Saturday 5 July 2014

நான் பூத்துக் குலுங்க காரணமானவர்கள் - நா.முத்துக்‌குமார் உடன் ஒரு நேர்முகம்!


கார்காலக் கவிதைகளை எழுதிக் கொண்டிருந்த இலக்கிய இளைஞர் நா. முத்துக்குமார், திரைப்பாடல்களை எழுதத் தொடங்கியது எதிர்பாரா ஒரு இனிப்பு விபத்து. பலருக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழும் கவிஞர் அறிவுமதியின் பரந்த தோளில் இவருக்கு இடம் கிடைத்தது. செந்தமிழன் சீமானால், திரைப்படப் பாடலாசிரியர் என்ற மகுடமும் இவருக்கு சூட்டப் பட்டது. பச்சையப்பன் கல்லூரித் தமிழ்க்காற்றும் செழித்த தமிழ்ப்படைப்புகளும் இவரது விலாப்புறங்களில் வண்ணச்சிறகுகளை வளர்த்தன. திரைவானை ஆனந்தமாய் அளக்கத்தொடங்கிய முத்துக்குமார், இதயம்தொடும் இலக்கியப் பாடல்களால் தனக் கொரு சிம்மாசனத்தை கண்ணதாசன், வாலி, வைரமுத்து வரிசையில் சிருஷ்டித்துக்கொண்டார். இவரது உயிரோட்டமான திரைப்பாடல்கள், இன்று இவரது மார்பில் தேசிய விருதை கம்பீரமாகக் குத்தி யிருக்கிறது.

முத்துக்குமார் எழுதிய 16 நூல்களில் 8 கவிதை நூல்கள், பிற கட்டுரை, கதை, மொழிபெயர்ப்பு வகையைச் சேர்ந்தவை. பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் சிங்கப்பூரிலும் முத்துக்குமாரின் நூல்கள் பாடமாக வைக்கப்பட்டிருப்பது உபரி சிறப்பாகும். ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இந்தி, தெலுங்கு, மலையாளம் என இவரது கவிதைகள் பிறமொழிகளிலும் பெயர்க்கப் பட்டு, நாடு, இனம் போன்ற எல்லைகளைத் தாண்டி வலம் வருகின்றன. புகழின் சிகரங்களிலும் தன்னடக்கம் காத்துவரும் நா. முத்துக்குமாரை "இனிய உதய'த்திற்காக சந்தித்தபோது...

உங்களை வார்த்தெடுத்த கிராமத்தைப் பற்றி சொல்லுங்கள்?


சின்னகாஞ்சிபுரம் அருகே இருக்கும் கன்னிகாபுரம்தான் என் தாய்மண். பெரும்பாலும் நெசவுக் குடும்பங்களைக் கொண்ட கிராமம். அங்கே இரண்டே இரண்டுபேர் மட்டும்தான் அரசு வேலையில் இருந்தனர். ஒருவர், என் அப்பா நாகராஜன். தமிழாசிரியர். இன்னொருவர் காவல்துறையில் இருந்தார். சுற்றிலும் பச்சைப்பசேல் வயல்வெளி களால் முற்றுகையிடப்பட்ட அழகிய அந்தக் கிராமத்தில், தெருவெங்கினும் பட்டு நூல் பாவு போட்டி ருப்பார்கள். பிள்ளைகளின் குதூகலமான விளையாட்டுகளால் கிராமம்  நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட எங்கள் கிராமம், இப்போது ரியல் எஸ்டேட் கற்கள் ஊன்றப்பட்டு, புதுப்புது நகர்களாக மாறிக்கொண்டிருக்கிறது. எங்கள் பாலாறு, நீரின்றி பாழாறாக நிறம் மாறிக் காட்சிதருகிறது. எனினும் எங்கள் கிராமத்தவர்களின் உதடுகளில் இருக்கும் அந்த வெள்ளந்திச் சிரிப்பு மட்டும் இன்னும் உதிரவில்லை. தண்ணீர் கேட்டால் மோர் கொடுக்கும் அவர்களின் உபசரிப்புக் குணமும் இன்னும் காலாவதியாகவில்லை.

உங்கள் இளமைக்காலம் பற்றி?


என் நான்கு வயதிலேயே என் அம்மா இறந்து விட்டார். அதனால் என்னைத் தனிமை தத்தெடுத்துக் கொண்டது. அப்பா வாங்கிக்குவித்திருக்கும் நூல்கள், என் தனிமைக்குத் தோழமையாக இருந்தது.

