Thursday, 19 June 2014

தமிழ்நாட்டில் தோல்வி பெரிய விஷயமில்லை!

மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்ஷே வருகை, வைகோ போராட்டம், ஸ்மிருதி இரானி கல்வித் தகுதிப் பிரச்னை, ஜெயலலிதா-மோடி சந்திப்பு என்று தொடக்கத்திலேயே பா.ஜ.க. ஆட்சி பரபரப்புகளைக் கிளப்பியிருக்கும் நேரத்தில், பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் பேசினேன்.


''உங்கள் கூட்டணிக்குள் ஒருவருக்கு ஒருவர் உள்ளடி வேலை பார்த்ததால்தான், ரெண்டு சீட்டுகளுக்கு மேல் வெல்ல முடியாமல் தோற்றதாகச் சொல்லப்படுகிறதே?''
''கேரளாவில்கூடத்தான் நாங்கள் ஒரு இடமும் ஜெயிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் கோலோச்சும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான தேசியக் கட்சி நாங்கள்தான் என்று நிரூபித்திருக்கிறோம். எனவே தமிழ்நாட்டில் தோல்வி அடைந்ததை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அதே நேரம் தொடர்ச்சியான செயல்பாடுகளால் எங்கள் அமைப்பை வலுவாக்குவதுதான் எங்கள் அடுத்த இலக்கு.  மற்றபடி உள்ளடி வேலையெல்லாம் நடக்கவில்லை.''

''ஜெ - மோடி சந்திப்பு, எதிர்காலத்தில் பா.ஜ.க. - அ.தி.மு.க கூட்டணிக்கு வித்திடுமா?''
''இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. பிரதமர் புதிதாகப் பதவியேற்றால், மாநில முதல்வர்கள் அவரை சந்திப்பது முறையான ஒன்றுதான். அந்த வகையிலேயே அவர் சென்றார். அவர் பிரதமரைப் போலவே, நிதி அமைச்சரையும் சந்தித்துள்ளார். பிரதமரும் மாநில முதல்வராக இருந்தவர் என்பதால், முதல்வராக இருந்து மத்திய அரசின் உதவிகளைப் பெறுவது எவ்வளவு சிரமம் என்று அறிவார்.''

''உங்கள் கூட்டணியைச் சேர்ந்த வைகோவே, உங்கள் ஆட்சிக்கெதிரான முதல் போராட்டத்தை நடத்தினாரே?''
''அவரின் போராட்டம் ராஜபக்ஷேவின் வருகையைக் கண்டித்துதானே தவிர, மோடி அரசை எதிர்த்து அல்ல. எங்கள் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் முதலில் வந்தவர் வைகோதான். எங்களின் வெற்றிக்காக பம்பரமாக உழைத்தவர். அவரின் ஆசைப்படி மோடி அவர்கள் பிரதமராகி அந்தப் பதவியேற்பு விழாவில் அவர் பங்கெடுக்க முடியாமல்போன அரசியல் சூழலை நினைத்து வருந்துகிறேன்.''

''தமிழ் மக்களின் மனநிலைக்கு விரோதமாக ராஜபக்ஷேவைப் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்தது சரியா?''
''அது ஒரு தனிப்பட்ட அழைப்பு அல்ல.  சார்க் கூட்டமைப்பில் அவரும் ஓர் அங்கம் என்பதால் அழைக்க வேண்டியதாகிவிட்டது. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் ஏதும் நடைபெறவில்லை. அதிகாரிகள் மட்டத்திலான சந்திப்புகள் ஏதும் நடக்கவில்லை. முந்தைய அரசைப்போல் மோடி அரசு தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காது.''

''ஈழப் பிரச்னையில் உங்களின் உறுதியான நிலைப்பாடுதான் என்ன?''
''இந்திய வெளியுறவுக் கொள்கையின்படி, இலங்கை பிரிவது இந்தியாவிற்கு நல்லது அல்ல. அதையே நாங்களும் பிரதிபலிக்கிறோம். தற்போது அங்கு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொடர்ந்து தமிழர்கள் இன்னலுக்குள்ளானால், பிரிவதைத் தவிர வேறு வழியே இல்லையென்றால், அது குறித்தும் விவாதித்து முடிவெடுப்போம்.''

''முல்லை பெரியாறு பிரச்னையில் கேரள அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல்செய்ய வேண்டும் என்று கேரள பா.ஜ.க அறிக்கை வெளியிட்டுள்ளதே?''
''நதி நீர் தாவாக்களைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் அந்தந்த மாநில மக்களின் கருத்துகளைத்தான் பிரதிபலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, இதற்கு ஒரே தீர்வு நதிநீர் இணைப்பு. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கரச்சாலைத் திட்டம் இன்று இந்தியாவைத் தாங்கி நிற்பதுபோல், மோடி ஆட்சியில் நதி நீர் திட்டம் செயல்படுத்தப்படும்.''

''அன்புமணிக்குப் பதவி கொடுக்காமல் விட்டுவிட்டீர்களே?''
''யார் யாருக்கு என்ன பதவி கொடுப்பது, அதை எப்போது கொடுப்பது என்று மிகச் சிறந்த நிர்வாகியான மோடி அவர்களுக்குத் தெரியும். துரதிருஷ்டமான வகையில் மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுக்கு அதிக எண்ணிக்கை பெற முடியாமல் போய்விட்டது.''

''மோடி பிரதமராகிவிட்டார். இன்னும் சுப்ரமண்ய சுவாமி தமிழக அரசைக் கலைக்க வேண்டும் என்று அதிரடியாகக் கருத்துக்களைச் சொல்லிவருகிறாரே?''
''அவரின் சொந்தக் கருத்துகளை ட்விட்டரில் சொல்கிறார். அதில் நான் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை!''  
- செந்தில்குமார், படங்கள் : ஆ.முத்துக்குமார்

நன்றி: ஆனந்த விகடன்.

No comments:

Post a Comment