Tuesday 17 June 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04

 
 

பகுதி - 03

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03 


பகுதி - 04


எல்லோரும் வாகனத்தில் ஏறிக் கொண்டிருக்க, நானும் ஏறத் தயாரான நேரம் எனது கைப் பேசிக்கு திவ்யாவின் இலக்கத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து வருடங்கள் இரண்டு ஆகிவிட்டாலும் கூட காதலிக்கும் போது பயன்படுத்திய அதே தொலைபேசி இலக்கங்களைத் தான் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் முதன் முதலில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்திய தினத்தன்று கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இலக்கங்களைக் கொண்ட புதிய தொலைபேசி இணைப்புகளை (SIM) இருவரும் பெற்றுக் கொண்டோம். இன்று வரைக்கும் - ஏழு வருடங்களாக அதைத் தான் பயன்படுத்தி வருகிறோம்.


திவ்யா கதவருகில் சாய்ந்து நின்றபடி என்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வீட்டுக்குப் போனதும் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்திப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட வேண்டும் என்ற முடிவுடன் தான் நான் வந்தேன். ஆனால் அவளிடமிருந்தே தகவல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான். ஆனால் உள்ளே  இருக்கும் செய்தி என்ன சொல்லும் என்று எண்ணிய போதே இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. 


"நான் உங்களோடு கொஞ்சம் முக்கியமாகப் பேச வேண்டும். நாளை நமது வழமையான இடத்தில் சந்திப்போம்."




குறுஞ்செய்தியைப் படித்ததும் திவ்யா ஒரு முடிவோடு தான் பேச அழைத்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். வாகனத்தில் எல்லோரும் ஏறிவிட்டார்கள். அப்போது "ஜெய்... வரலையா..?" என்ற அப்பாவின் குரல் என்னை இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தது.

"வாறேம்ப்பா...." என்றபடி முன் ஆசனத்தில் ஏறி அமர்ந்தேன். வாகனம் எங்கள் இல்லம் நோக்கி விரைந்தது. அந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததில் இருந்து மனதில் சிந்தனையின் அழுத்தம் அதிகரித்தது.

நாங்கள் வீட்டை வந்தடைந்த போது நேரம் மாலை ஐந்து மணியாகியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக எனது அறைக்குள் சென்று ஆருயிர்த் தோழன் சுசிக்கு அழைப்பை ஏற்படுத்தினேன்.

"ஹ... ஹலோ சு.. சுசி..."
"ஜே.கே? என்னடா பதட்டமா இருக்க?"
"ஆமாண்டா. பதட்டம் தான். என்ன செய்றதுனே தெரியலடா..."
"ஏன்? போன இடத்துல ஏதும் பிரச்சினையா?"
"பிரச்சினை ஒன்னும் இல்ல... ஆனா.."
"ஆனா....?"
"சரி, அத விடு... இப்ப நீ எங்க இருக்க?"
"இப்பதான் வேலை முடிஞ்சு வெளில வந்துட்டிருந்தேன். நீ எடுத்துட்ட..."
"எங்க வீட்டுக்குக் கொஞ்சம் வர முடியுமா?"
"சரிடா... நா வர்றேன்."

சரியாக ஆறு மணிக்கு சுசி வீட்டுக்கு வந்து விட்டான். என் பெற்றோருடன் உரையாடியபின் என் அறைக்குள் வந்தவனை நேராக மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றேன்.

ஐந்து நிமிடங்கள் வரை இருவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. சுசிதான் முதலில் பேசத் தொடங்கினான்.

"பொண்ணு மூக்கும் முழியுமா லட்சணமா இருக்காமே? அம்மா சொன்னாங்க."
"..................."
"ஏன்டா உனக்குப் பிடிக்கலையா?"
"விஷயமே வேற சுசி..."
"என்ன? பொண்ண விட பொண்ணுத் தோழியத்தான் புடிச்சிருக்கோ? அம்மாவும் சொன்னங்க, பொண்ணுத் தோழியா வந்தவ கொஞ்சம் நல்லாத்தான் இருந்தான்னு..."
"ஆமா சுசி. திவ்யாவ எனக்கு எப்படிடா புடிக்காமப் போகும்?"
"என்னடா சொல்ற?"
"ஆமாண்டா... என் திவ்யா தான் பொண்ணுத் தோழி."
**********
"கல்யாண வைபோகம்" தொடரினை "சிகரம்" வலைத்தளத்தில் தொடர...

பகுதி - 01

பகுதி - 02

"கல்யாண வைபோகத்தினை" இனிதே நடத்திட கைகோர்த்திடுங்கள் .

-இரு வீட்டார் அழைப்பு-

No comments:

Post a Comment