சென்னை வாழ்க்கைக்காக உங்கள் கிராமத்து சந்தோஷங்களில் எதை எதை இழந்திருக்கிறீர்கள்?

இது தொடர்பாக "கிராமம்-நகரம்-மாநகரம்' என்ற புத்தகத்தை நான் எழுதியிருக்கிறேன். எங்கள் கிராமத்தில் இருக்கும் எல்லா வீட்டுக் கதவுகளும் எப்போதும் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் எந்த வீட்டிற்குள்ளும் சமையலறைவரை  சென்று சாப்பாடுபோட்டுச் சாப்பிடலாம். ஆனால் சென்னை அபார்ட்மெண்டுகளிலோ பகலிலிலேயே எல்லாக் கதவுகளும் பூட்டிக்கிடக்கின்றன. கதவில் பொருத்திய லென்ஸ் வழியாக வந்திருப்பவர்களை பெரிதுபடுத்திப் பார்த்துவிட்டுக் கதவைத் திறக்கிறார்கள். அவ்வப்போது மாநகரச் சாலைகளில் பூந்தொட்டிகளுடன் கடந்துபோகும் மாட்டு வண்டிகள்தான் நகர்ப்புற நெருக்கடியில் கிடைக்கும் ஒரே ஆறுதல்.  சென்னையின் குறைகளை மட்டும் நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அதற்கென்று சில நிறைகளும் உண்டு. அது குறித்து "மெரினா' படத்தில் "வணக்கம் வாழவைக்கும் சென்னை' என்ற பாடலையும் எழுதியிருக்கிறேன். நகர வாழ்க்கைக் காக கிராமத்து சந்தோஷங்கள் பலவற்றை இழந்தது உண்மைதான்.

பாடலாசிரியராய் ஆவீர்கள் என்றோ, தேசிய விருதெல்லாம் வாங்குவீர்கள் என்றோ மாணவப் பருவத்தில் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?


இல்லை.

உங்கள் விருப்பப்படி உங்களை செதுக்கியவர் உங்கள் அப்பா. நீங்கள் தேசியவிருது பெறும் இந்த நேரத்தில் அவர் இல்லாததை எப்படி உணர்கிறீர்கள்?


தேசியவிருது அறிவிப்பு வந்தபோது, என் மனக்கண்ணில் இரண்டுபேர் வந்தார்கள். ஒருவர் என் தந்தை நாகராஜன். இன்னொருவர் என் ஞானத்தந்தை பாலுமகேந்திரா. என்னை உச்சிமுகர்ந்து வாழ்த்த அவர்கள் இல்லையே என்று பரிதவித்தேன்.

உங்களின் இன்றைய வளர்ச்சிக்கு உரமிட்டவர்கள் யார் யார்?


நான் சுயம்பு இல்லை. என்னை வளர்த்தவர்கள் நிறைய பேர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் காஞ்சி இலக்கிய வட்ட நாராயணன், கவிஞர் அறிவுமதி அண்ணன், "வீரநடை' படத்தின் மூலம் என்னைப் பாடலாசிரியராய் ஆக்கிய இயக்குநர் சீமான் அண்ணன், இயக்குநர் அருண்மொழி, பாலுமகேந்திரா, பட்டுக்கோட்டை பிரபாகர், பத்திரிகைத் துறையில் நக்கீரன் கோபாலண்ணன், பெ. கருணாகரன், என் முதல் பாட்டுக்கு இசையமைத்த தேனிசைத் தென்றல் தேவா, இன்றுவரை என்னைத் தொடர்ந்து பாடல் எழுதவைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா மற்றும் அனைத்து இயக்குநர்கள், இசையமைப் பாளர்கள், ரசிகர்கள் என்று இத்தனை பேரும் சேர்ந்துதான் என்னைப் பூத்துக் குலுங்க வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அதிக சந்தோஷம் என்றாலோ அதிக துக்கம் என்றாலோ அதை எப்படி எதிர்கொள்வீர்கள்?


இரண்டிலுமே நான் அழுதுவிடுவேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் என்னை சராசரியாய்த் தயாரித்துக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவேன்.

நீங்கள் கைதவறவிட்ட உறவுகள், நட்புகள் பற்றி?


