Thursday 6 October 2016

தோட்டத் தொழிலாளர்களும் சம்பள விவகாரமும்

மலையகம். இலங்கையின் வஞ்சிக்கப்பட்ட மக்கள் வாழும் பூமி. தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கே போராட்டம் நடத்த வேண்டிய நிலை. இலங்கையில் மலையகத் தமிழர் , ஈழத் தமிழர் என இரு பிரிவினர் உள்ளனர். ஈழம் கடல்சார் உற்பத்திகள், தென்னை மற்றும் பனை போன்ற உற்பத்திகளுடன் விவசாயத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளது. மலையகம் தேயிலை மற்றும் மரக்கறி உற்பத்திகளில் சிறந்து விளங்குகின்றது. 200 ஆண்டுகளாய் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் மலையகத்தின் தேயிலைத்துறையினூடாக பங்களிப்புச் செய்து வந்திருக்கின்றனர் இம்மலையக மக்கள்.

மலையகத்தின் பிரதான விளைபொருள் தேயிலை ஆகும். இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய மலையகத் தேயிலைத் தோட்டங்களை இலங்கை  சனநாயக சோசலிசக் குடியரசு தனியாருக்கு குத்தகை என்னும் பெயரில் தாரை வார்த்தது. இதனால் மலையக மக்களுக்கு பல்வேறு உரிமைகள் பறிபோயின. முக்கியமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் இலங்கை அரசினாலோ அல்லது வேறு எவரினாலுமோ தலையிட முடியாதுள்ளது. காரணம் கூட்டொப்பந்தம் ஒன்றின் மூலமே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப் படுகிறது.

தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மூன்று தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையில் இரண்டு வருட காலப் பகுதிக்கான சம்பளம் கூட்டொப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கப் படுகிறது.

தோட்டத் தொழிலாளர்கள் அண்மைக்காலமாக தமது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்தும்படி கோரி வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். ஆனால் முதலாளிமார் சம்மேளனம் அதற்கு ஒப்புக்கொள்ள மறுப்புத் தெரிவித்து வருகிறது. இதனால் போராட்டம் தொடர்ந்தவண்ணமுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்பே அதாவது கடந்த கூட்டொப்பந்த சம்பள அதிகரிப்பின் போதே இந்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரப்பட்டது. ஆனால் அப்போது ரூ 620 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. 

இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் வெறும் 110 ரூபாவே இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருட காலப்பகுதியில் வாழ்க்கைச் செலவு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் 17 % த்தால் மட்டுமே சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மலையகக் கட்சிகளின் கூட்டணி இன்று (2016.10.06) அறிவித்த போராட்டத்தை கைவிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 730 ரூபா நாட்சம்பளம் இன்றைய சூழலுக்குப் போதுமானதா? 30 நாட்களும் தொழில் புரிந்தாலே 21,900 ரூபா மட்டுமே கிடைக்கும். மேலும் எல்லா நாட்களும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படப் போவதில்லை. கொழுந்தின் அளவு மற்றும் வரவு ஆகியன இந்த 730 ரூபாவில் தாக்கம் செலுத்தும். ஆகவே மீண்டும் மிகக் குறைந்த வேதனம் ஒன்றையே மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளப் போகின்றனர். மலையக மக்கள் சிந்தித்துச் செயல் பட வேண்டிய நேரம் இது. சிந்திப்பீர்களா?   

2 comments: