Friday, 13 June 2014

கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03

 
 

பகுதி - 03

 
 
"வாங்க....வாங்க...." என்று வரவேற்றார் பெண்ணின் தந்தை.

வீட்டு முற்றத்தில் கோலம் இடப்பட்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் ரசிக்கத் தூண்டும் வகையில் இருந்தது அந்த வண்ணக் கோலம். வீட்டு வாசலில் கரும்பு மற்றும் தென்னங் குருத்தினால் அமைக்கப் பட்ட எளிமையான தோரணம் காற்றில் அசைந்தாடிய படி வரவேற்றது. வீட்டைச் சுற்றிலும் பல்வேறு பூச்செடிகளும் ஓரிரு மரங்களும் மனதுக்கு இதத்தையும் வீட்டுக்கு அழகையும் கொடுத்தன.

வீட்டின் வரவேற்பறையில் பெரிய பாய் ஒன்று இடப் பட்டிருந்தது. பாயின் நடுவில்  ஏற்றப்பட்ட குத்துவிளக்கு ஒன்று வைக்கப் பட்டிருந்தது. கொண்டு வந்த பொருட்களை வரிசைப் படி அடுக்கி வைத்து விட்டு முன் வரிசையில் என்னையும் குடும்பத்தினரையும் அமர வைத்து, சூழ இரு வீட்டாரும் அமர்ந்து கொண்டனர்.

இரு தரப்பினரும் ஏதேதோ பேசிக் கொண்டனர். எதுவுமே என் காதில் விழவேயில்லை. மனம் வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து பெண் பார்க்கும் நேரமும் வந்தது. இந்த சம்பிரதாயம் தேவை தானா என்று கேட்டது என் மனம். பெற்றோரின் திருப்திக்காகவே இந்தத் திருமணம் என்பதால் எப்படியும் 'சம்மதம்' என்று சொல்லத்தானே போகிறோம்? பிறகெதற்கு இதெல்லாம் என்றது என் மனது. ஆனால் வெளிப்படையாக எதையும் நான் கூறத் தலைப்படவில்லை.
 
 
பெண்ணின் பெயர் நந்தினி. வயது 25. பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகத் தொழில் புரிகிறாள். அதிகம் பேசாத அடக்கமான பெண். இது தான் மணமகளைப் பற்றி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சுய விபரக் கோவை.
மணப் பெண் வரவேற்பறைக்குள் வந்த அந்த நிமிடம் என் மனம் அதிர்ச்சியில் உறைந்து போனது.
"திவ்யா.... நீ எப்படி இங்கே......?"
 எனக்குள் நானே கேட்டுக் கொண்டேன். என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.
"என் காதலி திவ்யா இங்கு எப்படி? அதுவும் மணப் பெண் தோழியாக? நந்தினி என்ற பெயரில் தோழிகள் யாரும் அவளுக்கு இல்லையே..........?". மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். ஆனால் பதிலை எங்கே போய் தேடுவேன்?
 
கண்ணீர் கண்களை முட்டிக் கொண்டு வர எத்தனித்துக் கொண்டிருந்தது. மிகச் சரியாக திவ்யாவை பார்த்து, பேசி இன்றோடு இரண்டு வருடங்கள். வன வாசம் முடிந்து வந்திருக்கிறாளா? என்னால் சபையில் எதையும் வாய்விட்டு கூறவோ கேட்கவோ இயலாத தர்ம சங்கடமான சூழலில் மாட்டிக் கொண்டு தவித்தேன்.
 
என் மனம் இப்படிப் பலவாறான சிந்தனைகளினால் துடித்துக் கொண்டிருக்க, திவ்யா என்னைக் கண்டதும் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். அப்பா என் தோளைத் தொட்டு "ஜெய்.... பொண்ணப் புடிச்சிருக்காப்பா?" என்று கேட்ட போது தான் இயல்பு நிலைக்கு வந்தேன். திவ்யாவை மீண்டும் காணாது போயிருந்தால் நிச்சயம் சம்மதம் சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது எப்படி? செய்வதறியாத சூழ்நிலையில் ஒருவித தயக்கத்துடன் "கொஞ்சம் யோசிக்கணும்ப்பா...." என்றேன். "சரி" என்றவர் அவ்வாறே பேசி நிகழ்வை நிறைவுக்குக் கொண்டு வந்தார்.
 
வெளியே செல்லும்போது எல்லோருக்கும் பின்தங்கி மெதுவாக நடந்தபடி திவ்யாவை திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நடந்தேன். உள் அறையில் இருந்து வரவேற்பறைக்குள் வரும் கதவில் சாய்ந்து நின்றபடி கலங்கிய கண்களுடன் என்னையே திவ்யா பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஒரு முடிவுக்கு வந்தவனாய் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.


 
 
**********
"கல்யாண வைபோகம்" தொடரினை "சிகரம்" வலைத்தளத்தில் தொடர...

பகுதி - 01

பகுதி - 02

"கல்யாண வைபோகத்தினை" இனிதே நடத்திட கைகோர்த்திடுங்கள் .

-இரு வீட்டார் அழைப்பு- 

3 comments:

  1. வணக்கம்

    மிக அருமையாக உள்ளது தொடர் அடுத்த தொடருக்காக காத்திருக்கேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி. உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் காத்திருக்கிறேன்.

      Delete
  2. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete