பெரிய பட்டணத்துல எப்படிய்யா தனியா இருப்பேன்னு கேட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. நான் நல்லா வருவேம்மான்னு சொல்லுச்சு. அவங்க மாமன் தயவாலே மெட்ராசுக்குப் படிக்கப் போச்சு. அப்பவே புஸ்தகமெல்லாம் போட்டுச்சு.
படிச்சு முடிச்ச 15 நாள்லயே வைரமுத்துக்கு வேலை கிடைச்சிது. அதைக் கேட்டப்ப ரொம்ப சந்தோசப்பட்டோம். அவுக அய்யா ரொம்ப பெருமைப்பட்டாக. ஊர்க்காரங்களை எல்லாம் கூப்பிட்டு வைரமுத்துக்கு கவர்மெண்ட்ல பெரிய வேலை கிடைச்சிருக்கும்பாக. அப்புறம் வைரமுத்துக்கு பொண்ணு பாக்கலாம்னு நினைச்சப்ப, அது லவ் கல்யாணம் பண்ணிக்கிச்சு. எங்ககிட்டக்கூட சொல்லலை. அவுக அய்யா தாண்டிக் குதிச்சாரு. வைரமுத்து பண்ணுனது சரியா தப்பான்னு அப்ப சொல்லத் தெரியாம தவிச்சிக்கிட்டிகிருந்தேன். அப்புறம் சமாதானமாயிட்டோம்.
பொன்மணி, எங்களுக்குப் பிடிச்ச மருமக. காரணம் என்னன்னா, எங்களைப்போலவே அதுக்கு பக்தி ஜாஸ்தி. அதனால எனக்கு அதை ரொம்பப் பிடிச்சிப்போச்சு. எம் புள்ளையைவிட அது எம்மேல காட்டுன பாசத்த நினைச்சா கண்ணுல தண்ணி ததும்புதுய்யா. எம்பேரப் புள்ளைகளும் தங்கக் கட்டிக.
ஏதாவது பாட்டுச் சத்தம் கேட்டுச்சுன்னா,
பக்கத்துல இருக்கவக, ஏத்தா, இது யார் எழுதுன பாட்டு தெரியுமா? உம்புள்ளை எழுதின பாட்டும்பாங்க. எனக்கு எழுதப் படிக்கத் தெரியாததால, எம் புள்ளைகிட்ட ,
அது எழுதின பாட்டையும் கவிதையையும் எனக்கு பாராட்டத் தெரியல.
ஆனாலும் வைரமுத்துன்னு அது பேரை மத்தவங்க சொல்லும் போதெல்லாம் எனக்கு சந்தோசம் தாங்கமுடியாது.
நான் மெட்ராசுக்குப் போகும்போதெல்லாம், வீட்டுக்கு பலபேர் வருவாக. வைரமுத்து அம்மான்னு பிரமிப்பா பாத்து, எங்கிட்ட ஆசி வாங்குவாக. அப்ப பூரிச்சுப்போய் வாழ்த்துவேன். அடுத்த தடவை அவங்க பாக்கும்போது, அம்மா, போனமுறை உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கினேன். அதுக்குப் பொறவு இப்ப நல்லா இருக்கேம்பாக. கேக்க சந்தோசமா இருக்கும்.
அதேபோல வைரமுத்து அடிக்கடி வடுகபட்டிக்கு வரும். அப்ப நிறைய பேர் பாக்கவருவாக. ஆனா அது இங்க பெரும்பாலும் தனிமையா சிந்தனையிலே உக்கார்ந்திருக்கும். அப்ப அது என்னென்ன நினைக்குமோ தெரியலை. நான் தூரத்தில் இருந்து பார்த்துக்கிட்டே இருப்பேன். கிட்டப்போய் என்னய்யான்னு கேட்டா, நீ சாப்பிட்டியா? நேரத்தோட சாப்புடும் மான்னு, பேச்சை மாத்தும்.
மெட்ராசுல ஒரு விழா நடந்துச்சு. அப்ப அவுகய்யாவும் நானும் போயிருந்தோம். எப்பேர்ப்பட்ட தலைவர் கலைஞரே வந்திருந்தாக. எம் புள்ளய அவுக பாராட்டுனதக் கேட்டப்ப, சந்தோசத்தில் திண்டாடிப் போய்ட்டேன்.
அதைவிட அவுக அய்யாவுக்கு பெரிய சந்தோசம்.
கடைசியா தேனீல ஒருவிழா நடந்துச்சு. அங்கவச்சி, அவுக அய்யாக்கிட்டயும் எங்கிட்டவும் சேர்ந்தா மாதிரி வைரமுத்து ஆசிர்வாதம் வாங்குச்சு.
அதான் அவங்க அய்யாவின் கடைசி ஆசிர்வாதம். உடம்பு சரியில்லாம இருந்த அவுங்க அய்யா, புள்ள முகத்தைப் பாக்கணும்ன்னு ஆசைப்பட்டாக. கடைசியா நினைவு தப்பிடிச்சி. வைரமுத்து வர்றதுக்குள்ளேயே போய்ட்டாக.'' என விழிகளைத் துடைத்துக் கொண்டவர், கமறிய தொண்டையைச் சரி செய்துகொண்டு "உசுருக்கு உசுறா வளர்க்கும் புள்ளைக, உசுர் போகும்போது பக்கத்துல இருக் கும்ங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்?'' என்றார். புத்தியை வலிக்க வைத்த கேள்வி இது.
திடீரென எழுந்தவர், "இருப்பா காபித் தண்ணி எடுத்துட்டு வர்றேன்'' என அடுக் களைக்குப் போனார். அடுத்த கொஞ்ச நேரத்தில், முகத்தைக் கழுவிக்கொண்டு புன்னகையும் காபியுமாக வந்தார்.
வந்தவர், "வைரமுத்துவுக்கு 60 வயசுன்னு சொன்னப்ப ஆச்சரியமா இருந்துச்சு. கோயமுத்தூர்ல இந்த வருசம் கொண்டாடறாங்க. அடிக்கடி அந்தப் பரிசு வாங்கினேன்.
இந்தப் பரிசு வாங்கினேன்னு சொல்லும். அது என்ன பரிசுன்னு எனக்குத் தெரியாது. ஆனா எம் புள்ளை உலகை ஜெயிக்குதுன்னு மட்டும் புரிஞ்சி பெருமைப்பட்டுக்குவேன். திடீர்ன்னு போனைக் கொடுத்து, அவக பேசுறாக இவுக பேசுறாகன்னு அவவுக பேசும்போது வைரமுத்து போனை எங்கிட்டக் கொடுக்கும். அவுகளும் உருத்தாப் பேசுவாக. நானும் அதானுன்னு தெரியாமலே பேசுவேன். அப்படி பேசுனதுல ரஜினிகிட்டயும் கலைஞர்கிட்டவும் பேசியிருக்கேன். சாதாரண பொம்பளைக்கு இந்தக் கொடுப்பினை கிடைக்குமா? வைரமுத்துவைப் பெத்ததால் எனக்கு இந்தக் கொடுப்பினை.
எம் புள்ளை இன்னும் ஒசர ஒசரத்துக்குப் போகணும். நீண்ட ஆயுளோட நிம்மதியா வாழணும். அதான் இந்த அம்மாவோட பொறந்தநாள் வாழ்த்து'' என்றார் உற்சாகமாக.
கொஞ்சம்கூட கர்வம் இல்லாமல், வெள்ளந்தியாய்ப் பேசிய அந்த தாயிடமிருந்து மகிழ்வோடு விடைபெற்றோம்.
********
கவிப்பேரரசுவிற்கு அன்னையின் தாலாட்டு!
நன்றி: இனிய உதயம் [ நக்கீரன் ]
01.07.2014.
சிறந்த பகிர்வு
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
மிக அருமையான தகவலை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-