பட்டப்பகலில் பாலியல் கொடூரம்: மலையகத்தை அதிரவைத்த டெல்வின் சம்பவம்!
அன்று 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை.
இறக்குவானை டெல்வின் பி பிரிவில் ஓர் ஏழைத் தாய் மகளைத் தேடிக்கொண்டிருந்தாள்.
அன்று முற்பகல் 11.30 மணியளவில் பக்கத்துத் தோட்டத்துக்குச் சென்ற மகளை
காணாத ஏக்கம் ஒருபுறம் என்ன நடந்திருக்குமோ என்ற பயம் ஒருபுறம் என அந்தத்
தாயின் மனது படபடத்தது.
நிமிட முள் தாண்டும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இடியாய் விழுந்தது அந்த ஒலி.
மணி பிற்பகல் 2 ஐ தாண்டியிருந்தது.
பித்துப்பிடித்தவளாய் தன்னிடம் மகள் ஓடிவருவதைக் கண்ட தாய் மேலும்
பதறிப்போனாள். கூந்தல் கலைந்து பதற்றமான முகத்துடன் கதறியழுதுகொண்டு மகள்
ஓடிவந்ததைப் பார்த்த தாயின் உள்ளம் மணலில் விழுந்த புழுவாய் துடித்தது.
ஏன் தாமதமாகினாய் என்ற கேள்விக்கு மகளிடமிருந்து கிடைத்த பதில் ஆயிரம்
அசுரபலமுள்ள யானைகள் இதயத்தில் மிதிப்பது போன்ற வலியை அந்தத் தாய்க்கு
உண்டாக்கியது.
ஆம்! அந்தச் சிறுமி மனித மிருகமொன்றின் காமப் பசிக்கு இறையாகியிருக்கின்றாள்.
டெல்வின் என்ற பெயரால் அழைக்கப்படும் சின்னத் தோட்டம் இரண்டு பிரிவுகளைக்
கொண்டது. டெல்வின் பி பிரிவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் வாசுகி
(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
பதினாறு வயதான வாசுகியின் தந்தை தோட்டத்தில் சில நாட்களும் ஏனைய நாட்களில்
இறக்குவானை சந்தையில் கூலித்தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
இல்லத்தரசியாய் குடும்பத்தை நிர்வகிக்கும் தாய், சில காலமாக தோட்டத்தில் வேலை செய்தவள்.
ஐந்து பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள்.
கடைக்குட்டிதான் வாசுகி. ஏழ்மை காரணமாக பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும்
குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவள்.
அன்று 20 ஆம் திகதி நரக வேதனையை அனுபவிக்கப் போவதை அறியாத வாசுகி டெல்வின் ஏ
பிரிவுக்கு தனது உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்புகையில் இந்த அவலம்
நடந்திருக்கிறது.
சஞ்சலமற்ற பிஞ்சுக் குழந்தைபோல நடந்து வந்த வாசுகியை துணியொன்றினால்
முகத்தை மூடி பாழடைந்த குடிலொன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளான் ஒரு காமுகன்.
அங்கு நேர்ந்த அவலத்தை தன் தாயிடம் சொல்ல முடியாமல் தவித்தாள் வாசுகி.
இச்சம்பவம் காட்டுத் தீ போல இறக்குவானை எங்கும் பரவியது. பாதிக்கப்பட்ட
சிறுமி இறக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக
இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
மலைக் குன்றுகள் சூழ எப்போதுமே மேகக் கூட்டம் நிறைந்து இயற்கை அன்னையின்
நெற்றித் திலகமோ என எண்ணத் தோன்றும் இறக்குவானை சோகத்தில் மூழ்கியது.
உடனடியாக பெற்றோர் இறக்குவானை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிஸார்
வாசுகியின் வீட்டுக்கு வருகை தந்து விசாரித் துள்ளனர். எனினும் அவர்கள்
சந்தேக நபரை கைது செய்யவில்லை.
சந்தேக நபர் அப்பகுதியில் சுதந்திரமாக நடமாடுவதைக் கண்ட பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.
இது தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்துக்கும் மாகாண சபை உறுப்பினர் கணபதி இராமச்சந்திரனுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் பொலிஸாரின் அசமந்தப் போக்கை கண்டித்தும் சந்தேக நபரை உடனடியாக
கைது செய்யக் கோரியும் 21 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு
செய்யப்பட்டது.
இறக்குவானையை அண்டிய தோட்டப்பகுதிகள் அனைத்தும் முடங்கின. தெனியாய,
பலாங்கொடை, இரத்தினபுரி தோட்டப்பகுதி மக்களும் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்டனர்.
சுமார் ஆயிரக்கணக்கானோர் இறக்குவானை நகரில் கூடி பொலிஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோருக்கு எதிராக பொலிஸார்
இரகசியமாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அங்கு தகவல் பரவியதால் மேலும் பதற்றம்
அதிகரித்தது.
பொலிஸார் பக்கசார்பாக நடந்துகொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.
சந்தேக நபரை 24 மணிநேரத்துக்குள் கைது செய்வதாக இறக்குவானை பொலிஸார் பொதுமக்களுக்கு உறுதியளித்தனர்.
சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரை கைது செய்யக்கோரி மலையகம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து மறுநாளும் இறக்குவானையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபர் சரணடைந்துள்ளதாகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும்
ஆர்ப்பாட்டத்துக்கு வருகை தந்த இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
ரஞ்சித் சொய்ஸா தெரிவித்தார்.
அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இத்தகவலை
நம்பமுடியாவிட்டால் தன்னுடன் குறுவிட்ட சிறைச்சாலைக்கு பத்துப்பேர்
வருமாறு ரஞ்சித் சொய்ஸா அழைப்பு விடுத்தார்.ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை
ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சந்தேக நபரான மொஹமட் அர்ஷாட் (27) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன.
துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை
வழங்குவதன் மூலமே இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
இறக்குவானை சம்பவத்தைப் பொறுத் தவரையில் பட்டப்பகலில் இந்தப் பாலியல் குற்றம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான குற்றச் செயல்களின் மூலம்
சிறுவர்களின் எதிர்காலமே பாதிப்படைகிறது.
இரும்புக் கரங்களுக்குள் அகப்பட்டுத் தவித்த சிறுமி வாசுகியின் தாயார் இது குறித்து கேசரி நாளிதழுக்கு இவ்வாறு தெரிவித்தார்.
"எனக்கு அஞ்சுப் பிள்ளைங்க. ஏ டிவிஷனுக்குப் போன பிள்ளை ரொம்ப நேரமா
வீட்டுக்கு வரல்லனு தேடிப்பார்த்தேன். இப்படியொரு கொடும நடக்கும்னு நான்
நெனச்சுப் பார்க்கல.
என் பிள்ளைய இரத்னபுர ஆஸ்பத்திரியில நிப்பாட்டுனாங்க. பொலிஸ் துரைமார்
ஏதேதோ சிங்களத்தில பேசிக்கிட்டாங்க. எனக்கு எதுவும் புரியல்ல. மகள் வயித்து
வலினு அழுதுகிட்டே இருந்தா.
ஆஸ்பத்திரி டொக்டர் என்ன கூப்பிட்டு, மகளுக்கு இப்போ நல்ல சுகம்.
வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போகலாம்னு சொல்லி மருந்து கொடுத்தாங்க. ஒவ்வொரு
நிமிஷமும் நாங்க செத்துத் துடிக்கிறோம்"
அந்தத் தாயின் வார்த்தைகளில் இதயத்தின் வலிகளை புரிந்துகொள்ள முடிந்தது.
இச்சம்பவத்தில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினமே பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் ஏன் சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை?
விசாரணைகளில் அசமந்தப் போக்கு கடைபிடிக்கப்பட்டதன் பின்னணி என்ன?
முற்றாக குணமடையாத நிலையில் அவசரமாக சிறுமியை இரத்தினபுரி வைத்தியசாலையிலிருந்து அழைத்து வரப்பட்டது ஏன்?
என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
எது எவ்வாறெனினும் முறையான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிக்கு அதிகபட்ச
தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
ஏழ்மை என்பதை காரணமாகக் கொண்டு பக்கசார்புடன் பொலிஸார் செயற்படுவார்களே
யானால் அது அரசாங்கத்துக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும் என்பதை உரிய
தரப்பினர் உணர வேண்டும்.
இளைஞர்களிடையே காணப்படும் பிற்போக்குடைய சிந்தனைகள் அவர்களுடைய நடத்தைகளை
மாற்றி விடுகின்றன. தங்களுடைய காமப்பசிக்கு பச்சிளம் குழந்தைகளையும்
சிறுமியரையும் இலக்காகக் கொள்ளுபவர்கள் பாதிக்கப்படுவோரின் எதிர்காலம்
குறித்து சிந்திப்பதில்லை.
இறக்குவானை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை
வழங்கப்படலாம். ஆனால் அந்த அப்பாவி சிறுமியின் எதிர்காலம் என்னாவது?
எத்தனையோ கனவுகள், இலட்சியங்களுடன் எதிர்காலத்தை எதிர்பார்ப்புடன்
பார்த்துக் காத்திருந்த சிறுமியின் மனநிலையை எவ்வாறு விபரிக்க முடியும்?
அந்தச் சிறுமி அனுபவித்த மரண வேதனையை யாருக்கும் சொல்ல முடியாமல் தவிக்கும் ரணங்களை பகிர்ந்துகொள்ளத்தான் இயலுமா?
உண்மையில் சமூக மாற்றத்துக்காக அனைவரும் இணைந்து பணியாற்றுவதனூடாகவே
காத்திரமான முன்னேற்றத்தை அடைய முடியும். ஆதலால் கீழ்த்தரமான சிந்தனைகளை
கைவிட்டு ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக பாடுபட வேண்டும்.
அதேபோல பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் அவர்கள்
பொலிஸாரையே நம்பியிருக்கிறார்கள். பொலிஸார் அசமந்தப் போக்குடன்
இருப்பார்களானால் தமது பிரச்சினைகளை யாரிடம் முறையிட முடியும்?
இந்தப் பிரச்சினையில் பொலிஸாரின் காலதாமதமான நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இனிமேலும் இவ்வாறான நிலை உருவாகாமல் இருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்த
வேண்டும்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் குற்றவாளியாக இனங்காணப்படுமிடத்து உச்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
எதிர்காலத்தில் வாசுகி போன்ற யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதை
உணர்த்துவதாக அத்தண்டனை அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக
இருக்கிறது.
செய்தி - நன்றி: வீரகேசரி.
2014.07.26
கொடுரவாதிகள்
ReplyDeleteதப்பிப்பதால் தான்
தொடருகிறது
இந்தத் தொல்லை!