Wednesday, 6 August 2014

மலையக வரலாற்றை வலிமையுடன் பதிவு செய்த சாரல் நாடன் மறைவு!

அறுபதுகளில் தான் மலையகத்தில் இருந்து புறப்பட்ட படைப்பாளர்கள் வீரியத் துடன் பல படைப்புகளை தமிழ் இலக்கியத்துக்குத் தந்தார்கள். இதற்கு முன்னரும் நடேசய்யர், வீரசேகரி வாஸ் போன்றோர் எழுதினாலும், நடப்பு பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு சமூகத் துக்காக மண் வாசனையுடன் எழுதும் பாணி அறுபதுகளிலேயே மலையகத்துக்கு கை வந்தது.

 

அனேகமாக எண்பதுகளில் மற்றொரு துறையிலும் மலையக படைப்பாளர்கள் கால் பதிக்க ஆரம்பித்தார்கள் அது, ஆய் வுத்துறை. ஆய்விலக்கியம், தெளி வத்தை ஜோசப்பும் புனைவை கை விட்டு ஆய்வுத் துறையில் இறங்கி னார். இத்துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர் என்றால் அவர் காலஞ்சென்ற சாரல் நாடனாகவே இருக்க வேண்டும்.

மலையகம் தொடர்பில் தமிழ கத்தில் நடைபெற்ற ஒரு இலக்கிய கருத்தரங்கில் உரையாற்றிய மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் எச. போத்திரெட்டி இது பற்றி குறிப்பிடுகையில்
மலையக இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் காலக்கணக்கெடுப்பு நடத்தினால் அதை மூன்றாக பிரிக்க வேண்டியிருக்கும் 1930களுக்கு பிற்பட்ட காலத்தை நடேசய்யர் யுகம் என்றும், 1950 களின் பின்னர் சி.வி. வேலுப்பிள்ளை யுகம் என்றும் 1980களுக்கு பிற்பட்ட காலப்பகுதியை சாரல் நாடன் யுகம் என்றும் பிரித்து பார்க்க வேண்டியிருக்கும் என்று போத்திரெட்டி சரியாகவே சொன்னார்.

கண்டியில் நடைபெற்ற இலக்கிய விழாவின் போது மலையக இலக்கிய வரலாறு என்பது பற்றி சாரல் நாடன் ஒரு உரை நிகழ்த்தினார். இதன் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளராக இருந்த கலாநிதி க. அருணாசலம் சாரல் நாடனின் இலக்கிய ஆளுமையையும் ஆற்றலையும் பெரிதும் பாராட்டி கருத்துரையும் வழங்கினார்.
இது சாரலின் ஆளுமை வெளிப்பாட்டுக்கு ஒரு உதாரணம்.

பேராசிரியர் கா. சிவத்தம்பியும் “இலங்கை மலையக தமிழ் இலக்கிய வரலாற்றினை விளங்கவும் எழுதவும் முற்படுகின்ற எவரும் சாரல் நாடனை அறியாது இருக்க முடியாது. அவரது நூல்கள் இலங்கையின் மலையகப் பிரதேசத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை பற்றிய தரவுகள் நுணுக்கமாக தொகுத்து எழுதப்பட்டவையாக உள்ளன. மலையகம் வளர்த்த தமிழ் என்ற கட்டுரைத் தொகுதி மூலமாக இந்த இலக்கிய வரலாற்றுக்கான ஓர் அடிப்படை ஆவ ணத்தை தந்துள்ளார். “ஈழத்து இலக்கிய வரலாற்றின்” மூல நாயகர்களுள் ஒருவர் சாரல் நாடன்” என பேரா சிரியர் குறிப்பிடுகின்றார்.

இத்தகைய ஆற்றலும் ஆளுமையும் வாய்ந்த எழுத்தாளரும், ஆய்வாளருமான சாரல் நாடன் கடந்த வியாழனன்று (31.07.2014) காலையில் தன் எழுபதாம் அகவையில் எம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.

சாமிமலை சிங்காரவத்தையில் மதுரை மேலூரை சேர்ந்த கருப்பையா, வீரம்மா தம்பதியினர்க்கு 09.05.1944ல் மகனாக பிறந்த நல்லையா, இலக்கிய உலகில் பிரபல்யம் பெற்றார். இவருடன் பிறந்த ஐவருமே சகோதரிகள். இவரது ஆரம்பக் கல்வி சாமிமலை மின்னா தோட்டப் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை ஹட்டன் ஹைலட்ண்ஸ் கல்லூரியிலும் பயின்றார்.

அதன் பின்னர் கண்டி அசோகா கல்லூரி விடு தியில் பணிபுரிந்து விட்டு, சாமிமலை குயில்வத் தையில் தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியா கவும் பின்னர் புசல்லாவை நியூபிக்கொக், கொட்டகலை டிரெய்டன், பத்தனை தெளிவத்தை ஆகிய தோட் டங்களில் முப்பத்தைந்து ஆண்டுகள் தலைமை தேயிலைத் தொழிற்சாலை அதிகாரி யாக கடமையாற்றி 2000ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தில் இவரிடம் காணப்படும் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்தவர்கள் என இர. சிவலிங்கம் திருச்செந்தூரன் மற்றும் பீ. ஏ. செபஸ்டியன் ஆகிய மூன்று ஆசிரியர்களையும் சாரல் நாடன் குறிப்பிட்டுள்ளார்.


அறுபதுகளில் மலையக இலக்கிய உலகில் மண் வாசனையுடன் ஓர் ஆத்திரப் பரம்பரை தலை தூக்கியது. எழுத்திலும், பேச்சிலும், கவிதையிலும் சீற்றம் மிகுந்த இளந்தலைமுறையினரின் துடிப்பும், விழிப்பும் மலையகத்தை இனங்காட்டியது. சி.வி. வேலுப்பிள்ளை இதனை உற்சாகத்தோடு வரவேற்றார். இதன் வளர்ச்சியை விரும்பினார். இக் கால இலக்கிய கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டார்.

அறுபதுகளில் தோன்றிய ஆத்திரப் பரம்பரை யின் முன்னணி வரிசையில் இடம் பெற்றவர்களில் சாரல் நாடனும் ஒருவர். மலையகத்தில் மணிக் கொடி என்றழைக்கப்பட்ட ‘மலைமுரசு’ சஞ்சிகையில் இந்த புதியவர்களின் எழுத்துக்கள் இடம்பெற்றன. பின்னர் தினகரன் ஆசிரியராக பேராசிரியர் கைலா சபதி பொறுப்பேற்றவுடன் தேசிய உணர்வுடன் மண்வாசனை மிக்க படைப்புகளுக்கு களம் அமைத் தார். வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற தரமான படைப்புகளை அரங்கேற்றம் செய்தார். மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளையை எழுதத்தூண் டினார். அவரின் நடைச்சித்திரங்கள் இடம் பெற்றன. அவரைத் தொடர்ந்து என். எஸ். எம். ராமையா, சாரல் நாடன் ஆகிய இருவரும் தமது ஆக்க இலக்கியப் படைப்புகளான சிறுகதைகளை எழுதினார்கள்.

சாரல் நாடன் எழுதிய ‘எவளோ ஒருத்தி’ என்ற சிறுகதையைப் பிரசுரித்த பேராசிரியர் கைலாசபதி அவரது ஆற்றலை இனங்கண்டு தொடர்ந்து எழுதும்படி கைப்படவே கடிதம் எழுதினார். என். எஸ். இராமையாவும், சாரல் நாடனும் மலையக இலக்கியத்தின் நம்பிக்கைகள் என்று சிவியிடம் கூறியுள்ளார்.

அறுபதுகளில் தன்னிடமிருந்து பீறிட்டுக்கிளம்பிய ஆர்வத்தை அணைபோட முடியாமல் டாக்டர் நந்தி ரசிகமணி கனக செந்திநாதன் போன்றோர் பாராட் டும் அளவிற்கு படைப்புக்களை தந்த சாரல்நாடன் பின்னர் எழுபதுகளில் வனவாசம் பூண்டார். ஒரு தசாப்த காலம் எதையும் எழுதாமல் ஒதுங்கியிருந்த சாரல் நாடன், இப்படி ஒதுங்கியிருப்பது எத்தனை இழப்பு என்பதை எடுத்துரைத்து மீண்டும் அவரை இலக்கிய உலகில் ஈடுபட வைத்தது மலையக கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பாகும்.

மீண்டும் எழுத்துலகில் தடம் பதித்த சாரல்நாடன் எண்பதுகளில் பழைய வேகத்துடன் எழுதத் தொடங்கினார். மலையக மக்களின் நேசிப்புக்கும், விருப்புக்கும் உரியவரான மனித நேயமிக்க மலையக மக்கள் கவிமணி சி.வி.யின் பன்முக ஆற்றலை இன்றைய தலைமுறை அறியும் வண்ணம் “சி.வி, சில சிந்தனைகள்” என்ற படைப்பைத் தந்தார்.

மலையக எழுத்தாளர்கள் யாரும் ஆர்வம் காட்டாத ஆய்வுத்துறைகளில் அக்கறை காட்டினார். ஆய்வுக் கட்டுரை எழுதுபவர்கள் அடுத்தவர்களின் கட்டு ரைகளில் குறிப்புகளை சேர்த்து ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதுவதை அறவே வெறுத்தார்.

தகவல்கள் சரியானவையா, ஆதாரங்கள் உண்மையானவையா என்பதை தேடிப் படித்து விளக்கம் பெற விரும்பினர். தேனீக்கள் பறந்து, பறந்து பூக்களில் மகரந்தத்தை சேர்ப்பது போல, நூல் நிலையங்களை தேடிப் போனார். கொழும்பு தேசிய சுவடிக் கூடம், நூதனசாலை நூலகம், கண்டி சத்தி யோதய நூலகம், பிரிட்டிஸ் கவுன்சில் நூலகம், இந்திய தூதரக நூலகம், கொழும்பு தமிழ்ச் சங்க நூலகம், லேக்ஹவுஸ் நூலகம், பல்கலைக்கழக நூலகம் போன்றவற்றில் இருந்து அரிய நூல்களைத் தேடிப்படித்தார். தேசிய சுவடிக் கூடத்தில் பழம் பத்திரிகைகளையும் ஹன்சார்ட் போன்றவற்றையும் நுணுகி ஆராய்ந்தார். அவரின் தேடலின் அறுவடை தான் “தேசபக்தன் கோ. நடேசய்யர், பத்திரிகை யாளர் நடேசய்யர் என்ற மலையகத்தின் மாமனி தரின் செயற்பாடுகளைப் பற்றிய நூல்கள். இந்த இரண்டு நூல்களும் அரச சாஹித்திய விருதினை வென்றன.

எழுத்தாரும் ஆய்வாளருமான சாரல் நாடனின் பத்துக்கு மேற்பட்ட படைப்புகள் நு¡லக அச்சில் வெளிவந்துள்ளன மலையக இலக்கியம் பற்றியும் மலையக தமிழர் வரலாறு மலையக வளர்த்த தமிழ் உள்ளிட்ட  நு¡ல்கள்  மிக முக்கியமானவை அண்மையில் குமரன் பதிப்பகம்’ வெளியிட்டுள்ள “இலங்கை மலையகத்தமிழ் இலக்கிய முயற்சிகள்” மிக முக்கி யமான நூல். 


மலையகத்தில் முதல் கவிதாயினி.“மீனாட்சி அம்மாள் நடேசய்யர்” பற்றி அவர் எழுதிய வரலாற்றுக்கட்டுரை, மற்றும் அவருடைய அச்சில் வெளிவந்த கட்டுரைகளை நூலாக வெளிவரச் செய்வோமானால் அதுவே, மலையக இலக்கியத்தில் விடிவெள்ளியாக திகழ்ந்த சாரல் நாடனுக்கு நாம் செலுத்தும் நன்றி கடனாக அமையும். மலையக இலக்கியத்துறையில் விசுவரூப தரிசனம் தந்த சாரல் நாடனின் இழப்பு மிகப் பெரிய இழப்பாகும்.
மலையகத்தின் இலக்கிய முன்னோடி சாரல் நாடன் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்
மலையக இலக்கியத்தின் முன்னோடியும் எழுத்தாளருமான கலாபூஷணம் சாரல் நாடன் (சி. நல்லையா) மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரின் மறைவு தமிழ் இலக்கியத்துறைக்கு மாத்திரமல்ல நாட்டின் ஒட்டுமொத்த இலக்கியத்துறையிலும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 நாட்டின் ஒட்டுமொத்த இலக்கியத்துறையின் முன்னேற்றத்திற்கு மலையக இலக்கியத்துறையும் பாரிய பங்களிப்பை செய்துள்ளது. இதில் காலஞ்சென்ற சாரல் நாடனின் கணிசமான பங்களிப்பு இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

1960ஆம் ஆண்டு முதல் சாரல் நாடன் மலையக தமிழ் இலக்கியத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வந்தார். அவர் இலக்கியத்துறையின் வளர்ச்சிக்காக ஆற்றிய சேவைகள் மெச்சப்பட வேண்டியது மட்டுமல்லாமல் அவை உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
அவை எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதேவேளை இலங்கை அரசாங்கம் அவரது இலக்கிய சேவையைப் பாராட்டி கலாபூஷணம் விருது வழங்கி கெளரவித்தது.
அதேபோல் இந்தியாவின் ஆக்ராவில் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற சார்க் இலக்கிய விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் கலந்து கொண்டு நாட்டுக்கும் தமிழ் இலக்கியத்துறைக்கும் பெருமை சேர்த்தார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அந்தனி ஜீவா...-

நன்றி:
தினகரன்.
2014.07.27
இணைப்பு: சாரல்நாடன்  


பி.பி.சி கட்டுரை: மறைந்த மலையக எழுத்தாளர் சாரல் நாடனின் பன்முகத்தன்மை






மறைந்த மலையக எழுத்தாளர் சாரல்நாடன் ஐயா அவர்களுக்கு எமது மனமார்ந்த கண்ணீர் அஞ்சலிகள்.

-சிகரம்-

No comments:

Post a Comment