மரணம், சில உறவுகளையும் நட்பையும் களவாடியிருக்கிறது. மற்றபடி தொடர்பு எல்லைக்கு வெளியே முகவரி தெரிந்தும் முகவரி தெரியாமலும் நிறைய நண்பர்களைக் கைதவறவிட்டிருக்கிறேன்.

உங்களால் மறக்கமுடியாத ரசிகர்- ரசிகை பற்றி?


உலகெங்கும் நிறைய ரசிகர்களைத் தேடிக் கொடுத்திருக்கிறது என் தமிழ். சென்னை பாண்டிபஜாரில் இருக்கும் ஒரு அசைவ உணவகம். சாப்பிட்டுவிட்டு நான் வெளியே வந்தபோது ஒருவர் ஓடிவந்து கைகுலுக் கினார். பின் சற்றும் எதிர் பாராதபடி என் கன்னத்தில் முத்தமிட்டு "இது ஆனந்த யாழுக்காக' என்று சொல்லிவிட்டு தன் பெயரைக்கூட சொல்லாமல் போய்விட்டார். இது தேசிய விருதுக்கு முன்பாக எனக்குக் கிடைத்த அன்பு விருது. இதேபோல் ஆப்பிரிக்க நாட்டின் பின்சீனியா நகரிலிருந்து நள்ளிரவில் வந்தது அந்தப் பெண் குரல். "நான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்தேன். அப்போது "பேசுகிறேன். பேசுகிறேன். உன் இதயம் பேசுகிறேன்' என்ற உங்கள் பாடலைக் கேட்டேன். எனக்கு வாழும் ஆசை வந்துவிட்டது. நன்றி' என்றார். அவரும் தன் பெயரைச் சொல்லாமலே போனை வைத்து விட்டார்.

உங்கள் கிராமத்துக் கேரக்டர்களில் உங்கள் நினைவில் அடிக்கடி வந்து போகும் கேரக்டர் எது?


பச்சையப்பன் என்கிற கேரக்டரை என்னால் மறக்கமுடியாது. தேநீர்க்கடை வைத்திருந்தார். கோடை என்றால் பனை ஏறி நுங்குக் கடையும் போடுவார். பார்வைக்கு நடிகர் செந்திலைப் போலவே தோற்றமளிப்பார். சுற்றுப்பட்டு கிராமத் தெருக்கூத்துகளில் அவர்தான் கட்டியக்காரர். எனக்கு சினிமா ஆசை வந்ததற்கு இவரும் ஒரு காரணமாக இருக்கலாம்.

உங்கள் பாடல்களில் உங்களுக்கு அதிகம் பிடித்த பாடல்கள் என்றால் எதையெதைச் சொல்வீர்கள்?


எல்லாப் பாடல்களும் என் மனக்கிளையில் மலர்ந்த பூக்கள்தான். எனினும் "7ஜி ரயில்வே காலனி'யின் "கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை', "டும்டும்டும்' படத்தின் "ரகசியமாய்... ரகசியமாய்', "நந்தா' படத்தின் "ஓராயிரம் யானை கொன்றால் பரணி', "காதல்' பட "உனக் கென இருப்பேன்', "வெயில்' பட "வெயிலோடு விளையாடி', கஜினியில் "சுட்டும் விழிச் சுடரே... சுட்டும் விழிச்சுடரே', "மதராசப் பட்டணம்' படத்தில் "பூக்கள் பூக்கும் தருணம்', "பையா' படத்தின் "என் காதல் சொல்ல நேரமில்லை', "சத்தம் போடாதே' பட "பேசுகிறேன் பேசுகிறேன்', தங்கமீன்கள் பட "ஆனந்த யாழை மீட்டுகிறாய்' தற்போது "சைவம்' படத்தின் உன்னிகிருஷ் ணன் மகள் பாடிய "அழகே அழகே' என ஒரு பட்டி யலே போடலாம்.

உங்கள் திரைப்பாடல்களுக்கு பலம் சேர்ப்பது மரபுப் பயிற்சியா? இல்லை புதுக்கவிதை முயற்சியா?


வார்த்தைகளுக்கு மரபுப்பயிற்சியும் வாழ்க்கை அனுபவத்திற்கு புதுக்கவிதை முயற்சியும் பலம் சேர்ப்பதாகக் கருதுகிறேன்.

விடலைப்பருவத்தில் உங்கள் மனதில் கல்லெறிந்த தேவதை பற்றி சொல்ல முடியுமா?


முதல் காதல் என்பது புத்தகத்திற்குள் ஒளித்து வைக்கும் மயிலிறகு மாதிரி. எந்தக் காலத்திலும் அது குட்டிபோடாது என்று தெரிந்தும், ஞாபக உணவை அதற்கு ஊட்டிக்கொண்டுதான் இருக் கிறார்கள். என் பால்யகால சகியை நினைக்கும் போதெல்லாம், தெருவடைத்த மார்கழி வாசல் கோலங்களும், மஞ்சள் நிறத்துப் பூசணிப்பூக்களும்தான் மனதில் வந்துவிட்டுப் போகின்றன.

நல்ல வரிகளை எழுதி, அதை இயக்குநரோ, இசையமைப்பாளரோ மாற்றச் சொன்ன சங்கட விபத்துக்களை நீங்கள் சந்தித்தது உண்டா?

பாடலாசிரியன் என்பவன் இசையமைப்பாளரின் இசைக்குறிப்பை சிதைக்காமல், வார்த்தைகளைத் தைக்கிறவன்- இதை நான் சொல்லவில்லை. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதையில் இளங்கோவடிகள் சொல்கிறார். எந்த நல்லவரியும் மெட்டுக்குள் அடங்கியிருந்தால் மாற்றச் சொல்ல மாட்டார்கள். எனவே இப்படிப்பட்ட சங்கட விபத்துக்கள் எனக்கு நேர்ந்ததில்லை.

நீங்கள் வெகுநாட்க ளாக எழுத நினைக்கிற படைப்பு எது?


காஞ்சிபுரத்தைக் களமாகக்கொண்டு ஒரு நாவலை 15 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். கதையோட்டம் என்னை இழுத்துச் சென்றபடியே இருக்கிறது. நல்ல காற்று வீசுகிறபோது அது மழையாகப் பெய்யும்.

உங்கள் மனதில் இடம்பிடித்த இலக்கியப் படைப்புகள் எவை?


புதுமைப்பித்தனில் தொடங்கி, ஜி. நாகராஜன், சுந்தரராமசாமி, லா.ச.ரா, அசோகமித்திரன், தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, வண்ணநிலவன், கண்ணதாசன் என்று நகர்ந்து இப்போது எழுதும் லட்சுமி சரவணகுமார் என சொல்லிக்கொண்டே போகலாம். தமிழுக்கு நிகராக ஆங்கிலத்திலும் வாசிப்பவன் நான். எதைச் சொல்வது? எதை விடுவது?

நீங்கள் யாரைக்கண்டு பொறாமைப் படுகிறீர்கள்?


கவலைகளே இல்லாமல் எப்போதும் கடவுளைப்போலவே காட்சி தரும் குழந்தைகளைக் கண்டு!

உங்கள் இல்லத்துணைவி பற்றி?


என் மனைவி ஜீவலட்சுமி, என்னோடு இலக்கியங்களையும் என் பாடல்களையும் விமர்சித்து ரசிப்பவர். கண்ணதாசன் வரிகளில் சொல்வதானால் "என் தேவையை யார் அறிவார்? அவளைப் போன்ற தெய்வம் ஒன்றே அறியும்' என்று பாடலாம்.

உங்கள் செல்ல மகன்?

மகன் ஆதவன் நாகராஜுக்கு இப்போது ஏழு வயதாகிறது. மகன் பிறந்த பிறகுதான், என்மீது என் தந்தை வைத்திருந்த பாசத்தை முழுதாக உணர்கிறேன். என் மகனே நாளை உனக்கொரு மகன் பிறந்த பிறகு, என் அன்பை நீ உணர்வாய்.

நீங்கள் ஆத்திகவாதியா? நாத்திகவாதியா?


என் அப்பாவைப்போலவே நானும் நாத்திகவாதி.

தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நம்புகிறீர்களா?


கண்டிப்பாக. தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல; தமிழ்ச் சமூகமும் கவிஞர் களை நன்றாகவே கௌரவப்படுத்துகிறது. அதனால்தான் சென்னை மெரினாவில் கவிஞர்களின் சிலைகள் அதிகமாக இருக்கின்றன.

இலக்கிய ஆளுமைகளான வைரமுத்து, மேத்தா, ரகுமான், தமிழன்பன் போன்றோர் பற்றி உங்கள் எண்ணம் என்ன?


வைரமுத்து புதுக்கவிதையின் கம்பீரம்! மேத்தா, வானம்பாடிகளின் வானம்! அப்துல்ரகுமான், கஜல் கவிதைகளின் கனிமரம். ஈரோடு தமிழன்பன் படிமங்களின் பாசறை இப்படி ஒவ்வொருவரைப் பற்றியும் நிறைய சொல்லலாம்.

உலகின் உச்சபோதை எது?


நம் முப்பாட்டன் வள்ளுவனே இந்தக் கேள்விக்குத் தெள்ளத்தெளிவாய் பதில் சொல்கிறான். உலகின் உச்ச போதை காதலா? காமமா? பணமா? புகழா, மதுவா? இவை எதுவுமே இல்லை.

"தம் மக்கள் மொழி கேட்டல்...'

வங்கிக் கணக்கிற்காக வாழ்கிற வாழ்க்கையில், இதயத்திற்காக செலவிட நேரம் இருக்கிறதா?


நான் இதயத்துடிப்புகளையே வங்கிக் கணக்காக எண்ணி வரவு வைக்கிறவன்.

"ஆனந்த யாழை மீட்டுகிறாய் "பாடலுக்கு தேசிய விருதை எதிர்பார்த்தீர்களா?


எல்லாப் பாடல்களுமே மக்களிடம் அங்கீகாரம் பெறவே எழுதப்படுகின்றன. அந்தவகையில் இந்தப் பாடல், மக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. அதேசமயம் நான் எதிர்பார்க்காத நிலையிலும், தந்தை- மகள் உறவு பற்றி இந்த உயிரோட்டமான பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்வை ஏற்படுத்துகிறது. இந்த விருதை என் தமிழ்ச்சமூகத்திற்கு நெகிழ்ச்சியோடு சமர்ப்பிக்கிறேன்.

"தங்க மீன்கள்' இயக்குநர் ராம் பற்றி?


ராம், என் கல்லூரிக்கால நண்பன். என்னைவிட என் கவிதைகளை ஆசை தீர ரசிப்பவன். "கற்றது தமிழ்', "தங்கமீன்கள்' படங்களை அவன் உருவாக்கிய ஒவ்வொரு நொடியிலும் நான் அவனோடு இருந் திருக்கிறேன். அவன் இன்னும் நிறைய உயரங்களைத் தொடுவான்.

இன்னொன்றையும் நான் இங்கே சொல்லியாகவேண்டும். "ஆனந்தயாழை' பாடல் வெளி வந்தபோது என்னைத் தொடர்புகொண்ட நக்கீரன்கோபாலண்ணன், எங்க பாப்பா சொல்லிதான் உங்க "ஆனந்த யாழை' பாடலைக் கேட்டேன். இதுக்கு தேசிய விருது கிடைக்கும் தம்பி என்றார். அவர் சொன்னது பலித்துவிட்டது. அதேபோல் இன்னொன்றயும் பகிர விரும்புகிறேன். 94-ல் கோபாலண்ணன் நடத்திய "சிறுகதைக் கதிர்' இதழில் 94-ல் வேலைக்கு சேர்ந்தேன். நான் சந்தித்து அறிமுகப்படுத்திக்கொண்ட முதல் நாள், தம்பி என்று என்னை மீண்டும் அழைத்தார். என் பையில் ஆயிரம் ரூபாயைத் திணித்து, "இது உங்கள் வேலைக்கான அட்வான்ஸ் இல்லை. அண்ணனின் அன்புத் தொகை' என்றார். நெகிழ்ந்து நின்றேன். இப்படிப்பட்ட அவரது உன்னத குணங்கள்தான் அவரை உயரத்திலேயே வைத்திருக்கிறது.


நன்றி: நக்கீரன் 
01.05.2014

2 comments:

  1. //கவலைகளே இல்லாமல் எப்போதும் கடவுளைப்போலவே காட்சி//
    //என் அப்பாவைப்போலவே நானும் நாத்திகவாதி.//
    குழப்பமாக இருக்கிறது.
    எனினும் நான் விரும்பும் கவிஞர். அதிலும் "காவிரியாறும் கைக்குத்தரிசியும்" என்றும்
    என் விருப்பம்- அந்த கைக்குத்தரிசி எனும் சொல்லை இலக்கியமாக்கியதற்கு என் தலை என்றும் அவருக்குச் சாயும்.

    ReplyDelete
  2. சுவையான தகவல்
    சிறந்த பகிர்வு

    ReplyDelete